அன்புள்ளது ஜெ,
உங்கள் காணொளியில் கலை அளிக்கும் விடுதலை பற்றிய ஒரு குறிப்பு இருந்தது. அதைப் பற்றி ஒரு கடிதம் வெளிவந்திருந்ததையும் கண்டேன். என் வாழ்க்கையில் மிகப்பெரிய திறப்பாக அமைந்தது எனக்கு ஒரு கலையில் அறிமுகம் உருவானதுதான். ஒரு வெளிநாட்டில் மிகக் கடுமையான வேலைச் சூழலில் மிக மிகத் தனிமையான ஒரு வாழ்க்கையை நான் எட்டு ஆண்டுகள் வாழ வேண்டி இருந்தது. அந்த பண்பாட்டுச் சூழலுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. எனது வேலைச் சூழலில் நான் ஒரு அடிமை போல் நடத்தப்பட்டேன்.
அந்த மாதிரியான ஒரு சூழலில் உடனடியாக சமூக ஊடகங்களுக்குள் சென்று நட்பு தேடுவதுதான் எல்லாரும் செய்வது. நானும் அதையே செய்தேன். சமூகவலைத் தளங்களில் அரசியல் குழுக்களில் இணைந்து கொண்டு பூசல்களில் ஈடுபட்டு எனது தனிமையை போக்கிக் கொள்ள நினைத்தேன். சாதிக்குழுக்களிலும் மதக்குழுக்களிலும் இருந்தேன். ஆனால் அது என்னை தொடர்ந்து மனச்சோர்வுக்குத்தான் கொண்டு சென்றது. ஆகவே ஒரு கட்டத்தில் அதை முழுக்கவே நிறுத்திவிட்டு ஒரு ஓவியப் பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தேன். அந்த முடிவை திடீரென்று ஒரு உந்துதலில்தான் எடுத்தேன்,.
எனக்கு சிறு வயதிலேயே ஓவியங்கள் வரை வெளிச்சம் ஆர்வம் இருந்தது. ஆனால் எந்த பயிற்சியும் இருக்கவில்லை. நீண்ட கால இடைவெளி காரணமாக என்னால் தொடர்ந்து வரையவும் முடியவில்லை. எனக்கு ஓவியத்தின் அடிப்படைகளை கற்றுக் கொடுத்தார்கள. அந்த தொடக்கம் ஒரு பெரிய அலை போல என்னை இழுத்துக் கொண்டது. அதன் பிறகு ஒவ்வொரு நாளைக்கு குறைந்தது இரண்டு மூன்று மணி நேரம் ஆவது வரைய ஆரம்பித்தேன். வரையும் குழுக்களில் இணைந்து கொண்டேன் .பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல தொடங்கினேன். ஒன்றும் இல்லை என்றாலும் எனது ஓவியக் கருவிகளை எடுத்துக்கொண்டு ஒரு அற்புதமான நிலக்காட்சி இருக்கும் இடத்திற்கு சென்று சிலவற்றை வரைந்து கொண்டே இருப்பேன்.
கலை என்னை முழுமையாகவே துயரங்களிலிருந்து விடுதலை செய்தது .நான் மகிழ்ச்சி நிறைவு கொண்டவனாக மகிழ்ச்சி நிறைவு கொண்டவனாக ஆனபோது என் வேலைப்பளுவும் குறைந்தது. வேலை இடத்திலும் எனக்கு ஒரு இடம் உருவாகியது. நான் வாழ்ந்த நாட்டின் பண்பாட்டுடன் நுழைவதற்கும் எனக்கு அந்த கலை உதவியது. அங்கே முக்கியமான ஒருவனாக நான் என்னை உணர்வதற்கு இந்த கலை தான் எனக்கு வழியமைத்தது.
ஏதேனும் ஒரு கலையை அறிமுகம் செய்து கொள்வது போல மனித வாழ்க்கை நிறைவு அடையச்செய்யும் வேறொன்று இல்லை. ஏனென்றால் கலை என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கு அல்ல. பொழுதுபோக்கு என்ற வார்த்தையை மிகத் தவறானது. பொழுது என்பது போக்குவதற்குரியது அல்ல. பொழுது என்பது மிகப்பெரிய செல்வம். எண்ணி எண்ணி செலவழிக்கப்பட வேண்டிய ஒன்று. பொழுதுபோக்குக்காக மட்டும் எதையாவதுசெய்பவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் அர்த்தம்.
இன்னொருவர் உருவாக்கும் கலையில் நாம் ஈடுபடுவதுதான் பொழுதுபோக்கு. அதை நான் பெரும்பாலும் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு திரைப்படத்தை பார்ப்பவர் கலையில் ஈடுபடுவதில்லை. மாறாக ஒரு திரைப்படத்தை உருவாக்குபவர் அந்த காலையில் ஈடுபடுகிறார் .கொஞ்சமே நானும் செய்யக்கூடிய ஒந்று இருக்கவேண்டும். நமே உருவாக்கக்கூடிய ஒரு அம்சம் இருக்க வேண்டும். நமது கைகளால் நமது மனத்தால் நாம் ஒன்றைச் செய்யும்போது அது நமக்கு அளிக்கும் நிறைவும் விடுதலையும் சாதாரணமானவை அல்ல.
ஆகவே தான் நீங்கள் பயிற்றுவிக்கும் இந்த ஓவியப் பயிற்சி போன்றவை மிக முக்கியமானவை. அவை பலருக்கும் வாழ்க்கையில் மிகப்பெரிய திறப்பாக அமையும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அந்த எண்ணிக்கையை பார்க்கும் போது அதிகமானவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. நம்மவர்களுக்கு இன்றும் பிழைப்பு, நுகர்வோர் தவிர பெரிய ஆர்வம் ஏதும் வாழ்க்கையில் இல்லை. அதுதான் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். அதைத்தான் தங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.
இன்று அர்த்தம்ற்ற வாழ்க்கை அளிக்கும் ஆழ்ந்த டிப்ரஷன் பற்றி குழந்தைகளுக்கு எவரும் சொல்வதில்லை. பெரியவர்களுக்கும் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரியவில்லை. தாங்கள் ஒரு பெரிய டிப்ரஷனில் இருப்பதனால்தான் எளிய பொழுதுபோக்கு ஈடுபடுகிறோம் என்றும் முகநூல் வம்புகளில் ஈடுபட்டு அழிகிறோம் என்றும் நமது மக்கள் தெரிந்து கொள்வதில்லை. அவர்கள் தங்கள் தீவிரமான ஒரு வாழ்க்கை வாழ்வதாக கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த மனநிலை இன்னும் சில ஆண்டுகளில் மாறும் என்று நான் நினைக்கிறேன் .அப்போது கலைகளின் இடம் இன்னும் அதிகமாக புரிந்து கொள்ளப்படும்.
ஆராவமுதன் கண்ணன்.










