சித்திரம் பயில்தல், கடிதம்

அன்புள்ள ஜெ,

மேலை ஓவிய ரசனை வகுப்பில்மணிகண்டன் அவர்கள் மிக விரிவாக ஓவியங்கள் குறித்து விளக்கும் போது  ‘ஆழத்தின் புலன்வடிவ சித்திரமே நீர்’ என்னும் கொற்றவையின் வரி மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து கொண்டே இருந்தது. அச்சம் தரும் எல்லையற்ற இயற்கை ஒலி கொண்டதன்பின் கைக்கு அடங்கியது போல ஒலி சொல்ல இயலாத ஒன்று சித்திரம் கொண்டதன் பின் உள்ளத்திற்கு வசப்படுகிறது. கனவுகளுக்குள் சென்று நம்மை ஆள்கிறது.

பொதுவாக ஓவியங்கள் குறித்து அறிமுகமும் மேற்கத்திய ஓவியங்கள் குறித்த விரிவான அறிமுகமும் இந்த வகுப்பில் கிடைத்தது.  ஓவியம் மற்றும் புகைப்படம் தொடர்பாகவும் ,புகைப்படங்கள் குறித்து விரிவாக விளக்கிய பின்னர் வெறும் பத்து புகைப்படங்களை வைத்து ஒரு நாட்டையே வென்றெடுக்க முடியும் என்று மணிகண்டன் சொன்னது  சற்று ஆடிப்போய் விட்டேன். ஆனால் பிறகு நிதானமாக யோசித்தால் அதன் உண்மை புரிந்தது. ஒரு பண்பாட்டையே கட்டி எழுப்பக்கூடிய‌ மாபெரும் ஆற்றல் காண்பியல் கலைக்கு இருப்பதை அறிய முடிந்தது. அமெரிக்க கனவு என்னும் மாபெரும் கலாச்சார உருவாக்கம் குறித்தும் மணி விளக்கியதும் சுவாரஸ்யமாக இருந்தது.  மேற்கிலிருந்து கிழக்கு வரை தனது முழு நிலத்தையும் காட்சிப்படுத்தி எமர்சனும் தேரோவும் எழுப்பிய அடிப்படை தத்துவ கருத்ததுக்களிலிருந்தது அமெரிக்கா தன்னை நன்றாக விளக்கிக் கொண்டு முன்னெழுந்த வரலாறும் நேர்மாறாக பண்பாட்டு கலாச்சார கல்வியை கைவிட்டதால் நாம் அடிமையான வரலாறும் நம்முன் உள்ளது.

மானுட அறிதல் மூன்று வழிகளிலாக செயல்படுகிறது. உள்ளுணர்வு , கற்பனை , தர்க்கம். ஓவியம் உள்ளுணர்வு  மற்றும் கற்பனை வழியான அறிதல் முறையில் மிக முக்கியமானது . ஏனெனில் மனித மனம் படிமங்களாலானது. ஓவியம் நேரடியாக ஆழ்மனதின் படிமங்களுடன் உரையாடுகிறது. தன்னிலை/ சிந்தனை என்பது மொழியாலானது. எனவே காண்பியல் கலை , குறிப்பாக ஓவியம் என்பது இந்த தன்னிலையை கடக்க உதவுவது.

மேலை ஓவிய மரபின் வரலாறை குறுக்குவெட்டாக இந்த வகுப்பில் அறிய முடிந்தது.  பிளேட்டோ – அரிஸ்டாட்டில், காண்ட், ஷோப்பனோவர் , டெகார்த்தே, அக்வினாஸ் , வால்டேர் , ரூஸோ , ஃபூக்கோ , ரஸ்கின் பாண்ட் என தத்துவ ஞானிகளின் சிந்தனைகளை விரிவாக விளக்கி அதனுடன் அக்காலத்திய ஓவியங்களை இணைத்து புரிந்து கொள்ள மணி கற்றுக் கொடுத்தார்.    பிறகு நவீன காலத்திய ஓவியங்கள் குறித்து மிக விரிவாக விளக்கினார்.  கியோட்டோ (Giotto) முதல் ரெம்ப்ரான்ட், வான்கா, கோயா ( Gaea) , மைக்கேல்ஏஞ்சலோ ,  செவரெட் முதல்  பின்-பின் நவீனத்துவ படைப்பாளிகளான Ai Wei Wei, Yoko ono, Bill Viola என விரிவான அறிமுகம் கிடைத்தது ‌.

இரண்டரை நாட்கள் மணிகண்டன் அவர்கள் வகுப்பெடுத்தை நான் மிக மிக சுருக்கமாக மேற்சொன்ன பத்தியில் சொல்லியிருக்கிறேன். ஆனால் இப்போது குறிப்புகளை எடுத்துப் பார்த்தால் எவ்வளவு விரிவாக மெனக்கெட்டு விளக்கினார் என்பது தெரியவருகிறது.  கோத்திக் காலகட்டம் ஒருவகையான இருண்ட காலகட்டம் என நினைத்திருந்தேன். கத்தோலிக்க மரபையும் விக்டோரிய மரபையும் குழப்பி புரிந்து வைத்திருந்தேன். நவீன ஓவியங்களை வெறும் கிறுக்கல்கள் என நினைத்திருந்தேன். ஆனால் ஒரே வகுப்பில் ஓவியத்தின் அடிப்படையும் ஓவிய மரபின் வரலாறும் முக்கியத்துவமும் பிடிபட்டுள்ளது. மிக முக்கியமாக அழகியல் என்பதன் உள்ளர்த்தம் விளங்குகிறது. சரியான இலக்கிய ரசனைக்கும் ஓவிய ரசனை எவ்வளவு முக்கியமானது என விளங்கியது.

சர்வ நிச்சயமாக இது மிக முக்கியமான பயிற்சி முகாம் ஜெ. இயன்றால் மீண்டும் ஒருமுறை இந்த முகாமில் கலந்து கொள்ளவே முயல்வேன்.   ஓவிய ரசனையின் சுவையை காட்டிய மணிகண்டன் அவர்களுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ஜெ.

சங்கரன்.

முந்தைய கட்டுரைபெண்கள் யோகம்- கடிதம்
அடுத்த கட்டுரைநாலாயிர திவ்யப் பிரபந்த வகுப்புகள் அறிவிப்பு