பெண்கள் சந்திப்பு…

அன்புள்ள ஆசானுக்கு,

வெள்ளிமலை முழுமையறிவு வகுப்புகள், இலக்கியம் வாசிப்பவர்களுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய வாய்ப்பு என்று தான் சொல்லவேண்டும். இதுவரை பல வகுப்புகளுக்கு வந்துள்ளேன்.  2026 காவிய முகாமில் பெண்கள் மட்டும் இரவு வாசிப்பு மற்றும் எழுதுவது பற்றி ஒரு சிறிய கலந்துரையாடல் நிகழ்ந்தது. அதன் மூலமாக நண்பர்கள் முயற்சியால் பெண்களுக்கு மட்டுமேயான ஒரு தனி வகுப்பு ஏற்பாடானது. மூன்று நாட்கள் ஆசானுடன் இருக்கும் வாய்ப்பு. வெள்ளிமலைக்கு வெள்ளி காலையில் வரும் வேளையில் இந்த வகுப்பின் பெயரை சொல் என்று ஒரு தோழி கேட்டதற்கு, அதெல்லாம் தெரியாது ஆசானுடன் 3 நாட்கள் என்று தான் நாங்கள் அனைவரும் சொல்லிக்  கொண்டோம்.

வகுப்பில் முதல் நாளில் நீங்கள் பெண்களுக்கான மன தடைகளை விவரித்தீர்கள். யார் எல்லாம் எழுதலாம், எவற்றை எழுத வேண்டும், வேண்டாம், எவ்வாறு எழுத வேண்டும்,  சிறுகதை, குறுங்கட்டுரை இவற்றின் வடிவங்கள் அதன் விதிகள் என்று மூன்று நாட்களும் மிக செறிவான வகுப்புகள்.

இறுதி நாளன்று நடந்தது கவிதைக்கான வகுப்பு.  கவிதை என்றும் உச்ச நிலை தான்.  அவ்வாறே இ‌ந்த வகுப்பும்.  எப்போதும் நீங்கள் கவிதைகளை மனப்பாடமாக சொல்வீர்கள். அது என்றும் எனக்கு வியப்பாக இருக்கும்.

அவ்வாறு சொன்ன இரு கவிதைகள் ஒன்று ராஜன் லக்ஷ்மி  அவர்களின் கவிதை. ராஜன் லட்சுமி அவர்களின் கவிதை மீண்டும் மீண்டும் எண்ணி பார்க்கையில் வேறு வேறு விதமாக விரிந்து கொண்டே செல்கிறது இன்றும் கூட. மற்றொரு கவிதை, எவ்வளவு தேடியும் கவிதையை கண்டுபிடிக்க முடியவில்லை.  

இந்த இரு கவிதைகளும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது வெள்ளி மலையில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் வரும் வரையிலும். என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.  வகுப்பில் suchithra சொன்னார் அந்த கவிதை அப்படியே இருக்கட்டுமே ஏன் interpret செய்ய வேண்டும் என்று.

நீங்கள் முதல் முறை சொல்லும் போது இருந்ததை விட இரண்டாம் முறை திரும்பவும் வாசித்த போது இன்னும் ஆழமாக பாதித்து.  சில கவிதைகள் என்றும் ஒரு முறையில் நிகழ்வதில்லை.  ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒவ்வொரு மாதிரியான மன நிலைக்கு இட்டுச் செல்லும். அந்த மாதிரியான கவிதை இது.  

ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு கற்றல் நிகழ்கிறது. வெள்ளிமலையில் தங்கள் வகுப்புகளில் கலந்து கொள்வதும், வகுப்பை தாண்டி தங்களுடன் மற்ற நேரங்களில் கலந்துரையாடுவதும் மிகவும் பிடித்த விஷயங்கள். பெரிதாக எனக்கு கேள்விகள் ஒன்றும் இருக்காது தங்களிடம் கேட்பதற்கு. இருப்பினும் தங்களின் ஒவ்வொரு உரையாடல்களும் முக்கியமானதாகவே இருக்கும்.  குறிப்பாக மாலை நடை.  அனைவருக்குமான வகுப்புகளில் தங்களுடன் சேர்ந்து வரும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கும்.  இந்த முறை ஒரு முறையாவது தங்களுடன் நடக்க முடிந்தது.  இரண்டாவது நாள் உடல் நிலை காரணமாக வர இயலவில்லை.

முறையான ஒரு syllabus எதுவும் இல்லாமல் நீங்கள் எடுக்கும் முதல் வகுப்பு என்று சொன்னீர்கள். வகுப்பு முடிந்து வீட்டில் தொகுத்து கொள்ளும் போது தெரிகிறது எவ்வளவு செறிவான ஒரு வகுப்பு என்று. நீங்கள் வகுப்பில் சொன்ன அனைத்தையும் முடிந்த அளவு விரிவு படுத்தி எழுதினால் குறைந்தது 20/30 பக்கங்கள் எழுத முடிந்தது.  எழுதுவதில் நான் செய்யும் பிழைகளும் எவ்வாறு எழுத வேண்டும் என்றும் புரிந்து கொள்ள முடிந்தது. வாசிப்பும் பயிற்சியும் மட்டுமே முதல் படி நிலை. தங்கள் சொன்ன வழிமுறைகளை கண்டிப்பாக முயற்சி செய்ய  வேண்டும்.

Vellimalai lit class women

அன்புடன்

Eswari

Thanks and regards

Eswari.B

முந்தைய கட்டுரைமலை மாட்சி- இராச.மணிமேகலை