கல்விக்கான மனநிலை என்ன?

அன்புள்ள ஜெ

இணையவழி வகுப்புகள் பற்றி நான் கேட்ட கேள்விக்கு அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தீர்கள்.

இன்றைய சூழலில் நாமெல்லாம் வேலையில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். ஒருநாள்கூட அவற்றிலிருந்து விடுபட முடியாத நிலை உள்ளது. கிடைக்கும் நேரத்தில் உருப்படியாக எதையாவது கற்றுக்கொள்வது நல்லது அல்லவா? அதற்கு இணையக்கல்வி ஒரு நல்ல வழி அல்லவா?

செல்வக்குமார்

 

அன்புள்ள செல்வக்குமார்

இணையக்கல்வியை நான் முழுமையாக மறுக்கவில்லை. நீங்களே சொல்வதுபோல கிடைக்கும் நேரத்தில் ’எதையாவது’ கற்றுக்கொள்ள அது உதவிகரமானது. ஆனால் நேர்க்கல்வி என்பது ஒரு முழுமையான அனுபவம்.

நமக்கு எது கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல, நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதே முக்கியம். அப்படிக் கற்பதற்கான மனநிலை, சூழல் ஆகியவை நேர்க்கல்வியிலேயே உள்ளன.

நீங்களே சொல்கிறீர்கள் வேலையில் சிக்கிக்கொண்டிருப்பதைப் பற்றி. அது நம் மூளையை சலிப்புறச் செய்கிறது. அதில் இருந்து கொஞ்சம் இளைப்பாற நாம் யூடியூப் பார்க்கிறோம். கொஞ்சம் சமூகவலைத்தளங்களிலும் இணையத்திலும் உலவுகிறோம். அங்கே எளிய கேளிக்கைகள் உள்ளன. விவாதங்களும் சச்சரவுகளும் நிகழ்கின்றன. நம் பொழுதுபோகிறது.

நாம் இணையத்தில் வகுப்புகளுக்குச் சென்றால் அந்த பொழுதுபோக்குகளின் ஒரு பகுதியாகவே அதையும் நம் மனம் எடுத்துக்கொள்ளும். நாம் என்னதான் அதை அப்படி அல்ல என சொல்லிக்கொண்டாலும் மனம் அப்படித்தான் எடுத்துக்கொள்ளும். அதே மனநிலையில்தான் அணுகும். அந்த மனநிலையில் நாம் எதையும் ஆழமாகக் கற்கமுடியாது.

நாம் ஒரேவகை வாழ்க்கைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறோம். மானசீகமாக ஒரு சிறையில் இருக்கிறோம். உடலளவிலும் சிறையிலேயே இருக்கிறோம். அந்த சிறைவாழ்க்கை நம்மை சலிப்படையச் செய்கிறது. நம்மை உளச்சோர்வுக்கு தள்ளுகிறது. நோயுறச் செய்கிறது.

புகழ்பெற்ற அமெரிக்க சமூகவியலாளரும் காந்தியருமான இவான் இல்யிச் இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே எழுதினார். நாம் இன்று உலகில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லமுடியும். ஆனால் நாம் இயல்பாக வாழும் இடம் மிக குறுகிவிட்டது. வீடு, அலுவலகம், கார் என தொகுத்துப் பார்த்தால் அன்றாடத்தில் ஒரு ஐந்தாயிரம் சதுர அடிப் பரப்பில் சாதாரணமாக நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பழைய காலத்தில் ஒரு கிராமவாசி அந்த கிராமத்தில் முழுக்க பரவி வாழ்ந்துகொண்டிருப்பார். நம் வாழ்க்கையை தொழில்நுட்பம் குறுக்கிவிட்டது. அந்தக் குறுக்குதலைச் செய்பவை இன்றைய ஊடகங்கள். இவை உலகை நம் அறைக்குள் கொண்டுவருகின்றன என நினைக்கிறோம். அது உண்மை அல்ல. உலகம் என்ற பிம்பத்தையே கொண்டு வருகின்றன. சிறையில் இருப்பவன் டிவி பார்த்தால் அவன் உலகில் சுற்றிக்கொண்டிருப்பவன் ஆகிவிடுவானா என்ன?

நான் பேசிக்கொண்டிருக்கும் கல்வி அச்சிறையில் இருந்து வெளியேறுவதற்கானது. அந்தச் சிறைக்குள்ளேயே அதையும் கற்றாலென்ன என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதுதான் வேறுபாடு. நீங்கள் வாழும் அந்த அன்றாடவாழ்க்கை என்ற சிறைக்குள் இருந்து நீங்கள் எதைச்செய்தாலும் உங்கள் சோர்வும் சலிப்பும் நோயும் அகலாது.

நம்முடைய அறைகளுக்குள் இருந்துகொண்டு நாம் மெய்யான கல்வியை அடையமுடியாது. கல்விக்காக நாம் அறைகளை விட்டு வெளியேறவேண்டும். மன அளவிலும் உடல் அளவிலும் வெளியேற வேண்டும். கல்வியை நாம் தேடிச்செல்லவேண்டும். அதன்பொருட்டு கொஞ்சம் நேரத்தை, பணத்தைச் செலவிடவேண்டும். கொஞ்சம் கடினமானதாகக்கூட அந்தத் தேடல் இருக்கவேண்டும். அப்போதுதான் மெய்யான கல்வி நிகழும்.

கல்விக்கான மனநிலை என்பது விடுதலை சார்ந்ததாக இருக்கவேண்டும். கல்வியை நம் வேலை, குடும்பத்துடன் குழப்பிக்கொள்ளலாகாது. நம் பொழுதுப்போக்குகளுடன் கலக்கக் கூடாது. அதற்கான தீவிரத்தை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும். சாதாரணமாக அணுகினால் எந்த சிறந்த கல்வியையும் சாதாரணமான தகவல்களாக ஆக்கிக்கொள்ள முடியும். அதன்பின் ‘அதையும் படிச்சாச்சு’ என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளத்தான் முடியும்

 

ஜெ

முந்தைய கட்டுரைபைபிள் கற்பவர் எவர்?
அடுத்த கட்டுரைஇசைரசனையை பயிலவேண்டுமா?