சைவம், கடிதம்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு.

வணக்கம். நித்யவனத்தில் நடைபெற்ற பயிற்சி முகாம் ஒன்றில் முதன் முறையாகக் கலந்து கொண்டேன். சைவத் திருமுறைகள் முகாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் சட்டென்று உந்தப்பட்டு, ஏன் கலந்து கொள்ள இயலாது என்ற எண்ணங்கள் மனதில் உருவாகுவதற்கு முன்னமே, மின்னஞ்சல் அனுப்பி என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். நல்லதாகப் போயிற்று.

பயிற்சிக்குப் போகும் முன் இந்த முகாமை எப்படி கட்டமைக்கப் போகிறார்கள் என்ற கேள்வி தான் முதன்மையாக என் மனதில் இருந்தது. சிவபக்தியில் திளைத்த சமயக்குரவர்களின் பக்தி தோய்ந்த வரிகளை இலக்கியம், கலை, தத்துவம் என்று தொடர்ந்து பல பயிற்சிகள் மூலம் பயணித்து வரும் நண்பர்களுக்கு எவ்வாறு பரிச்சயம் செய்து வைப்பார்கள் என்று யோசித்தேன். என்ன செய்வது நானும் ஒரு பயிற்சியாளன் (ஒன்றும் உருப்படியான துறையில் அல்ல, அதை விடுங்கள்!) ஆகவே இது போன்ற கேள்விகள் தான் அதிகம். Occupational hazard!

பயிற்சி முகாம் ஆரம்பித்த சிறிது நேரத்திற்குள்ளேயே என் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது

எல்லோருக்கும் நன்கு அறிந்த செய்தி என்றாலும் மறுபடியும் கூறுவதில் தவறில்லை. பயிற்சி முகாமை நடத்திய மரபின் மைந்தர் திரு. முத்தையா அவர்கள் ஒரு மிகவும் தேர்ந்த பயிற்சியாளர். சைவத் திருமுறைகளை ஒரு காட்டாற்றின் வெள்ளத்தோடு ஒப்பிட்டு விட்டு அதில் பயிற்சி முகாமில் பங்கேற்பவர்கள் காலை நனைக்கவும், சற்றே முன் சென்று கணுக்கால் வரை  புரண்டோடும் நீரை சற்று எடுத்து பருகவும் அழகான சிறு படித்துறைகளை அமைத்தார் திரு முத்தையா.

ஒரு படித்துறையில் நின்று கொண்டு அங்கிருந்து தெரியும் சில காட்சிகளை சுட்டினார். இங்கே பாருங்கள் இக் கவிகளின் உவமையணியைபால் முதிர் தலை வணங்கி’ – ஒரு சிவனடியார் மற்றொரு சிவனடியாரை கண்டு வணங்குவது முற்றிய நெற் கதிர்கள் தலை தாழ்த்துவது போல் இருக்கிறது. அதோ பாருங்கள் இவ்வரிகள் திரண்டு வந்த சமூகச் சூழலை. மருள்நீக்கியார் தர்மசேனன் ஆனதன் உளவியல் காரணங்கள் அதோ

இப்படிச் சொல்லிக் கொண்டே மெதுவாக, மிக இயல்பாக அவர் அமைத்த இன்னொரு துறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே நாங்கள் நிற்கவில்லை, அமர்ந்து கொண்டோம். கவியலங்காரங்கள் தாண்டி உணர்வுகளால் ஆன இடம் அது. சில பதிகங்களை அவர் உரக்கப் படிக்க கண் மூடி அவற்றை செவியுண்டு, திரும்பச் சொன்னோம்சிவனடியார்களின் கண் களி கூர நுண் துளி அரும்புவது இந்த அழகு செறிந்த வரிகளை உள் வாங்கி உணர்வதின் மூலமாகவே என்பதை மிக அழுத்தமாக நிரூபித்தார் திரு முத்தையா.  

இரண்டரை நாட்கள் எல்லோருமே கட்டுண்ட நாகங்கள் போல இருந்ததற்கு மிக முக்கியக் காரணம் திரு முத்தையா அவர்களின் புலமை. கம்பனிலிருந்து கண்ணதாசன் வரை, பாரதியிலிருந்து பாவேந்தர் வரை சரளமாக புரண்டு வரும் மேற்கோள்கள். எடுத்துக் கொண்ட தலைப்பை ஒட்டிய பல சுவாரஸ்ய துணுக்குகளை முக பாவங்களோடு பகிரும் திறமை. அவர் ஒரு நல்ல நடிகர் கூட என்பது வகுப்பில் நெருங்கி அமர்ந்து பார்த்த போது தான் தோன்றியது. என்னை பொறுத்த வரை அதுவும் தேவை தான்.

என் சக மாணவர்களில் பெரும்பான்மையானோர் நித்யவனத்தில் நடந்த பல்வேறு முகாம்களில் கலந்து கொண்ட veterans. நீங்க ஏன் ஜீ போன தத்துவ வகுப்புக்கு வரல என்றும் மாலை நடை பயணத்தின் போது அதோ அந்த மலையத் தாண்டி தான் ஜே நடந்து சென்று டீ குடித்தார் என்று பேசிக் கொண்டே இருந்தார்கள். நல்ல வேளை அந்தக் குறிப்பிட்ட டீக் கடையை எங்கேயோ ஏழு மலைத் தாண்டிய ஓர் இடத்தில சுட்டிக் காட்டிய என் சக மாணவர் அங்கே சென்று வரும் திட்டத்தை கை விட்டார்

சைவத் திருமுறைகளை பற்றி வீட்டில் அமர்ந்து கொண்டே நாம் யு டியூபில் கூடத் தெரிந்து கொள்ளலலாம் தான். தவறொன்றும் இல்லை. ஆனால், பதிகம் பாடும் நம் குரலோடு நம்மை சுற்றி உள்ளவர்களின் குரல்களும் சேரும் பொழுது அதன் வீரியம் பன் மடங்காவது போல, அப்போதைக்கேனும், தோன்றுகிறது. அந்த உணர்வு அமைவது இத்தகைய நிகழ்வுகளில் தான் என்பது என் எண்ணம்

சரி இது எதுவுமே இல்லையென்றாலும் சிவன் ஒரு மாணிக்க மலை போல இருக்கிறான் என்று கூறிய மறு வினாடியே நம் கண்கள் தன்னிச்சையாக வகுப்பறையை சூழ்ந்து உள்ள மலைகளின் மேல் படிகிறது. ஆசிரியர் தேவியை மயிலோடு ஒப்பிடும் பொழுது தூரத்தில் இருந்து மயிலோசை காற்றில் தவழ்ந்து வருகிறது. குழல் விளக்குகளை சுற்றி விட்டில் பூச்சி பறக்கும் இளம் இரவு நேர  வகுப்புகளில் சோதியனே என்று திரு முத்தையாவின் ஒரு சொல் நம் பார்வையை வானத்தில் செம்பொன் நிறத்தில் உதித்து நிற்கும் முழு மதியை நோக்கித் திருப்புகிறது

இவ் வரிகளை படிக்க நேர்ந்தால் பாடத்தை கவனிப்பதற்கு பதிலாக மற்ற எல்லாவற்றையும் கவந்திருக்கிறாயே என்று திரு முத்தையா அவர்கள் அவர் பாணியில் கூறக் கூடும். ஆனால், இந்த  அனுபவங்கள் எல்லாம் இது போன்ற வகுப்புகளிலும், சூழலிலும் மட்டுமே சாத்தியம்

ஒன்றை அறிவதற்கு சூழல் முக்கியம். அவ்வகையில் அதை உருவாக்கியதற்கு உங்களுக்கு நன்றி.

சிவனடியாரை காலில் வீழ்ந்து தொழுத பின்னர் அவர் கொடுத்த திருநீறை நெற்றியில் அணிந்து மீண்டும் அவர்கள் பாதம் பணிந்துபெருவாழ்வு வந்ததுஎன்று கூறுவது மரபு என்று திரு முத்தையா அவர்கள் வகுப்பில் சொன்னார்கள். என்னை பொறுத்த வரை இந்த இரண்டரை நாள் வகுப்புகள் அந்த திருநீற்றுக்கு சமானம். ‘பெருவாழ்வு வந்ததுஎன்று சொல்லி திரு முத்தையா அவர்களை வணங்குகிறேன்.     

அன்புடன் 

ரகு ராமன்.

முந்தைய கட்டுரைஆயுர்வேதம், கடிதம்
அடுத்த கட்டுரைஆலயப்பயிற்சி, கடிதம்