பங்கேற்பாளர் தேர்வின் நெறிகள்

அன்புள்ள ஜெமோ,

உங்கள் நிகழ்ச்சியில் எவர் எதனடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்று சொல்லமுடியுமா? உங்கள் அளவுகோல்களை காணொலியில் சொல்லியிருந்தீர்கள். உங்களுடைய தேர்வுமுறையை அறிய விரும்புகிறேன். பலர் உங்கள் அமைப்புக்குள் செயல்படுபவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்கள் சிலர். அதைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?

(சைதன்யா அழைக்கப்பட்டது எப்படி என்று ஒரு கேள்வியையும் கேட்கவிரும்புகிறேன்)

என்.மகாதேவன்

அன்புள்ள மகாதேவன்,

இந்த நிகழ்வுக்காக எழுத்தாளர்களை அழைத்தபோது சில வழிகாட்டு நெறிகளை கொண்டிருந்தோம். 

அழைக்கப்படவேண்டியவர்கள்

. நவீன இலக்கியத்தில் செயல்படுபவர்கள் அழைக்கப்படவேண்டும்

. எல்லா தலைமுறைகளையும் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அழைக்கப்படவேண்டும். சாதனையாளர்கள் மட்டுமல்ல, சாத்தியம் கொண்டவர்களும் கூட அழைக்கப்படவேண்டும்

. இலக்கியவாதிகள் மட்டுமல்ல, இலக்கியத்தில் பிற களங்களில் செயல்படுபவர்களும் வரவேண்டும். 

ஈ. முக்கியமாக அழைக்கப்படவேண்டியவர்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்பவர்கள், எதிர்காலத்தில் மொழியாக்கங்கள் செய்து தமிழை இந்திய அளவிலும் உலக அளவிலும் முன்னெடுக்கும் சாத்தியம் கொண்டவர்கள். அவர்களை முன்னிறுத்துவதே இந்த கருத்தரங்கின் முதன்மைநோக்கம்.

(சைதன்யா அழைக்கப்பட்டது இளம் மொழிபெயர்ப்பாளர், இலக்கியச் செயல்பாட்டாளர் என்னும் அடிப்படையிலேயே. இந்த ஆண்டு சைதன்யா மொழியாக்கத்தில் பாரததேவியின் நிலாக்கள் தூரதூரமாய் நூலின் மொழியாக்கம் வெளிவந்துள்ளது. தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் கதைகளின் ஒரு தொகுப்பு அவருடைய தொகுப்பு-மேம்படுத்துதலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் கொண்டுவருவதற்காகவே ஒரு பதிப்பகம் நடத்துகிறார். இத்தனை தகுதிகொண்ட இன்னொரு இளம்பெண் இருந்தால் அவர் சைதன்யாவுக்கு முன்னரே அழைக்கப்பட்டிருப்பார்)

தவிர்க்கப்படவேண்டியவர்கள்

. இலக்கியவாதி என்ற பெயரில் முகநூலிலும் வெளியிலும் வெறும் வம்புகளை செய்துகொண்டிருப்பவர்கள் தவிர்க்கப்படவேண்டும். அவர்கள் அழிவுச்சக்திகள்.

.  குறிப்பிடத்தக்க இலக்கியவாதி என்றாலும் எங்கள் நிகழ்ச்சிகளையும், இலக்கியவாசகர்களான எங்கள் ஆர்வலர்களையும் இழிவுசெய்பவர்கள் என்றால் அவர் எவ்வகையிலும் எங்களுடன் சேர்க்கப்படக்கூடாது. எங்கள் செயல்பாடுகள் மேல் அடிப்படை மதிப்பும்  எங்கள்மேல் நம்பிக்கையும் கொண்டவர்கள் மட்டுமே வரவேண்டும். அந்த மதிப்பும் நம்பிக்கையும் இல்லாதவர்கள் எங்கள் நிகழ்ச்சிகளை குலைக்கக்கூடும். நண்பர்களிடமும் சோர்வை உருவாக்கிவிடுவார்கள்.

. உறுதியான கட்சிச்சார்பு, கருத்தியல் சார்பு கொண்டவர்கள் தவிர்க்கப்படவேண்டும். அவர்கள் எங்கும் தங்கள் கட்சி, கருத்தியலையே முன்வைப்பார்கள். அதன் பகுதியாக அதீதமான நிலைபாடுகளை முன்வைப்பார்கள்.எதிர்ப்பையும் ஈட்டிக்கொள்வார்கள். மொத்த விவாதத்தையும் எங்கும் நிகழும் கட்சியரசியல் விவாதமாக ஆக்கி இலக்கியவிவாதம் நிகழாமலாக்கிவிடுவார்கள். இலக்கியத்தை தலைக்கொள்பவர்களை மட்டுமே அழைக்கவேண்டும்.

இந்த நெறிகள் விஷ்ணுபுரம் அமர்வுகளுக்கும் பொருந்துவனவே. அதுவே நியூயார்க் நிகழ்ச்சிக்கும் பொருந்தும் நெறிகள். வேறு பல அமைப்புகள் இங்கே இலக்கியம் சார்ந்து செயல்படுகின்றன. அவையும் இந்த நெறிகளை கடைப்பிடிக்கலாம் என நினைக்கிறேன். கட்சிசார்பான இலக்கியவாதிகளை அக்கட்சிகள் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்கச்செய்யவேண்டும். அதுவே முறை.

ஜெ

முந்தைய கட்டுரைபங்கேற்பாளர் எப்படி தேர்வுசெய்யப்பட்டனர்?