வணக்கம் திரு. ஜெ,
இது முதல் மடல், அல்லது முதல் ஆரம்ப மடல். இது வரை ஏன் எழுதவில்லை என்றால், அதற்கு சோம்பேறித்தனத்தையும், தயக்கத்தையும் காரணமாக சொல்லி கொள்ளலாம். ஆனால் இப்போதும் எழுதவில்லை என்றால் அது செய்ந்நன்றி கொன்ற துரோகத்தில் என்னை சேர்த்து விடும்.
முதற்கண் உங்களுக்கு நன்றி, இத்தகைய அறிவு பகிர்வுக்கு. எத்தனையோ வகுப்புகளுக்கு முயற்சித்தும், வெளிநாட்டு வாழ்க்கையால் விடுப்பும் வகுப்பும் இணையாமல் தள்ளி கொண்டே போனது. இந்த முறை விடுப்பில், வகுப்பு அறிவிப்பை பார்த்ததும் பாய்ந்து இணைந்து விட்டேன்.
ஈரோடு வந்த வரை எந்த முன்முடிவும் இல்லை, எப்படி நித்ய வனத்துக்கு வர போகிறோம் என்று. கூடவே, எங்கு எதற்கு என்ற, எந்த கவலையும் இல்லாமல், நான் கூட்டிப் போகிறேன் என்ற ஒரே தைரியத்தில் மனைவியும். சென்னையை தாண்டாத வாழ்க்கை அவருடையது. ஏதோ அந்தியூர், தாமரைக்கரை, மடம் என்று பல பெயர்கள். படித்ததோடு சரி. கமல் விக்ரமில் சொல்வது மாதிரி தான். “பார்த்துக்கலாம்“
முதல் உதவி, கவிப்ரியாவிடம் இருந்து, குறும் செய்தியாக. “நாங்கள் (பிரேமா அவர்களுடன்) கோயமுத்தூரில் இருந்து வருகிறோம். உங்களை வழியில் சேர்த்துக்கொள்கிறோம்” என்று. நன்றி.. நன்றி.. முதல் வெற்றி!!!
தாமரைகரை தாண்டி, இரண்டு கிலோமீட்டரில், சிற்றுந்து ஓட்டுநர் நிறுத்திக்கொள்ள நடுவழி(காடு?)யில் நிற்கிறோம். எதிர் வந்த ஓம்னியை மடக்கி, ஏறி அமர்ந்து ஆசுவாச படுத்தினால், நாங்கள் நின்ற இடத்தில் தான் அந்த யானை இருந்ததாக கைபேசி படத்துடன் பகீர் தகவல். “பார்த்துக்கலாம்” ல அர்த்தம் இருக்கிறது தான் போல….
உங்கள் தளம் மட்டுமே அறிமுகம் என்பதால், எல்லாரையும் புகைப்படமாகத்தான் அறிவேன். புத்தனுக்கும், தேவிக்கும் மரியாதை செலுத்தி முதல் வகுப்பு ஆரம்பம். நானும் மனைவியும் வந்தது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான். (வருவது மட்டுமே குறிக்கோள் அப்போது). முடிவில் தான் தெரிந்தது, நான் திருப்பி எடுத்துப்போவது “கொள்ளை” என்று. (அறிவு கொள்ளை)
அங்கு சுனில் திரையிட்ட வ. சுப. மாணிக்கனாரின் முதல் சங்கல்பத்திலேயே தெரிந்தது, நான் இருக்கும் குழுமம் வேறு என்று.
நல்லாவின் பால் முழுதும் கன்றுக்கில்லை
நறும்பூவின் மணம் முழுதும் சோலைக்கில்லை
நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை
நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை
பல்லாரும் கனி முழுதும் மரத்துக்கில்லை
பண்ணரம்பு இசை முழுதும் யாழுக்கில்லை
எல்லாமே பிறர்க்குழைக்கக் காணுகின்றேன்
என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும் வேண்டும்.
வாழ்வின் பெரிய நியதி. இந்த பிரபஞ்சத்தில் கொடுக்கப்படுவது எல்லாம் நமக்கு மட்டும் அல்ல!!!
குரு நித்யா கூடத்தில் வகுப்பும், உணவுக்கூடத்தின் திண்ணையில் இலக்கியமும், நடுநடுவே எல்லோருடைய அறிமுகமுமாக, இனிதே கழிந்தன நாட்கள் அங்கு.
காலை பனியில் ஒரு குறுநடை. மாலை சிறுவெயிலில் ஒரு நெடுநடை என உற்சாகம் குன்றாத சுற்றத்தார் அங்கு. சுனில் சாரின் செவிக்கு உணவு போல, மணி சாரின் வயிற்றுக்கு உணவும். மனதும் வயிறும் நிறைந்து செரித்த நிலை. போதுமான ஓய்வு, மறு வகுப்புக்கு ஊக்கம் கொடுத்தது. எதையும் திணிக்க வில்லை சுனில். அவர் கை கொள்ளா அறிவை விரித்து வைக்க, கொத்தும் பறவைகளாய் நாங்கள். …
கடைசி வரை பாடாமலே ஏமாற்றி விட்ட பாவனாவை, அடுத்த முறை கண்டிப்பாக விடுவதாக இல்லை.
உடன் இருந்தோர் எல்லாருக்கும் நன்றிகள். நிறைய இருக்கிறது சொல்ல. முதல் மடல் என்பதால் …… ம்ம்.
சுனில் சார், “ச்யவனப்ராச லேகியம்” இப்போ தின அனுபவம். பெரு நெல்லி தேனில் ஊறிக் கிடக்கு உண்ண.
“எந்துரோ மஹானுபாவலு… அந்தரிகி வந்தனம்“
அன்பன்
விஜயகுமார்