மேகங்களின் குரல் 2

மேகங்களின் குரல் 2

 

மாயத்தராசு.

 

இன்றைக்கு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது. நான் ஹரித்துவரில் இருந்த காலம். என்னை அப்போது ஒரு துறவி என்று பிறர் நம்பினார்கள், நானும் அதை நம்பியிருந்தேன். ஆனால் ஆழ்ந்த உளச்சோர்வுநிலை என்று நான் இப்போது புரிந்து கொள்கிறேன்.  எதையும் கவனிக்காமல் எனக்குள்ளேயே சுழன்று கொண்டிருந்தது மனம். முற்றிலும் செயலற்று நாட்கணக்கில் அப்படியே இருந்துகொண்டிருப்பேன். மெலிந்து, தாடி வளர்ந்து, அழுக்கு ஆடைகளுடன். யாராவது தந்தால் மட்டுமே உணவு. ஆனால் ஹரித்வாரில் எல்லாருக்கும் தின்ன ஏதாவது கிடைத்துவிடும்.

இப்போது தோன்றுகிறது அப்போது உள்ளேயும் வெளியிலும் நிகழ்ந்தவற்றை நான் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன் என்று. ஏனென்றால் கடந்தகால நினைவுகளோ, எதிர்காலத் திட்டங்களோ, நிகழ்காலப் பதற்றங்களோ இல்லாமலிருக்கையில்தான் நாம் உண்மையில் கவனிக்கிறோம், நினைவுகளைச் சேர்த்துக் கொள்கிறோம். சிலமாதம் மட்டுமே நான் அந்த வாழ்க்கையில் இருந்தேன், ஆனால் எழுதித்தீராத அனுபவங்கள் உள்ளன.

அன்று சோட்டாபாபா, படாபாபா என அழைக்கப்பட்ட இரண்டு பண்டாரங்களை எப்போதும் ஒன்றாகத்தான் பார்த்திருக்கிறேன். ஒருவர் கஞ்சாவைச் சுருட்டி சிலும்பியில் அடைத்து அளிக்க இன்னொருவர் அதை வாங்கி ஆழ்ந்து இழுத்து விட்டு அடுத்த வாய் இவருக்குக் கொடுப்பார். அருகருகே அமர்ந்து வெறுமே வானத்தை பார்த்துக்கொண்டிருப்பார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்வதில்லை. பேசிக்கொள்ள தேவையில்லை என்பது போல அவர்களின் உடல்மொழி இருக்கும்.

இருவருமே முதியவர்கள், எழுபதுக்கு மேல் வயது சொல்ல முடியும், ஆனால் அறுபதாண்டுகளாக அங்கே இருக்கிறார்கள் என்று கடைக்காரர்கள் சொன்னார்கள். படா பாபா உயரமானவர், பெரிய சடைவிழுதுக்கள் தலையில் இருந்து தொங்கும், மெலிந்து சற்று கூன்விழுந்த உடல. சோட்டா பாபா குள்ளமானவர், வலுவான தோள்கள் கொண்டவர். அவர் தலையில் முடி இல்லை. ஒரு காவிநிற தலைப்பாகை கட்டியிருப்பார். இருவருமே கந்தலாடை அணிந்து காவி துண்டு போட்டிருப்பார்கள். இருவர் கண்களும் பெரிய நீர்த்துளிகள் போலிருக்கும்.

ஹரித்வாரில் மேலே சண்டிதேவி கோயிலுக்கு செல்லும் வழியில் இரு பக்கமும் நிறைய சிறு குடில்கள் அமைத்து துறவிகள் குடியிருப்பார்கள். பிச்சைக்காரர்கள் உடன் கலந்திருப்பார்கள். துறவிகளுக்கான பிச்சையும் பிச்சைக்காரர்களுக்கே. துறவிகளுக்காக பக்தர்களிடம் பிச்சைக்காரர்கள்தான் குரல்கொடுப்பார்கள். துறவிகள் தங்களை பிச்சைக்காரர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள்,  பிச்சைக்காரர்கள் தங்களை துறவிகள் என்று சொல்லிக் கொள்வார்கள்.

இரண்டு பாபாக்களும் எவரிடமும பேசுவதில்லை அவர்கள் பிறரிடம் பேசுவதும் இல்லை. ஒருவேளை உணவுக்கு அப்பால் ஒருநாள் முழுக்க ஒன்றிரண்டு லட்டு அல்லது ஜிலேபி. பெரும்பாலும் வெட்டவெளியில் தூக்கம். பணமாக எதையும் பெற்றுக்கொள்வதில்லை. உணவை எவராவது கொடுப்பார்கள். கஞ்சாவை எவராவது வணங்கி படைப்பார்கள்.  பட்டினத்தார் சொன்னது போல ‘சோறிடும் நாடு, துணி தரும் குப்பை” என்னும் வாழ்க்கை

படாபாபா ஒருமுறை தமிழில் என்னிடம் பேசினார். உச்சரிப்பு முறையை வைத்து அவர் தாய்மொழி தமிழ்தான் என்று ஊகித்தேன். “ நீங்க தமிழா?” என்று கேட்டேன். அவர் பதில் சொல்லவில்லை.

பொதுவாக எல்லா பண்டாரங்களும் நாலைந்து மொழி பேசுவதுண்டு. ஆனால் உச்சரிப்பு முறையைக்கொண்டு அவர்களின் தாய்மொழியை ஊகிக்கமுடியும். ஆனால் தங்கள் வேர்களைச் சொல்வதில்லை, விசாரிப்பதை விரும்புவதுமில்லை. அனைவருமே ஒருசில முறையேனும் திருவண்ணாமலைக்கு வந்திருப்பார்கள்.

ஒருநாள்  நான் தங்கி இருந்த  இடத்திலிருந்து சண்டிகோயிலுக்குச் சென்றேன். தூரத்திலேயே கூச்சல்கள், மனித உடல்களின் கொந்தளிப்பும் சுழிப்பு. அன்றெல்லாம் சண்டிகோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் எந்த ஒழுங்குமில்லாமல், குறுகலாக இருக்கும். பக்கவாட்டுச் சுவரோ பிடிமானமோ கிடையாது. எவரோ ஒருவர் உயரமான படியிலிருந்து கால் தவறி கிட்டத்தட்ட தலைகீழாக கீழே விழுந்து கழுத்து ஒடிந்து தலை சிதறி இறந்து கிடந்தார். 

அருகே சென்றபின்னர் கண்டேன், அது சோட்டா பாபா. கைகால்களை விரித்து மல்லாந்து கிடந்தார், தலை விசித்திரமான கோணலுடன் இருக்க ரத்தம் அப்போதும் குமிழியிட்டுக் கொண்டிருந்தது. அவருடைய இரண்டு கைவிரல்கள் மெதுவாக அதிர்ந்து கொண்டிருந்தன. ஒரு காலில் அசைவு இருப்பதுபோலவுமிருந்தது, இல்லாதது போலுமிருந்தது. 

எவருக்கும் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. ஆச்சரியமென்னவென்றால் சுற்றுலாப்பயணிகளும் பக்தர்களும் வேடிக்கைதான் பார்த்தனர். ஏனென்றால் அவர்களுக்கு இவர்கள் தங்களில் ஒருவர் அல்ல. எப்போதுமே அவர்கள் ஒரு சினிமாவில் பார்ப்பதுபோல இவர்களை வேடிக்கைதான் பார்க்கிறார்கள். 

பிச்சைக்காரர்கள்தான் அலறியபடி அலைமோதினார்கள். எவரும் அருகே செல்லவோ தூக்கவோ இல்லை. ஏனென்றால் அவர் செத்துவிட்டார் என்று தெளிவாகவே தெரிந்தது. மண்டை ஒருபக்கம் நன்றாகவே உடைந்து உள்ளே திறந்திருந்தது. சட்டென்று ஒற்றைக்கால் கொண்டவரான நாகா பாபா ஒருவர் முன்னால் சென்று அவரை தூக்கிப் பார்த்தார். கழுத்து துணியாலானதுபோல தலை முன்னால் கவிழ்ந்தது

என்னை அக்காட்சி முதலில் முழு விசையுடன் ஈர்த்தது. மனமே இல்லாதது போல அதைப் பார்த்து நின்றேன். அந்த காட்சியின் ஒவ்வொரு நுட்பமும் இன்றும் அப்படியே கண்முன் வருகிறது. அந்த உடலின் அருகே சிதறியிருந்த குப்பைகள், அந்த ரத்தம் பரவியிருந்ததின் வடிவம் எல்லாமே துல்லியமாகத் தெரிகிறது. சட்டென்று தன்னினைவு வந்தபோது சிறுநீர் முட்டவே சற்றுப் பின்னடைந்து படிகளில் கொஞ்சம் ஒதுங்கி அமரப்போனேன். அப்போதுதான் அங்கே படாபாபா அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

படாபாபா படியில் அமர்ந்து கையில் கஞ்சா இலையை வைத்து கசக்கி, தட்டி. அதில் இருந்த சிறிய விதைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்.  நான் அருகே அமர்ந்து மூச்சு வாங்கினேன். தலைசுற்றி வியர்த்து குளிர்ந்தபின் நிதானமானேன். அவர் என்னை திரும்பிப் பார்த்துவிட்டு கஞ்சாவை சிலும்பியில் கஞ்சாவை வைத்து ஒரு குச்சியால் இறக்கத் தொடங்கினார்.

என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, சட்டென்று என் அடிவயிற்றில் இருந்து ஓ அங்காரம் பொங்கிவந்தது. நான் எழுந்து கைநீட்டி போட்டேன். “என்ன செய்கிறீர்கள் இங்கே? நீங்கள் எல்லாம் ஒரு மனிதரா? எந்த வகையிலாவது உங்களுக்கு பிரியமும் அன்போ உண்டா? ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் உங்கள் கூடவே இருந்தவர் அதோ செத்து கிடக்கிறார்… திரும்பி கூட பார்க்க மாட்டீர்களா? உங்களுக்கு இந்த கஞ்சாதான் முக்கியமா?

படாபாபா என்னை திரும்பிப் பார்த்து “சரி, நான் என்ன செய்யவேண்டும்?” என்றார்.

“அவருக்கு நீங்கள் செய்ய ஒன்றுமே இல்லையா?” என்று மேலும் கத்தினேன். அதற்குள் அழுகை வந்துவிட்டது.

“அவரை தூக்கி கங்கையில் போட்டுவிடுவார்கள். அல்லது நகராட்சி அவரை அடக்கம் செய்யும். நான் ஏதும் செய்வதற்கில்லை. துறவிகள் ஈம காரியம் செய்யக்கூடாது”

“உங்களுக்கு எந்தக் கடமையும் இல்லையா?”

“கடமையை துறப்பதுதான் துறவு”

நான் நீண்ட நேரம் ஒன்று பேசாமல் இருந்தேன். எனக்கு அந்த மனநிலையை புரிந்து கொள்ள அப்போது முடியவில்லை. கொந்தளிப்பும் சீற்றமும் குமட்டிக் குமட்டி வந்தன. உண்மையில் அவரை அப்படியே உதைத்து அவருடைய வலப்பக்கம் இருந்த பெரிய பள்ளத்தில் தள்ளி அதே போல கழுத்து உடையச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதை செய்யக்கூடியவன் அல்ல நான் என்பது தான் என்னை தடுத்தது.

படாபாபா திரும்பி புன்னகையுடன் சொன்னார். “அதே போன்று நான் விழுந்திருந்தால் அவனும் இதே போலத்தான் இருந்திருப்பான். அதனால்தான் அவனுடன் மட்டும் நெருக்கமாக இருந்தேன்.” 

நான் தலையை கையில் பற்றி அமர்ந்திருந்தேன்.

அவர் மேலும் சொன்னார். “கடல் கூடுவதுமில்லை, குறைவதுமில்லை” 

நீண்டகாலம் கழித்து நான் கேரளத்தின் எழிமலையில் நடராஜ குருவின் மாணவரான சுவாமி சிதம்பர தீர்த்தாவுடன் பேசிக்கொண்டிருக்கையில் அதைச் சொன்னேன்.

“அவர் தன் சாவுக்காக அஞ்சவில்லை. ஆகவே இன்னொருவர் சாவுக்காக துயரமும் கொள்ளவில்லை” என்று சிதம்பர தீர்த்தா சொன்னார். “தாங்கள் நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்புவர்கள் தான் பிறர் மேல் நேசித்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு உதவி செய்யப்பட வேண்டும் என எண்ணுபவர்கள்தான் பிறருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். கடமையில் கட்டுண்டவர்கள் தான் பிறருடைய கடமைகளை எதிர்பார்க்கிறார்கள்”

அப்போதும் என்னால் படாபாபாவின் அந்த புன்னகையை மன்னிக்கவே முடியவில்லை. மேலும் நீண்டகாலம் கழித்து பிரம்மசூத்திரம் நூலில் உள்ள ஒரு வரி என்னை அந்நினைவுகளை நோக்கி தூக்கி வீசியது. “தத்து சமன்வயாத்”. அந்தச் சொற்களின் பொருள், “அது சமநிலை புள்ளியில் உள்ளது”.

இந்திய சிந்தனை மரபின் முதன்மையான தத்துவநூல்களில் ஒன்று பிரம்மசூத்திரம். பாதராயணர் என்னும் ஞானியால் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு மூவாயிரமாண்டுக்கு முன் இதன் முதல்வடிவம் உருவாக்கப்பட்டிருக்கலாம். பதரி என்றால் இலந்தை. பாதராயணர் என்றால் இலந்தையடியார் என தமிழில் சொல்லலாம். அது ஒரு குருமரபின் முதன்மை ஆசிரியர்களின் பொதுப்பெயராக இருக்கலாம். அந்நூலிலேயே முன்னர் இருந்த பாதராயணர்கள் மேற்கோள் காட்டப்படுகிறார்கள். அந்நூலில் பின்னர் உருவாகி வந்த சமண, பௌத்த கருத்துக்களுக்கும், வைணவத்தின் தொன்மையான வழிபாட்டுமுறையான பாஞ்சராத்ரம் முதலியவற்றுக்கும் மறுப்புகள் எழுதிச்சேர்க்கப்பட்டன.  

அடிப்படையில் தத்துவநூலான பிரம்மசூத்திரம் பொதுயுகம் பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் மதநூலாக, இறைநூலாக விளக்கப்பட்டு வருகிறது. இன்று கிடைக்கும் பெரும்பாலான உரைகள் அது முன்வைக்கும் மையமான பிரம்மம் என்பதை கடவுள், இறைவன் என்று விளக்குபவைதான். 

ஆனால் பிரம்மம் என்றால் வழக்கமாக மதங்கள் சொல்லும் இறைவன் அல்ல. அது இப்பிரபஞ்சமாகவும்,  பிரபஞ்சத்தின் காரணமாகவும் இருக்கும் ஒன்று. அது ஓர் ஆளுமை (Personality) அல்ல. ஆகவே அதற்கு அருள், சிந்தனை, நினைவு என நாம் கொடுக்கும் மனித அடையாளங்கள் எதுவுமில்லை. 

இன்றைய நவீன அறிவியல்நோக்கில் முழுமையாகவே புரிந்துகொள்ளத்தக்க ஒரு கருத்துருவமாகவே பிரம்ம சூத்திரம் பிரம்மம் என்பதை முன்வைக்கிறது.

இங்கு நாம் அறியும் பிரபஞ்சம் என்பது காலம், வெளி, பருப்பொருள் ஆகிய மூன்றும் இணைந்த ஒன்று. அது தனக்கான ஒரு செயல்பாட்டுமுறையை கொண்டிருக்கிறது. அதற்குரிய விதிகளை கொண்டிருக்கிறது. இப்பிரபஞ்சமாக எது வெளிப்படுகிறதோ அதன் இயல்புகளை இந்தச் செயல்முறையிலும் விதிகளிலும் மட்டுமே நாம் கண்டடையமுடியும் என்கிறது பிரம்மசூத்திரம். அதை விளக்கும் வரிதான், “அது சமநிலைப் புள்ளியாக உள்ளது”

இப்பிரபஞ்சத்தில் நாம் ஒவ்வொரு கணமும் காணும் திகைப்பூட்டும் விதி என்பது இதன் மகத்தான சமநிலை. அணு முதல் அண்டம் வரை, வாழ்க்கையின் ஒவ்வொரு புள்ளியிலும் நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு சமநிலையை காண்கிறோம். பிறப்பு-சாவு, ஆக்கம்-அழிவு என்று நாம் இங்கே முடிவில்லாத இரட்டைநிலையை காண்கிறோம். அவற்றுக்கு நடுவே சமநிலை உள்ளது, அச்சமநிலையிலேயே இப்பிரபஞ்சம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 

பிரம்மத்தை நாம் அறியும் ஒரு இடம் இந்தச் சமநிலைதான் என்கிறார் பாதராயணர். ஓர் நவீன இயற்பியலாளர் இப்படிச் சொல்லக்கூடும் – ‘நுண்துகள்களுக்கு நடுவே உள்ள மின்னூட்டத்தின் சமநிலையே இப்பிரபஞ்சம்’. அவரும் அதே சொல்லை பயன்படுத்தலாம் ‘தத்து சமன்வயாத்”

படாபாபா சொன்னதை இன்று எண்ணிக்கொள்கிறேன். அது தத்துவார்த்தமான ஓர் உருவகம். ஒரு ஞானி சொல்லும் வரி. ஆனால் எண்ணிப்பாருங்கள், ஒவ்வொரு பேரிழப்பிலும் ஒவ்வொரு பெருந்துயரிலும் நாம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளும் ஆறுதல் வார்த்தைகளுக்கும் இதே பொருள்தானே? “எல்லாம் சரியாயிடும். ஒண்ணு போனா இன்னொண்ணு வந்திரும். எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்கும்…” . நம்மை மீறிய ஒரு விஷயத்தின்போது வேறு எதையுமே நாம் சொல்லவும் முடியாது அல்லவா?

இன்று நினைக்கிறேன், படாபாபா போன்றவர்களேகூட ஒரு சமநிலையைத்தான் உருவாக்குகிறார்கள்.நாம் இங்கே உலகியலில் சிக்கி கொந்தளித்து அலைக்கழிகிறோம். உலகியலுக்கு அப்பால் இருந்து அவர்கள் நம்மை சமநிலைப்படுத்துகிறார்கள்.

 

முந்தைய கட்டுரைமேகங்களின் குரல் 1
அடுத்த கட்டுரைமேகங்களின் குரல் 3