கீதை,வேதாந்தம், இருநூல்கள்.

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் உரைகளின் எழுத்து வடிவ நூல்களை வாங்கி படித்தேன்.

சங்கரரை அறிதல் கீதையை அறிதல் ஆகிய இரண்டு நூல்களுமே எனக்கு ஒரு முழுமையான அறிவை தருவாயாக அமைந்தன. இரு நூல்களையும் இணைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

இந்தியாவில் நவ வேதாந்த அலை உருவான வந்தபோது கீதை எப்படி மறுகண்டடையப்பட்டது என்பதை சங்கரர் அதற்கு முன்பு எப்படி  வேதாந்தத்தில் இருந்து அத்வைதத்தை உருவாக்கினார் என்பதுடன் இணைத்துப் பார்க்கும்போது ஒரு முழுமையான சித்திரம் கிடைத்தது.

இந்த நூல்களை நீங்கள் ஒரு ஆய்வு நூல்களின் வடிவில் எழுதியிருந்தால் ஒரு வேளை என்னை போன்ற ஒருவர் படித்திருக்க முடியாது. உங்களுடன் பேசிக் கொண்டேஇருக்கும் ஒரு அனுபவம் இருந்தது. அதே சமயம் கூர்ந்து வாசிக்கவும் முடிந்தது.

இரண்டு புத்தகங்களையும் இரண்டு நாட்களில் படித்தேன். அதன் பிறகு அவற்றைப் பற்றி யோசித்து சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை படித்தேன். மிக சுவாரஸ்யமான வாசிப்பநுபவம் தரும் இந்த நூல்கள் இந்தியாவின் த்த்துவ சிந்தனை மரபு பற்றிய ஒட்டுமொத்தமான ஒரு புரிதலை அளிக்கின்றன.

குறிப்பாக கீதை உரை. தமிழில் கீதை பற்றி ஆற்றப்பட்ட ஒரு முக்கியமான உரைகளில் ஒன்று. தமிழில் கீதை பற்றி விளக்கங்கள், உரைகள் எல்லாம் ஏராளமாக உள்ளன. ஆனால் கீதைக்குள் நுழைவதற்கான ஒரு பெரிய நுழைவாயிலாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது .

பக்திப் பார்வையோ அல்லது எதிர்ப்புப் பார்வையோ இல்லாமல் அறிவார்ந்த வரலாற்றுக் கோணத்தில் கீதை அணுகும் இந்த நூல் ஒருவேளை பக்தர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஏனென்றால் இதில் கிருஷ்ணனை நீங்கள் கடவுள் என்று சொல்லவில்லை. அதேபோன்று நாத்திகர்களுக்கும் பிடிக்காமல் இருக்கலாம். ஏனெனில் நாத்திகர்களின் எளிமையான உலகியல் பார்வையை நிராகரித்து ஒட்டுமொத்தமான ஒரு தத்துவ தரிசனத்தை இந்த நூல் முன்வைக்கிறது. ஆனால் உண்மையைத் தேடிச் செல்லும் யோக சாதகர்களுக்கும் ஞான சாதகர்களுக்கும் உரிய ஒரு சரியான நூல் இது.

அ.திருமலை

முந்தைய கட்டுரைதத்துவ வகுப்பும் விஷ்ணுபுரமும்.