மேடையுரைப் பயிற்சி, கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

மேடையுரை பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சமகால காண்பியல் கலைகளுக்காக கொச்சியில் நடக்கும் உலக அளவிலான(Kochi Muzurris Biennale) கண்காட்சி, அங்கிருந்து டெல்லி சென்று நவீன கலை கூடம்(Modern art gallery) மற்றும் லலித் கலா அகாடமியின் கண்காட்சிகள் பார்த்து விட்டு இப்போது சென்னைக்கு வந்துவிட்டேன். நந்தலால் போஸின் ஓவியங்களை பார்த்த போது தமிழ்நாட்டு ஓவியரான கே. சீனிவாசலுவிடம் பெங்காள் ஓவியர்களின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்று நேரடியாக உணர முடிந்தது. இப்போது தமிழ்விக்கியில் கே. சீனிவாசலு பற்றி எழுதிக் கொண்டிருப்பதால் சரியான நேரத்தில் சென்ற பயணம் என்று தோன்றியது.

உங்கள் அருகாமையில் ஓரிரு நாள் இருக்கலாம் எறு மட்டுமே மேடையுரை பயிற்சியில் கலந்து கொண்டேன். மற்றபடி  எனக்கு மேடை பேச்சாளர் ஆகும் எண்ணம் எதுவும் இருக்கவில்லை. அதுவே முதல் நாள் சொதப்பலுக்கும் காரணம். உங்களிடம் 2 மார்க் வாங்கி சீண்டப்பட்டதால் தான் அடுத்த நாள் நன்றாக தயாரித்து முழு மதிப்பெண் பெற்றேன். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட நண்பர்களும் தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக வெளிப்பட்டார்கள். இதன் பலனாக ஒரு முக்கிய தலைப்பை கூட சுவாரிஸ்யமாக மற்றவர்களிடம் ஏழு நிமிடத்தில் சொல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை கிடைத்தது. ஒரு பத்து நிமிட பேருந்து பயணத்தில் கூட பக்கத்தில் அமர்பவரிடம் நாம் பேசும் விஷயத்தை சிறப்பாக பகிர முடியும். மேடையுரை நிகழ்த்தி பயிற்சி எடுப்பது எப்போதும் சாத்தியமில்லை. ஆனால் சாதாரண உரையாடலையும் இந்த பயிற்சியை மனதில் வைத்து பேச முயற்சிக்கலாம். அதன் மூலம் இந்த பயிற்சியில் கற்ற பாடங்களை தக்க வைக்க முடியும் என்று நம்புகிறேன். மேடையுரை பயிற்சியை ஒருங்கிணைத்த உங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி!

ஜெயராம்

அடுத்த கட்டுரையோகம், கடிதம்