முதியவர்கள் அயல்நிலத்தில்

வணக்கம் ஐயா,

நான் உங்கள் காணொளிகளைத் தொடர்ந்து பார்த்து வரும் ஒருவன். உங்கள் ஒவ்வொரு காணொளியையும் பார்த்து முடிக்கும் போதும், ஏதோ ஒரு புதிய மனிதனாக என்னை உணர்கிறேன். உங்களின் காணொளிகள் என்னைப் போலவே பலரின் சிந்தனைகளிலும் வாழ்க்கையிலும் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்றும், தொடர்ந்து ஏற்படுத்தும் என்றும் நம்புகிறேன்

அண்மையில், உங்கள் “மட்காத மனிதக் குப்பைகள்” என்ற தலைப்பிலான காணொளியைப் பார்த்தேன். அதன்பின்னர்தான் உங்களுடன் தொடர்புகொள்கிறேன்.

இது என்னுடைய ஆசை மட்டுமல்ல; புலம்பெயர் தேசங்களில் வாழும் பெரும்பாலான மக்களின் விருப்பமாகவும் இருக்கலாம்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் முதியவர்கள், குறிப்பாக தாயகத்தில் எந்தவிதமான உறவினர்களும் இன்றி, தங்கள் பிள்ளைகளை மட்டும் நம்பி வாழும் முதியவர்கள், தங்களது முதுமைக் காலத்தை எவ்வாறு ஆரோக்கியமாகவும் மனநிறைவுடனும் கழிக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு விரிவான காணொளியை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

அது மட்டுமன்றி, அந்த முதியவர்களின் பிள்ளைகள் அவர்களுக்கு எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும், அவர்களுடைய மனநலன் மற்றும் உடல்நலத்தைப் பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்பதையும் உங்கள் கருத்துக்களுடன் பகிர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக, புலம்பெயர் நாடுகளின் காலநிலை காரணமாக வருடத்தின் பல மாதங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் முதியவர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் தனிமை, மனஅழுத்தம் மற்றும் உடல்நலச் சவால்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதையும் உங்கள் பார்வையில் அறிய ஆவலாக இருக்கிறேன்.

உங்களின் அனுபவமும் சிந்தனைகளும் பலருக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த விடயத்தை மையமாகக் கொண்டு ஒரு காணொளியை உருவாக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன்,

குலேந்திரா

முந்தைய கட்டுரைஇயற்கையும் பறவையும்