திருமுறை வகுப்புகள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

ஈஷா மையத்தில் யோகமும், தியானமும் கற்ற எனக்கு, தொடர்புடைய தென்கயிலாய பக்தி பேரவையில் வெள்ளியங்கிரி மலை யாத்திரையும் பல முறை வாய்த்தது.  இங்கும் அங்குமாக திருமுறை பாடல்களை கேட்டிருந்தாலும், அதற்க்குள் முறையாக நுழைய பல உரைகள் தேடி இருக்கிறேன்.   விஷ்ணுபுரம் விழாவில் அகரமுதல்வன் முதலானோரிடமும் உரைநூல் பரிந்துரை கேட்டு இருக்கிறேன்திருவண்ணாமலை உட்பட கோயில்களில் சுவற்றில் வரையப்பட்ட திருமுறைப் பாடல்கள் பொருள் கனியாததால் பெருமூச்சுடன் கடந்து வந்துள்ளேன்.  

இங்கு வகுப்பில், மரபின் மைந்தன் அவர்கள் செய்யுளை பண்ணிசையோடு பாட, திருமுறைகள் கட்டவிழ்ந்தது போல பொருள் ஈந்தன (அவருக்கு துணையாக ஈஷா சமஸ்க்ரிதி இல் பயின்று இங்கு வகுப்பில் பங்கேற்ற தேஜஸ் அவர்களும் பாடினார்).   சில பாடல்கள் எந்த முகவுரையும் இன்றி ஆசிரியரின் உச்சரிப்பில் கேட்டவுடனேயே பொருள் கொண்டு விளங்கின.   இயற்றிய அருளாளர்களுக்கும் எனக்கும் நடுவில் இருந்து திரை விலகி, அவர்கள் அருகில் நின்று அவர்களின் உணர்வு தோய்ந்து, திருமுறைகளை கேட்ட மாதிரி தோன்றியது.   ஒவ்வொரு பாடலுக்கும் ஆசிரியரின் முகப்புரைகளும், தொடர்புடைய மேற்கொள்களும், நயம் பட உரைக்கப்பட்ட கவி நயமும் வேறெங்கும் எனக்கு கிடைத்திருக்காது.   இந்நிகழ்விற்கு காரணமாக அமைந்த உங்களுக்கும், ஆசிரியர் மரபின் மைந்தன் அவர்களுக்கும்நிகழ உதவிய அனைவருக்கும்  எனது வணக்கங்கள்.

இந்த அறிமுக வகுப்பு, சைவ சித்தாந்த / தத்துவ விவாதங்களுக்குள் ஆழமாக செல்வதை தவிர்ப்பது.  சைவ திருமுறைகள் பற்றிய அறிமுகம் கொண்டவை.   இவற்றில் சில தத்துவ குறிப்புகளை சில சமயம் ஆசிரியர் கூறினாலும் (திரி புறம்மும் மலம்),  தத்துவ கேள்விகளை (சரியாகவே) அன்பாக திசை திருப்பி திருமுறைகள் உண்டாக்கும் உணர்வுகளை கவனிக்குமாறு கூறினார்.   வகுப்பிற்கு பிறகு இரவுணவு கூடத்தில் அன்பர்களுக்கு எழுந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொழுது சித்தர் பாடல்கள்,  சைவ மடங்கள் / ஆதீனங்கள், முக்கிய உரை நூலகள் (அவர்களின் ஆசிரியர்களின் தனித்துவங்கள்), சங்க இலக்கியங்களில் சிவம் என்று பல தலைப்புகளை தொட்டு,  ஒட்டுமொத்தமாக தமிழ் மண்ணில் சைவத்தின் ஒரு மன வரைபடத்தை அளித்தார்.

இங்கு வகுப்பில் படித்த, பாடிய பாடல்கள் சரி –  வீட்டிற்கு சென்று திருமுறைகளை படித்து பொருள் புரியா விட்டால் என்ன செய்வது என்றதற்கு,  ‘ஒரே வழி தான்,  பொருளுக்கு காத்திருக்காமல், அவற்றை மனனம் செய்து விடுங்கள்என்று ஆசிரியர் கூறியது, திருமுறைகளுக்குள் செல்ல ஆகச் சிறந்த அறிவுரை.  

பக்தியா தத்துவமா?

நெஞ்சுருக வைக்கும் பதிகங்கள் பாடி வந்த வகுப்பில், இவ்வாறு பக்தி இலக்கியத்தை பயிலுவது ஒரு வேளை தத்துவ பயிற்சிக்கு ஒரு படி கீழானதோ என்றெண்ணம் தோன்றாமலில்லை.   அப்பொழுது பக்தியும், தத்துவமும் சமமான இரு பாதைகள்;  ஒன்றின் இருந்து இன்னொன்றிக்கும் பின்னிப்  பிணைந்து செல்பவை; ஒன்றில் வரும் குழப்பத்திற்கு இன்னொன்று விடை அளிப்பவை என்று நீங்கள் எழுதிய வரிகள் விடையாக அமைந்தன (அந்த கட்டுரையில் ராமகிருஷ்ண பரமஹம்சரையும் குறிப்பிட்டிருந்தீர்கள் என்ற நினைவு).   இரண்டாம் நாள் எட்டாம் திருமுறையான திருவாசகத்தை பாடிய கட்டத்தில், இதற்க்கு மேல் எதற்கு வீணாக, சைவ சித்தாந்தம், தத்துவம் எல்லாம் பயின்று கொண்டு என்று தோன்றி விட்டது  

சைவ சித்தாந்தம் / திருமுறை:

தத்துவ அறிமுக வகுப்புகளைப் போல சைவ சித்தாந்த பயிற்சியை கற்போம் என்று சில நண்பர்கள் எண்ணி இருந்தது தெரிய வந்தது.  இதுசைவத் திருமுறைகள் அறிமுக வகுப்பு (சைவ சித்தாந்த வகுப்பு அல்ல)”, என்றே அடுத்த முறை போட்டு விடலாம்.  திருமுறைகளுக்குள் நுழைய ஆயத்தமாக, ஆசிரியர் அறிவுறுத்தியயார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத செயலுள்ளதோ?’, ‘இல்லாதன இல்லை இளங்குமரா…’, ‘முன்னோர் சொல்லை பொன்னே போல் போற்றுதல்என்று கூறியவை,  சரியான மனநிலையுடன் திருமுறைகளை உணர உதவியது.  

வந்திருந்த நண்பர்கள் இரவுகளிலும், வெள்ளிமலை செல்லும் மற்றும் திரும்பும் வழியிலும், தங்கள் அனுபவங்களை பேசிதத்தமிற் கூடினார்கள்‘.  நன்றி.

திருச்சிற்றம்பலம்.

அன்புடன்,

கோகுல்

பெங்களூரு 

முந்தைய கட்டுரைஇரண்டாம்நிலை தத்துவ வகுப்புகள்
அடுத்த கட்டுரைமருத்துவ அறிமுகம் ஏன்?