அன்புள்ள ஆசிரியருக்கு,
AI அறிமுக வகுப்பில் கலந்துகொண்டது எனக்கு மிகவும் பயனுள்ள அனுபவமாக இருந்தது. முனைவர் பிரகாஷ் செல்வகுமார் அவர்கள் வகுப்பை நடத்திய விதம் அனைவருக்கும் எளிதில் புரியும்படி அமைந்திருந்தது. எங்களை நான்கு குழுக்களாகப் பிரித்து, சிறு கேள்வி-பதில்கள் மூலம் கருத்துகளைத் தெளிவுபடுத்தி, அனைவரும் புரிந்துகொண்டதை உறுதிசெய்த பின்னரே அடுத்தடுத்த பகுதிகளுக்குச் சென்றார். முதல் வகுப்பிலேயே நிறைய கற்றுக்கொண்ட திருப்தி எங்களுக்குக் கிடைத்தது.
நான் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் மாதிரி உருவாக்கம் (Pattern Making) துறையில் பணியாற்றி வருகிறேன். என் துறையில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய பணிகளைப் பட்டியலிட்டுள்ளேன். அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இப்போது கிடைத்துள்ளது. இதற்குக் காரணமான ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இதன் அடுத்த நிலை வகுப்புகளையும் நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நித்தியவனத்தின் அமைதியான சூழல் வகுப்பிற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. இரண்டாம் நாள் இரவு நண்பர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு ஆசிரியர் தனது அனுபவத்தின் அடிப்படையில் தெளிவான பதில்களை வழங்கினார்.
எங்கள் சந்தேகங்களுக்குப் பதிலளித்த அந்தியூர் மணி அவர்களுக்கும், உணவு தயாரித்துக் கொடுத்த சரஸ்வதி அம்மாவிற்கும் என் நன்றிகள். இந்த நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தங்களுக்கும், முழுமையறிவு குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
R. ரமேஷ்
சத்தியமங்கலம்.












