தியானம், திரளும் தனிமையும்
அன்புள்ள ஜெ ,
வணக்கம். ஆனந்த சைதன்ய தியான பயிற்சி பயில எங்களுக்கு வாய்ப்பு அளித்தமைக்கும், உண்மையான தேடல் உள்ள மாணவர்களுக்கு சரியான வழிகாட்டியாக நீங்கள் இருப்பதற்கும் உங்களுடன் இணைந்து இந்த வகுப்பை ஒருங்கமைத்த அனைவருக்கும் ஹரி, அந்தியூர் மணி அண்ணா அவர்களின் அர்ப்பணிப்புக்கும் உளம் கனிந்த நன்றிகள், ஆசிரியர் தில்லை அவர்களுக்கும் குருமார்கள் அனைவருக்கும் பாதம் பணிந்து வணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் முறை கடிதம் எழுதுவதால், சிறிய பதற்றம் உள்ளது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.
குரு தில்லை அவர்கள் மிகுந்த அன்பானவர், மாணவர்களின் தேவையை நிறைவு செய்ய சிறப்பாக பயிற்சியை தொகுத்து வழங்கினார்கள், ஆசிரியரின் சிரிப்பு மிக அழகாக இருந்தது. அவருக்கே உரிய எளிய ஆத்மார்த்தமான உரையாடல் மூலம் வகுப்பை தொடங்கினர், உடல், மனம், பிராணன் பற்றிய தெளிவான விளக்கங்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் வழியாக எளிய முறையில் கதைகள் மூலம் தொகுத்து வழங்கினார்கள், எல்லையற்ற பொறுப்பும், இக்கணத்தில் முழுமையாக ஏற்க்கும் தன்மையுடன் இருப்பது பற்றிய தெளிவான விளக்கங்கள், பிரக்ஞயுடன் பிரபஞ்சத்தில் எல்லையில்லா ஆற்றலை அறிந்து கொள்ள தேவையான கருவிகள் மூலம் பல அழகான உணர்வுகளை இதற்கு முன் அறியாத மகிழ்வான தருணங்களை உணர அவரின் சைதன்ய தியான பயிற்சி குரு ஆசியுடன் வழங்கினார்கள். அந்த நெகிழ்வான அகம் மலர்ந்த தருணம், அனுபவித்த நிகழ்வை வெளிபடுத்த தேவையான வார்த்தைகளும், என்னுள் இல்லை , குருமார்களுக்கும் ஆசிரியர் தில்லை அவர்களுக்கும், வழிகாட்டிய உங்களுக்கும் பாதம் போற்றி வணங்குகிறேன். நன்றிகள் பல
கர்ம யோகம் பற்றிய அவரின் சிறிய எளிமையான விளக்கம் அருமையாக இருந்தது. நிலை செயல் அதன் பொருட்டு பெறும் பொருள் என அருமையாக எடுத்துக்காட்டுடன் கூறினார். நீங்கள் முன்னிறுத்தும் ஆளுமைகள் அனைவரும் வியக்கத்தக்க பெருச்செயல் ஆட்ருபவர்கள் அவர்களிடம் உடன் இருப்பதை பெரும் பேறாக உணர்கிறேன். உங்களுடன் சேர்ந்து செயலாற்றும் வாய்ப்பு அளிக்க வேண்டும் ஜெ .
உங்கள் அன்புள்ள மாணவன்
சிசுபாலன்
*
அன்புள்ள சிசுபாலன்
தியானமுகாம் சிறப்பாக நிகழ்ந்தது என்று பங்குகொண்டவர்கள் அழைத்துச் சொன்னார்கள். அவர்களில் சிலர் பல ஆண்டுகளாக வெவ்வேறு தியான முகாம்களில் கலந்துகொண்டவர்கள். அவர்களுக்கு இது மிகப்புதிய அனுபவமாக இருந்தது. இதிலிருந்த தனிப்பட்ட கவனிப்பும், நேரடியாக ஓர் ஆசிரியருடன் தங்கி பயிலும் அனுபவமும் எவ்வளவு முக்கியம் என உணர்ந்ததாகச் சொன்னார்கள். இதுதான் பல நூற்றாண்டுகளாக இங்கே நிகழ்ந்து வந்த செயல்பாடு. அகப்பயிற்சிகள் எல்லாமே ஆர்வமும் கொஞ்சம் அர்ப்பணிப்பும் உடைய சிலருக்காகவே நடத்தப்பட வேண்டும். அதன்பொருட்டு கொஞ்சம் நேரம் ஒதுக்கிப் பயிலமுடியாதவர்களால் அதற்குள் செல்லமுடியாது. அத்தகையோர் பங்குபெறும்போது மற்றவர்களாலும் சரியான முறையில் கற்கமுடியாது. இதுதான் பெருந்திரள் பயிற்சிகளின் குறைபாடு. ஆகவே இதை ஏற்பாடு செய்கிறோம். என்னைப் பொறுத்தவரை சரியானவர்களைச் சுட்டிக்காட்டுவது மட்டுமே என் பணி. இந்த வகுப்பு தொடர்ந்து நிகழுமென நம்புகிறேன்
ஜெ