உயர்குடியினரின் தமிழ்ப்புறக்கணிப்பு

அன்புள்ள ஜெ

இன்று வெளியாகி இருக்கும் உயர்குடியினரின் தமிழலக்கிய புறக்கணிப்பு காணொளியை கண்டேன். காணொளி முடிவில் நீனாசத்தில் அந்த பெரியவர் கேட்ட, ஒரு சமூகத்தின் உயர்குடியினர் அதன் கலையை புறக்கணிக்கையில் ஏற்படும் இழப்பு என்ன என்ற கேள்விக்கான உங்கள் பதிலின்மையை உணர்வாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். இது குறித்து அண்மையில் தோன்றிய எண்ணம் ஒன்றை பகிர தோன்றியது.

சதீஷ்குமார் சீனிவாசனின் புதிதாக வந்திருக்கும் எனக்கு தெரிந்தவரை வானத்தில் பறவைகள் இல்லை தொகுப்பை வாசித்து கொண்டிருந்தேன். அவரது ஆதார கவிமனநிலையான நம்பிக்கைகள் உதிர்ந்து எரியும் தவிப்புகள் சுடர் கொள்ளும் கவிதைகள். முன்பு நகரம் சதீஷின் கவிதைகளில் பின்னணியில் துலக்கமாக இருந்தது. இப்போது அதுவும் இல்லாமலாகி விட்டிருக்கிறது. ஆனால் சதீஷின் முதல் தொகுப்பில் இருந்து வாசித்து வருவதாலும் அவரது பின்புலம் பற்றிய தமிழ் விக்கி தகவல்களும் சதீஷை நகரத்தின் அடித்தட்டில் நின்றொலிக்கும் குரலாக நினைவில் பதிய வைத்துள்ளன. சதீஷின் கவிதைகளோடு சுகுமாரனின் கவிதைகளை வாசிக்கும் பதிவு ஒன்றையும் பார்த்தேன். இவற்றை பற்றி எண்ணுகையில் நம் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பெரும்பகுதியினர் நகரத்தை நோக்கி பிழைப்புக்காக வருபவர்கள். அப்படி வந்து நிலை கொண்டு தங்கள் படைப்பூக்கத்தை கண்டுகொண்டு கலையில் எஞ்சிய நேரத்தில் ஈடுபடுபவர்கள். எனவே மூட்டி மோதி வென்று தோற்று தன்னை நிலைநிறுத்தி கொள்ளும் மனிதனின் கண்டடைதல்களே இலக்கியத்தில் வந்துள்ளன

முன்பு நீங்கள் வேறொரு காணொளியில், நம் இலக்கியத்தில் ஏன் நகரத்தின் கொண்டாட்டங்கள் பதிவாகவில்லை என கேட்டிருந்தீர்கள். செல்வக்குடி பிறப்பாளர்கள் அல்லவா நகரின் கொண்டாட்டமான முகத்தை பார்க்க முடியும். நம் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் நூல்களில் அரிய தருணங்களின், எளியவற்றின் மகிழ்ச்சிகள் பதிவாகின்றன. அதுவே அதிகப்பட்ச சாத்தியமாக இருக்கலாம். ஆனால் உயர்குடியினர் நுழையும்போதே டால்ஸ்டாய் எழுதுவது போல பிரபுத்துவ விருந்துகளோ அல்லது பிரம்மாண்ட விராட ரூபனாக எழும் இருளிலெரியும் நவீன நகரங்களின் சித்திரம் காணக்கிடைக்கும் என்று தோன்றியது. நமக்கு இழப்பு இருக்கிறதா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதில் ஒரு இழப்பு நிச்சயமாக இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. எந்தளவக்கு என்பது தெரியவில்லை.

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைA day for women writing Bangalore