இலக்கியப் பயிற்சிகள் எவருக்காக?

அன்புள்ள ஜெ

இலக்கியத்தை கற்றுக்கொடுக்க முடியுமா? யாருக்காக இந்த இலக்கிய வகுப்புகள் நடைபெறுகின்றன? எந்த வகையான கல்விகள் கற்பிக்கப்படுகின்றன?

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன்

தொடக்கநிலையிலுள்ளவர்களுக்காகவே இந்த வகுப்புகள். இன்னும் வாசிக்க ஆரம்பிக்காதவர்கள், வாசிக்கும் ஆர்வம்கொண்டவர்களுக்காக இவை நடத்தப்படுகின்றன.

ஏறத்தாழ இருபதாண்டுகளாக நான் www.jeyamohan.in என்னும் தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறேன். வாசகர்கள் எழுதும் கடிதங்களில் என் இலக்கியப்படைப்புக்களை படித்துவிட்டு எழுதப்படும் கடிதங்களே பெரும்பாலானவை. அவற்றுக்கு நான் தொடர்ச்சியாக பதிலளிப்பதும் வழக்கம். மதம், தத்துவம், ஆன்மிகம் ஆகியவை சார்ந்த வினாக்களுக்குப் பதிலளிக்க ஆரம்பித்தேன். அதன்பின் தனிப்பட்ட முறையிலான கடிதங்களுக்குப் பதிலளித்தேன். இது ஒரு தொடர் உரையாடலாக ஆகியது. இருபதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் இது நடந்து வருகிறது.

இந்த உரையாடல்களில் இருந்து நான் புரிந்துகொண்ட சில பொதுவான பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நான் கீழ்க்கண்டவாறு தொகுத்துக்கொள்கிறேன்.

இலக்கியம்

  1. இலக்கியத்தைப் புரிந்துகொள்வதில் நம் வாசகர்களுக்கு பெரும் சிக்கல் உள்ளது. ஓர் இலக்கியப்படைப்பின் பொதுவான கருத்து என்ன, ஆசிரியர் சொல்லவருவது என்ன என்பதுதான் அவர்களின் பார்வையாக உள்ளது. ஓர் இலக்கியப்படைப்பு ஓர் அனுபவத்தை அளிக்கிறதே ஒழிய ஒரு கருத்தை அல்ல என்று அவர்களுக்குத்தெரியாது. ஓர் இலக்கியப்படைப்பின் உள்ளடக்கம் அல்ல அப்படைப்பின் அழகியலே முக்கியமானது என்று தெரியாது. அதை எப்படி கண்டடைவது, ரசிப்பது, எப்படி வகுத்துக்கொள்வது என்று தெரியாது.
  2. மற்றெந்த துறைகளை விடவும் இலக்கியப்படைப்புகள்தான் மிகமிக அதிகமாக சமகால அரசியலாளர்களால் தாக்கப்படுகின்றன. ஆகவே இலக்கியப்படைப்புகளைப் பற்றியும் இலக்கியவாசகர்களைப் பற்றியும் ஏராளமான தவறான முன்முடிவுகள் உருவாகியுள்ளன. அந்த முன்முடிவுகளை அரசியல்வாதிகள் பரப்புகிறார்கள். அவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். பெரும்பணம் உள்ளது. ஆகவே அந்த முன்முடிவுகள்தான் பலருக்கும் கிடைக்கின்றன. தங்கள் அரசியலுக்கு ஏற்ப அரசியல்வாதிகள் இலக்கியவாதிகளைப் பற்றி உருவாக்கியிருக்கும் காழ்ப்புகளைக் கடந்து இலக்கியத்தை வாசிப்பதென்பது இன்று மிகவும் கடினம்.
  3. இலக்கியத்தை வாசிக்க ஆரம்பிக்கையில் எங்கே தொடங்குவது, எந்தெந்த நூல்களை முதலில் வாசிக்கலாம் என்பது இன்று மிகவும் முக்கியமான கேள்வி. அதை கல்விமுறை கற்றுக்கொடுப்பதில்லை
  4. இலக்கியப்படைப்புகளை வாசிக்கையில் கொஞ்சமேனும் இலக்கிய அழகியலில் அறிமுகம் தேவைப்படுகிறது. ஒரு படைப்பு யதார்த்தமாகவும் இன்னொரு படைப்பு உணர்ச்சிவேகத்துடனும் இருக்கிறது. ஒருவர் யதார்த்தமான எழுத்து உயர்ந்தது என்றும், உணர்ச்சிகரமானது பொய்யானது என்றும் முடிவுக்கு வந்தால் அவர் இலக்கியத்தை இழக்கிறார். யதார்த்தவாதம் (ரியலிசம்) கற்பனாவாதம் (ரொமாண்டிசிசம்) என இரண்டு அழகியல்கள் உள்ளன என்று தெரிந்துகொண்டு இரண்டையும் கற்றுக்கொண்டால் அவர் விரிவான பார்வையை அடைய முடியும்.
  5. இன்றைக்கு ஒரு நூலை கவனம்குவித்து வாசிக்கவே பயிற்சி தேவைப்படுகிறது. ஒரு நூலை தொடர்ச்சியாக 20 பக்கமேனும் வாசிக்காமல் அந்த நூலின் மனநிலைக்குள் செல்லமுடியாது. விட்டுவிட்டு ஒரு பக்கம் இரண்டு பக்கம் என்று வாசித்தால் அந்த மனநிலை அமையாது. கூர்ந்து வாசிப்பதை இன்று பலவிஷயங்கள் தடுக்கின்றன. ஏராளமான கவனச்சிதறல்கள் உள்ளன. ஆகவே வாசிப்பதற்கான பயிற்சியை அளிக்கவேண்டியுள்ளது
  6. இலக்கியவாசிப்பின்போது வெறுமே கதைகளை, கவிதைகளை வாசிக்கலாம். ஆனால் ஒரு நாவல் என்றால் எந்த வடிவில் இருக்கும், ஒரு சிறுகதை எந்த வடிவில் இருக்கும் என்ற வடிவஅறிமுகம் திறன்மிக்க வாசிப்பை உருவாக்கும். வாசகர் மெல்ல எழுத்தாளர் ஆவதற்கும் உதவும்.
  7. இலக்கியவாசிப்பின் கடைசிப்படி என்பது அதைப்பற்றி சிந்திப்பதும், மனதுக்குள் தொகுத்துக்கொள்வதும்தான். அப்படி தொகுத்துக்கொள்ள சிறந்த வழி என்பது அவற்றைப்பற்றி பேசவும், எழுதவும் முயல்வது. அதை இயல்பாகச் செய்யமுடியாது. ஒரு பயிற்சி அவசியம். ஒரு பக்கம் எழுதுவது, அல்லது 7 நிமிடம் உரையாற்றுவது என்பது ஒரு நல்ல தொடக்கம். பேசுவதும் எழுதுவதும் சிந்தனைக்கான பயிற்சியும்கூட.

மேற்கண்ட பயிற்சிகளையே நாங்கள் அளித்து வருகிறோம். இவை இலக்கியப் பயிற்சிகளாக இருந்தாலும் பொதுவாக அறிவுசார்ந்து செயல்படும் எல்லா துறைகளுக்கும் பொருந்துபவை. பல வழக்கறிஞர்கள் வழக்குகளை கூர்ந்து பயிலவும் தொகுத்துக்கொள்ளவும் இவை உதவியானவை என்று சொல்லியிருக்கிறார்கள். போட்டித்தேர்வுகளுக்குப் பயில்பவர்கள் ஏராளமாகக் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

ஜெ

நிகழவிருக்கும் இலக்கிய அறிமுக முகாம்கள்

குரு நித்யா இலக்கிய விழா மே 24 25 மற்றும் 26 ஆம் தேதிகளில்

வைணவ இலக்கிய அறிமுகம்  ஜூன் 28, 29 மற்றும் 30

வாசிப்புப் பயிற்சி நிகழ்வு  ஜூலை 19 மற்றும் 20 தேதிகள். (வெள்ளி, சனி)

 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

முந்தைய கட்டுரைசைவசித்தாந்தமும் தத்துவக் கல்வியும்,ஒரு வினா
அடுத்த கட்டுரைமருத்துவ அறிமுகம், கடிதம்