கற்றளிகளைக் கற்றல் – ஆலயக்கலை அனுபவம்

ஜே கே சார் வாய் திறந்து சொல்லும் ஒவ்வொரு வரியும் பாயிண்டுஎன்று ஆலயக்கலை ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களைப் பற்றி நண்பர் ஒருவர் இரண்டாம் தத்துவ முகாமில் சொன்னார். அந்த அறிமுக வரியே எனக்குப் போதுமானதாக இருந்தது. ஆலயக்கலை முகாம் சென்றுவந்த நண்பர்களின் அனுபவப்பதிவுகளும் ஜெவின் பரிந்துரையும் சென்றே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தை மேலும் தூண்டியது. ஆலயக்கலை அறிவிப்பைப் பார்த்தவுடன் உடனே டிக்கெட் போட்டு காத்திருந்தேன்.  மேலும் கடந்த ஐந்து வருடங்களாக வட இந்தியாவின் கோயில்களையும் சீக்கிய, ஜைன, பெளத்த, இஸ்லாமிய, சூஃபி வழிபாட்டிடங்களையும் தொடர்ந்து கண்டு வருகிறேன்.

தாமரைக்கரை மலைப்பாதையை அந்தியில் நெருங்கினோம். மழை பெய்து மலைச்சூழல் மேலும் அழகாகத் தெரிந்ததுஅந்தியூர் மணியின் வரவேற்பு ஏற்பாடாக இருக்கும் என நினைக்கிறேன். வெள்ளிமலையை அதன் காலநிலை, விலங்குகள் மற்றும் நித்யவனம் சார்ந்த இன்ன பிறவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். தரமான மூன்று நாட்களுக்கு நிமித்தம் போல இருந்தது.

காலையில் புத்தரையும் வாக்தேவியையும் முதலில் மலரிட்டு வணங்கிவிட்டு வகுப்பில் அமர்ந்தோம். ஜே கே அவர்களே மிக அழகாக பாடி வகுப்பை தொடங்கினார்.  வழக்கமாக ஒவ்வொருவரும் சுமந்து செல்லும் அன்றாட baggage களை அப்புறபடுத்தி எங்களை கற்கும் மனநிலைக்கு கொண்டுச்சென்றது அவர் குரல்.

முதலில் பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் கடவுள் மற்றும் கோயில் தொடர்புடைய சொற்களையும் வரிகளையும் எடுத்துக்காட்டினார். பின்பு கோயிலின் layout யும் அதன் அங்கங்களையும் மகா வாஸ்து புருஷனுடன் ஒப்பிட்டார். கலை பண்பாடு, விழா, சடங்குகள், தத்துவ, ஆன்மீக, புராண, வரலாறு ரீதியாக கோயிலை அணுக பல வழிகள் உள்ளன என்றாலும் aesthetics மூலம் கோயிலை அணுகுவது மிக அடிப்படையானதும் அவசியமானதும் என்பதை வலியுறுத்தினார்.

கோயில் இறைவனின் வடிவமே என்றும் கோயில்கள் அமைக்க அடிப்படையானவை வாஸ்து, சிற்ப, ஆகம சாஸ்திரங்கள் என்றும் அறிந்தோம்ஆகமங்கள் என்பது தொன்று தொட்டு வரும் அறிவு என்று வரையறுத்து சைவ, வைணவ, சாக்த, கெளமார ஆகமங்களை ஒவ்வொன்றாக விரித்துரைத்தார்.

ப்ரதியக்‌ஷம் அடிப்படையில் வபுஸ், சித்ர, ரன்வ, ரூபம் என்றும், திருஷ்டி அடிப்படையில் சம, மேல், கீழ், இட வல திருஷ்டி என்றும், உருவஅருவ அடிப்படையில் சகள, சகள நிஷ்கள, நிஷ்களம் என்றும், பரிமாண அடிப்படையில் சித்ர, சித்ரார்த, சித்ராபாசம் என்றும், முகபாவ அடிப்படையில் சாத்வீக, ராஜஸ, தாமஸம் என்றும் சிற்பங்களையும் சிற்பகுணங்களையும் வகைப்படுத்தினார்.

’Temple is a melody created through rhythm’ என்று கணபதி ஸ்தபதி அவர்கள்  தன்னிடம் சொன்னதை பகிர்ந்து கொண்டார்வரலாற்றாசியர் நாகசுவாமி அவர்களைப் பற்றியும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தார்குரு சீட உறவு என்பது ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று என தோன்றியது. ஜெவின் புத்தகங்களையும் கட்டுரைகளையும் மூன்று நாட்களும் சுட்டிக்காட்டினார். ’ உங்களை ஆலயக்கலைக்கு கொண்டு வருவது மிக மிக எளிது. ஏனெனில் நீங்கள் அனைவரும் இலக்கியவாசகர்கள்என்று சொல்லி 50 க்கும் அதிகமான புத்தங்களை பரிந்துரை செய்தார். தொடர்பான இலக்கியத்தை வாசித்துவிட்டு சிற்பங்களைக் காண்பதை அடிக்கோடிட்டார்.

பலவித ஹஸ்தங்கள், மூன்று நிலை இருப்புகள், ஆடை, ஆபாரணங்கள், சிகை, ஆயுதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிற்ப மொழியை விரிவாக விளக்கினார்.  ஹஸ்தங்களை ஒரு தேர்ந்த நடன கலைஞரின் அழகுடன் பிடித்துக் காண்பித்தார். ஆறடிக்கு மேல் இருந்த ஜே கே மேடையில் ஊர்த்துவ ஜானு ஸ்தானத்தில் நின்றபோது விஸ்வரூபமாக தெரிந்தார். ஆசிரியர் பற்றிய விஸ்மய ஹஸ்த மனநிலை வாய்த்தது.

சிற்பம் என்பது பிரபஞ்ச உண்மை வெளிப்படும் ஒன்று என்று கூறி ஓரிரு சிற்பங்களின் தத்துவத்தை விளக்கினார். சோமாஸ்கந்தர். இளமுருகு உடனுறை அம்மையப்பர் சிற்பம் சத் சித் ஆனந்தத்தை குறிக்கிறது என்றும் நடராஜர் சிற்பம் சிருஷ்டி, காத்தல், அழித்தல், அனுகிரகித்தல், மாயை மறைத்தல் என ஐந்து கிருதங்களைக் குறிக்கிறது என்றும், பரம், வியூகம், விவபம், சார்ச்சை, அந்தர்யாமி என் ஐந்து நிலைகளில் விஷ்ணு காணப்படுகிறார் என்றும் விளக்கினார்.

கோயில் விமான அமைப்பை வகைபடுத்துவதில் உள்ள தென்னிந்திய மற்றும் வடஇந்திய மரபுகளை வேறுபடுத்திக் காட்டினார். தென்னிந்திய வகைபாட்டில் என்கோண சிகரம் திராவிடம், சதுர சிகரம் நாகரம், வட்ட சிகரம் வேசரம் என்றும் வட இந்திய வகைபாட்டில் சதுர சிகரம் திராவிடம்  சோளக்கருது வடிவ சிகரம்  நாகரம், வட்ட சிகரம் வேசரம் என்று ஜே கே அவர்கள் தெள்ளத் தெளிவாகத்தான் சொன்னார். ஆனால் மீண்டும்இது என்ன வகை விமானம்?’ என்று அவர் கேட்டபோது அனைவரும் மிகச்சரியாக தவறான பதிலை அளித்தோம்.

பல்லவ சிற்பங்கள் ஒரு motion picture என்று விவரித்து சிற்பங்களின் dynamic தன்மையைப் பற்றி பேசியது எனக்கு மிக நல்ல திறப்பாக அமைந்தது. நடராஜர் ஐந்து கிருதங்களையும் நம் கண் முன் மோன நிலையில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் என்றார். அர்ஜுன தவம் என்றழைக்கபபடும் Descent of the Ganges மழைக்காலங்களில்  நீர்வழிந்து மேலும் சிறப்பாக கண்முண் நிகழும் என்றார். மேலும் உலகளந்த பெருமாளின் கால் நாம் காணும் தோறும் உயர்ந்துகொண்டே இருக்கிறது என்றார்அசல சிற்பங்களின் சல நிலையை விவரித்தார்.

மேலும் சிற்ப அளவுகளில் பயன்படும் தாளமானம் என்ற சொல் குறித்து ஜே கே அவர்களிடம் கேட்டேன்.  அளவுகளின் ratio வாகத்தான் இருக்கும் என்பது என் புரிதல். சரிதான். flow of thought கூட தாளம்தானே என்றார். In temples, Stones flow in rhythm என்ற என் வரியை அடைந்தேன்.

பல்லவ மன்னர்களின் குடைவரை, ஒற்றைக்கல் கோயில்கள், கட்டப்பட்ட கோயில்கள், தூண்களின் தோற்றமும் வளர்ச்சியும், ஆதிஷ்டான வகைகள் பற்றி மட்டும்தான் முதலில் பேசினார். முகாமில் யாருமறியாமல் ஊடுருவியிருந்த பாண்டிய ஆபத்துதவி ஒருவர்பாண்டியர்களின் கற்றளிகளைப் பற்றி பேசாமல் வெள்ளிமலைவிட்டு கீழே இறங்கமுடியாதுஎன்று தனியாகச் சென்று ஜே கே வை மிரட்டியிருக்கிறார் என்பது பின்புதான் எங்களுக்கு தெரியவந்தது. அதனால்தான் பாண்டியர்களை பற்றியும் பேசுகிறேன் என்றார் ஜே கே. ஆபத்துதவிக்கும் ஆசியருக்கும் நன்றி. பின்பு தஞ்சை பெரியகோயில் பற்றி விரிவான ஒரு வகுப்பெடுத்தார்.

அடிப்படை புரிதல்கள் சிலவற்றைப் பெற்றோம். Pallava Style temple என்று சொல்லக் கூடாது. பல்லவர் கால கோயில் என்றுதான் சொல்லவேண்டும் என்பதை அழுத்திக்கூறினார். Style என்பது மன்னர்களுக்குத் உரித்தானது அல்ல. சிற்ப கலைஞர்களுக்கு உரியது. நந்தியின் ஆதார் அட்டையிலும் புழக்கத்திலும் நந்தி என்று இருந்தாலும் நந்தியை ரிஷபம் என்றுதான் அழைக்கவேண்டும்

என்னது? நந்தி வளராதாபிள்ளையார் பால் குடிக்க மாட்டாரா? உண்மையாகவா?’ போன்ற டீ பிரேக் கேள்விகளுக்குசேச்சேஎன்றுச் சொல்லி ஜே கே முற்றுப்புள்ளி வைத்தார்.

நண்பர்கள் சிலர் மூன்று நாட்களும் ஜெ எழுதியிருக்கும்கிராமியச்சூழல் டீக்கடைவரை காலை நடைச்சென்றோம்ஜெவின் கருத்துகளை ஜெவைப் போலவே பேசி டீக்கடை முன் நின்றோம். பெஞ்சில் அமர்ந்தோம். பால் இல்லாத டீ சாப்பிட்டோம். ஜெவைப் போலவேகொஞ்சம் கொஞ்சமாக ஜெயமோகமுகிகளாகவோ முகர்களாகவோ மாற முயன்றுகொண்டிருந்தோம்.

சங்கிலி அணிந்த தெய்வத் திருமேனி ஒன்றைக் காட்டிஇவர் யார்?’ என்று ஒரு வகுப்பில் ஜே கே கேட்டார். நண்பர் ஒருவர் பட்டென்றுசங்கிலி முருகன்என்று பதில் சொல்லி ஆசிரியரையே ஒரு கணம் திகைக்க வைத்தார். ஆபரணங்கள் அணிந்த சிற்பங்ளை அடையாளம் காணும் ஒரு புதுக்கோணம் கிடைக்கப்பெற்றோம்.

வடமொழி குளறுபடிகள் சில நிகழ்ந்தன. Suchi ஹ்ஸ்தத்தை சுசி என்றோம். Suchi என்பது முதலில் Susi என்ற பெண்வடிவமாகி பின் Sushi என்ற மச்ச அவதாரம் எடுத்து ஜப்பானியர்களின் வாயில் விழுந்தது.   ஊர்த்துவ ஜானுவின் முட்டி மோதிச் சிதறியது.

ஜே ஜே சமஸ்கிருதத்தின் தொகுப்புத்தன்மையைப் பற்றி பேசினார். ஒரு காலத்தில் சமஸ்கிருதம் ஞானத்தை தொகுக்கும் மொழியாகவும் அரசு மொழியாகவும் இந்தியாவில் இருந்திருக்கிறது. எனவே அதை ஒவ்வொருவரும் கண்டிப்பாகக் கற்க வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்திக்கூறினார். சமஸ்கிருதம் இல்லாமல் இந்தியாவை அணுகுவது ஒரு கண் இல்லாமல் இந்தியாவை காண்பதற்கு சமம் என்றார். மானுட ஞானப்பூக்களை கோர்க்கும் ஒரு பட்டு நூல்தானே மொழி.

வகுப்புகளில் தமிழ் மக்களின் ஆலயம் காக்கும் முறையை அவ்வப்போது மென்மையாகச் சாடினார். ‘Sustain your heritage and feel glorious’ என்ற தொல்லியல் ஆப்த வாக்கியத்திற்கு தமிழ் மக்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தைகள் எண்ணில் அடங்காதவை. கோயிலுக்கும் சிற்பங்களுக்கும் வெள்ளையடிப்பது, ’இதெல்லாம் யார் சார் படிக்கப்போறாஎன்று கல்வெட்டு எழுத்துக்களின் மேலேயே டிரில் போடுவது, கண்ட இடங்களில் சின்டெக்ஸ் தொட்டிகள், ஏசிகள் என ஜன நாயக மக்களின் கோயில் திருப்பணிகளின் சான்றுகள் பல. பிரவீன்மோகன் போன்றவர்களை மட்டும்அப்பால போ சாத்தானேஎன்றார்.

முகாம் முடிந்து ஜே கே அவர்களிடமும் நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கோவை விமான  நிலையத்தை அடைந்தால் அங்கு ஒரே பரபரப்பு. போலீஸ், மீடியா என. ’மலடா. அண்ணாமல.’ என்று அண்ணாமலையாக நடித்த நடிகர் ரஜினிகாந்த் முதலில் வந்தார். சிறிது நேரத்தில் அண்ணாமலையாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அண்ணாமலையும் வந்தார். முன்னவர் போலீஸ் சூழ உள்ளேச் சென்று டாடா காட்டினார். பின்னவர்உங்கள் ஒவ்வொருவரின் பிரச்சனையைத்  தீர்க்கத்தான் ஜெட் விமானத்தை பிடிக்க மிக வேகமாக போய்க்கொண்டிருக்கிறேன் மக்களே. வழி விடுங்கள் வாக்காள பெருமக்களே!’ என்று நம்பிக்கை வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அள்ளிதெளித்துக்கொண்டே சென்றார்.

இரவு 10:30 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை அடைந்தேன். சோபா கம்பெட் டைப்பில் நிறைய சிவப்பு நிற லெதர் இருக்கைகள் இருந்தன. காலியாக இருந்த ஒன்றின் அருகில் சென்று முதலில் நின்ற கோலத்தில்தான் நின்றேன். எப்போது கிடந்த கோலத்தை அடைந்து சயன கோலத்தில் சரிந்தேன் என்றெல்லாம் தெரியவில்லை.  

சட்டென்று விழித்துப் பார்த்தால் கண்களுக்கு முன் ஓரடி தூரத்தில் இரு பாதங்கள். ஒட்டிப் போடப்பட்டிருந்த அடுத்த சோபாவில் இருந்து என்னை நோக்கி நீண்டிருந்தன.  மூன்று சுருள் மெட்டி ஒன்று  விரலில் இருந்தது. வெண்மை கருமை நிற கண்ணாடி குண்டுமணிகளை ஒருவரிசையாக தொடுத்த கொலுசு. அதில்  ஒரு மைக்ரோ நட்சித்திரம் ஆடியது. முப்பது அடி உயரத்தில் இருந்த விளக்குத்தொகுதிகளின் ஒளி குண்டுமணிகளுக்கு இடையே உள்ள மிகச்சிறிய உலோக வளையங்கள் ஒன்றில் பட்டு ஒரு மின்னும் ஒளித்துளி என் விழிகளை அடைந்தது. கிளம்பும்போதோ அதற்கு முன்னோ அந்த முகத்தை காண விரும்பவில்லை.

விடியற்காலை 4:45 மணிக்குத்தான் விமானம். அதற்காக தூங்கி எழுந்துகாபியம் படித்துக்கொண்டே காபி குடிப்பது மிக ஆபத்தானது. நேரம் போனது தெரியவில்லை எனக்குரிய கேட்டை அடைந்தால் இருக்கைகளில் பயணிகள் யாரையும் காணவில்லை. இன்னும் வரவில்லை போல என்று நினைத்து இந்த நேரத்தில் செல்போனுக்காவது சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளலாமே என்று  சார்ஜ் போட்டப்போதுதான் உறைத்தது. அனைத்துப் பயணிகளும் அவரவர் விமான இருக்கைகளில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதால்தான் இங்கு இருக்கைகள் காலியாக இருக்கின்றன என.  அவசரமாக சென்றுபெங்களூர் சண்டிகர்என்றேன். ’ஒன் மோர் பேசஞ்சர்’ . ’ஒன் மோர் பேசஞ்சர்என்று கருவியில் கத்திஎங்கிருந்துதான் வந்துச் சேர்கிறீர்களோ?’ என்று மண்டையில் அடித்துக் கொண்டது உடல் மொழியில் வெளிப்பட்டது.

நான் பதட்டமில்லாமல் கேட்டை தாண்டி விமானத்தை நோக்கி நடக்க என்னை கடந்து ஒர் இளைஞர் திபு திபு என ஓடினார். பாவம்! உண்மையிலேயே விமான நிலையத்திற்கே லேட்டாக வந்திருப்பார் போல. இதுபோல ஓடிவந்து கடைசி நிமிடத்தில் விமானத்தை மிஸ் செய்தால் கூட கொஞ்சம் கெளரவமாக இருக்கும். விமான நிலையத்திற்கு ஆறு மணி நேரம் முன்பே வந்து பிரிய எழுத்தாளரை வாசித்துக்கொண்டு விமானத்தை மிஸ் செய்திருந்தால் அது என்ன வகையில் வரும்?

விமானம் விடியற்காலை இருளை கிழித்துக்கொண்டு மேலேறியது. சிறிது நேரத்தில் கிழக்கே  நான்கு நிறப்பட்டைகளாக வானம். கீழே பூமிவரை விரிந்த கரிய பட்டை. அதற்கு மேலே சிவப்பு. பின்பு அடர் சாம்பல். அதன் மேலே விரிந்த நீலம்.

கீழே தக்காணம், மத்திய மற்றும் வட இந்திய நிலங்களில் இருந்த முதன்மை சிற்ப  நகரங்களை ஒவ்வொன்றாக தாண்டி அதிவேகத்தில் பறந்துகொண்டிருந்தேன். ஹம்பி, அஜந்தா, சாஞ்சி, தியோகர், குவாலிய்ர், மதுரா,  தில்லி என.  

மீண்டும் சிற்பங்களின் dynamic தன்மையை நினைத்துக்கொண்டேன். மிக உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது. நடராஜர், உலகளந்த பெருமாளின் வெளிக்கு மிக அருகில் வந்தது போன்ற உணர்வு.  அருகில்தான் கைலாயத்தில் எங்கோ சிவன் ஆகாய கங்கையை தன் சடையில் வாங்கிகொள்கிறார்.

தஞ்சை கோயிலில் லிங்கத்தை பூஜை செய்யும்போது 216 அடி ஸ்ரீவிமானத்தை நோக்கியும் ஒரு மலரை வீசுவார்கள் என்று ஜே கே அவர்கள் சொன்னார். 30000 அடி உயரப் பறக்கும் ஆகாய விமானம் ஒன்றிலிருந்து, நானும் ஒரு மலரை எடுத்து நிஷ்களத்தை நோக்கி வீசினேன்.

அன்புடன்,

ராஜா

முந்தைய கட்டுரைதியானம், உளக்குவிப்புப் பயிற்சி முகாம்
அடுத்த கட்டுரையோகமும் கொண்டாட்டமும் – கடிதங்கள்