அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்த தேர்தல் முடிவை ஒட்டி நீங்கள் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்திருந்த அரசியல் இல்லாத சிந்தனை பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தேன். சென்ற பல மாத காலமாக இணையத்தில் அரசியல் பற்றிய பேச்சுகளை மட்டும்தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘பாரதிய ஜனதா வநதுவிடும் என்பதால் எங்களை ஆதரிங்கள்’ என்று திமுக சொன்னதை நம்பி திமுகவுக்காக களம் ஆடினேன் என்று தான் சொல்ல வேண்டும். திமுக விஜய்க்கு ஆதரவாக எதிர்ப்பாகச் சொன்ன அனைத்தையும் நான் நம்பினேன். ஏதோ ஒரு வகையில் அரசியலில் ஈடுபடுவது என் கடமை என்று நினைத்தேன். அப்படி நம்பச் செய்தார்கள் ஊடகத்திலுள்ள அரசியல்வாதிகளும் பிரச்சாரகரளும். அவர்களில் பலர் இணைய அணியினர். பெரும்பாலானவர்கள் வசதியாக வேலைபார்ப்பவர்கள் அல்லது ஓய்வுபெற்றவர்கள். ஆனால் நான் மாணவன்.
நான் ஒராண்டுக் காலமாக இரவு பகலாக அரசியல் பற்றி யோசித்து பிரச்சாரங்களை செய்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அந்த பிரச்சாரம் என்பது எதிர்த் தரப்பை ஏளனம் செய்வது, வசை பாடுவது என்ற அளவிலே கூட மாறியது. தேர்தல் முடிவுகள் எனக்கு மிகப்பெரிய அடியாக அமைந்தன. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் ஒரு சின்ன குமிழுக்குள் உட்கார்ந்து கொண்டு சண்டை போட்டுக் கொண்டு நேரத்தை வீணடித்திருப்பதாக உணர்ந்தேன்.
ஏற்கனவே எனக்கு இந்தியாவின் வரலாறு, அரசியல் கொள்கைகள் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டு. அவற்றை முறையாக கற்க் வேண்டும் என்றும் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெல்ல வேண்டும் என்று கனவுகள் இருந்தன. ஓராண்டு காலம் அரசியல் செயல்பாடு என்னை வீணடித்து விட்டது. மீண்டும் என்னால் இந்த தேர்வுகளுக்கு பயில முடியுமா, இன்னும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகமே இப்போது இருக்கிறது .
அரசியலை சரியான அளவில் புரிந்து கொள்ள வேண்டியது ஒர் அறிவு ஜீவியின் கடமை என்று இப்போது தோன்றுகிறது. ஒர் அறிவுஜீவி எப்போதுமே அரசியலை நீண்ட நாள் நோக்கிலே கருத்து சார்ந்த மாறுதலாகவே பார்க்க வேண்டுமே ஒழிய அன்றாடம் கட்சிகள் உருவாக்கிக் கொண்டிருக்கும் சண்டை சச்சரவுகளுக்கு ஈடுபடக் கூடாது .அது அவனுடைய அறிவுத்தன்மையை மழுங்கடித்து அவனை வெறும் ஒரு கும்பலில் துளியாக மாற்றிவிடுகின்றது. அதை இப்போதுதான் உணர்கிறேன்.
உங்களுடைய காணொளிகள் பலமுறை நான் பார்த்திருந்தாலும் கூட அப்போதெல்லாம் அவை உறைக்கவில்லை. இந்த அனுபவம் எனக்கு அதை மண்டையில் அடித்தது போல் புரிய வைக்கிறது. இதிலிருந்து நாம் இன்னும் மீண்டெழ வேண்டும். உண்மையான ஒரு முன்னகரவை ந்டத்த வேண்டும் என்று உறுதி கொள்கிறேன்.
கா.இளங்செழியன்











