வாழும் தமிழுக்கு வாழ்த்து

அன்புள்ள ஜெ,

இந்த தமிழ் இலக்கிய விழா குறித்த செய்திகள் உலகம் முழுக்க உள்ள ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன.தமிழ் ஊடகங்கள் மௌனம் காக்கின்றன. அவை விஜய் திருமணரத்து செய்திகளைத்தவிர் எதிலும் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு அப்பால் அவற்றிலிருந்து எதையும் எதிர்பார்ப்பதும் சரியல்லதான்.

தமிழ் இலக்கியம் பற்றி இத்தனை விரிவான செய்திகள் வருவது இப்போதுதான் என்றுதான் நினைக்கிறேன். பொதுவாக புத்தகங்களின் தனிப்பட்ட மதிப்புரைகள்தான் வெளிவருவது வழக்கம். பெரும்பாலான மதிப்புரைகளைப் பார்த்தால் அவை புத்தகங்களைப் படித்து எழுதியவையாகத் தெரியாது. கதைகளின் கரு மட்டும் தெரிந்து கொண்டு எழுதுவையாகவே தெரியும். கதைகளைப் படித்து தமிழ்ப் பண்பாட்டையும் அதன் சாராம்சத்தையும் உணர்ந்து எழுதப்பட்ட மதிப்புரை- ஆய்வுரைகள் ஆங்கிலத்தில் மிக அரிதாகத்தான் நான் பார்த்திருக்கிறேன்.

தமிழ் மேலே வழக்கமான ஒரு உதாசீனம் இந்தியா முழுக்க இருந்து கொண்டே இருக்கும் சூழலில் நம்மை கவனித்தே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தை உருவாக்குவது போல இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இத்தகைய ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து நடக்குமென்றால் நாம் தொடர்ந்து பேசப்படும் தரப்பாக இருப்போம். இந்த அணியில் உள்ள எழுத்தாளர்களும் இந்தியா முழுக்க வெவ்வேறு நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுவார்கள் என்றால், அவர்கள் அங்கே தொடர்ச்சியாக தமிழ் இலக்கியத்தை முன்வைப்பார்கள என்றால் ஒரு பெரிய மாற்ற்த்தை நாம் எதிர்பார்க்க முடியும்.

அத்துடன் இந்த நிகழ்ச்சியில் தான் இத்தனை இளைஞர்கள் பங்கு எடுக்கிறார்கள். இத்தனை இளைஞர்களின் பங்கேற்பு கொொொண்ட நிகழ்ச்சி என்பது உலக அளவிலேயே மிக அரிதான ஒன்று. ஒவ்வொரு இளமுகங்களை பார்க்கும் போதும் வாழும் தமிழ் என்ற் வார்த்தை எத்தனை அர்த்தமுடையது என்ற எண்ணம் வந்து ஒரு பெரும் பரவசத்தை தொடர்ந்து அடைந்து கொண்டே இருந்தேன். இந்த இளைஞர்களை எல்லாம் தமிழைப்ப் படிக்க வைக்க தமிழ் இலக்கியத்தை மொழி பெயர்க்க வைக்க நீங்கள் ஒரு பெரு முயற்சியை பல ஆண்டுகளாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் .இப்போது அதனுடைய வெளிப்பாடாகத்தான் இதை நாம் பார்க்கிறோம்.

இதன் பயன் தமிழர்களாகிய அனைவருக்கும் தான் தமிழ் இலக்கியவாதிகள் அனைவருக்கும்தான். தமிழ் இலக்கிய வாசகனாகவும், வாசகனாகவும் தமிழ் ஆர்வலராகவும் உங்களுக்கு என்  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய அணியில் உள்ள அத்தனை நண்பர்களையும் மனமாற தழுவி கொள்கிறேன்.

எஸ்.ஜெயச்சந்திரன்

முந்தைய கட்டுரைநியூயார்க் மாநாடு, இந்தியா, அமெரிக்கா.