சைவசித்தாந்தமும் தத்துவக் கல்வியும்,ஒரு வினா

அன்புள்ள ஜெ,

இன்றைய சூழலில் பல்வேறு இடங்களில் சைவசித்தாந்த வகுப்புகள் நிகழ்ந்து வருகின்றன. வைணவ சித்தாந்த வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. ஒரு நவீனச் சூழலில் இந்த வகுப்புகளில் கற்பதனால் என்ன நன்மை? இந்தக் கல்விக்கும் வழக்கமான சைவசித்தாந்தக் கல்விக்கும் என்ன வேறுபாடு? நான் தெரிந்துகொள்வதற்காக இதைக் கேட்கிறேன்.

ஜே.எஸ்.முருகானந்தம்

அன்புள்ள முருகானந்தம்,

மதக்கல்வி எல்லாச் சூழலிலும் நடந்துகொண்டுதான் இருக்கும். மதக்கல்வி இரண்டு வகை. ஒன்று மதப்பிரச்சாரம், இன்னொன்று மதத்தைப் பயில்தல். மதப்பிரச்சாரம் பிறரிடம் ஒரு மதத்தை முன்வைப்பது. மதக்கல்வி என்பது ஒரு மதத்தவர் தங்களுக்குள் அதை பயில்வது.

நாம் கவனித்தாக வேண்டிய ஒன்று உண்டு. சென்றகாலத்தின் தத்துவம் முழுக்க முழுக்க மதத்திற்குள்தான் உள்ளது. இந்து, பைத்த, சமண, கிறிஸ்தவ, இஸ்லாமிய, தாவோயிச மதங்களிலேயே தத்துவத்தின் கடந்தகாலம் உள்ளது .மதம்சாராத தத்துவம் என்பது ஐரோப்பாவில் நாநூறாண்டுகளுக்கு முன் உருவாகி வந்தது. (சாக்ரடீஸ் பிளேட்டோ போன்றவர்கள் எல்லாம் கிரேக்க மதத்தைச் சேர்ந்த தத்துவ சிந்தனையாளர்கள்தான்) இந்தியாவில் மதம்சாரா தத்துவம் அறிமுகமாகி இருநூறாண்டுகள் ஆகவில்லை.

தத்துவத்தைப் பயில்வதென்றால் அதன் தொடக்கம் முதலே பயின்றாகவேண்டும். தத்துவத்தில் காலம் என்பது மேலோட்டமாகவே உள்ளது. எந்த தத்துவமும் காலாவதியாவதில்லை. ஏனென்றால் தத்துவம் காலம் கடந்தது. என்றென்றுமுள்ள அடிப்படையான கேள்விகளையே தத்துவம் தன் பேசுபொருளாகக் கொண்டுள்ளது. நேற்றைய தொடர்ச்சியை கருத்தில் கொள்ளாமல் இன்றைய தத்துவத்தை பேசினால் அது அபத்தமான சிந்தனையாகவே இருக்கும். முந்நூறாண்டுகளுக்குமுன் கண்டுபிடிக்கப்பட்ட கைக்கடிகாரத்தை இன்று ஒருவன் புதியதாக கண்டுபிடித்தான் என்றால் அதைவிட அபத்தம் வேறுண்டா?

அப்படியென்றால் மதத்தில் உள்ள தத்துவங்களை எப்படி ஒரு தத்துவவாதி பயில்வது? மதநம்பிக்கையாளர்கள் அதை மதக்கொள்கையாகப் பயிலட்டும். அதற்கான வழிமுறைகள், மரபுகள் வேறு. ஆனால் தத்துவவாதி அதை தத்துவமாகப் பயிலவேண்டும். அதற்கு அவன் செய்யவேண்டியது இரண்டு:

அ. தத்துவவாதி மதத்தின் தத்துவத்தை மதத்தின் ஆசாரங்கள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து பிரித்து தத்துவமாக மட்டுமே அணுகவேண்டும். மதத்தில் உள்ள பக்தி, வழிபாட்டுமுறைகள், அதிலுள்ள வெவ்வேறு அமைப்புகளின் கட்டுப்பாடுகள் மற்றும் ஆசாரங்கள் எவையும் அவனுக்கு தேவையில்லை.

ஆ. தத்துவவாதி மதவாதியைப்போல ஒரு மதத்தின் கொள்கைகளை மட்டும் பயில்பவன் அல்ல. அவன் எல்லா மதங்களின் கொள்கைகளையும் பயிலவேண்டும். மதம்சாரா தத்துவத்தையும் பயிலவேண்டும். ஒட்டுமொத்த தத்துவப்பரப்பில் ஒவ்வொன்றும் என்ன இடம் என அவன் அறியவேண்டும். அதன்பின் அவன் தன் ஏற்பையும் மறுப்பையும் முடிவுசெய்யலாம்.

நாங்கள் அளிப்பது தத்துவக் கல்வி. மதக்கல்வியை அல்ல. மதக்கல்விக்கான ஆசாரங்கள், வழிபாடுகள், நம்பிக்கைகள், சட்டங்கள் எவையும் இங்கில்லை. இது எந்த மதத்தையும் பிரச்சாரம் செய்வது அல்ல. ஒரு மதத்தவர் அந்த மதத்தைப் பற்றி பயில்வதும் அல்ல. இதுதான் வேறுபாடு.

மதக்கல்வி மரபாக அளிக்கப்படுவது எப்படி என நான் அறிவேன். உதாரணமாக, சைவ சித்தாந்தம் எப்படி கற்றுக்கொடுக்கப்படும்? முதலில், சைவசித்தாந்தத்தின் பசு-பதி-பாசம் போன்ற சில கருத்துநிலைகள் அறிமுகம் செய்யப்படும். அதன்பின் சிவஞானபோதம் போன்ற ஒரு நூலை பொருள் சொல்லி விளக்குவார்கள்.

இந்தவகை கல்வி மரபார்ந்த மடங்களால் அளிக்கப்படுகிறது. அது மரபான மனமுள்ளவர்களுக்கு உரியது. நாங்கள் அளிப்பது ஒட்டுமொத்த தத்துவக் கல்வியில் ஒரு பகுதியாக சைவசித்தாந்தத்தைப் பயில்வது. முதலில் சைவசித்தாந்தத்தின் வரலாற்றுப்பின்னணி, அதன்பின் அதன் தத்துவ அடிப்படைகள், அதிலுள்ள உள்விவாதங்கள், அதன் திரண்ட நிலைபாடுகள் என விரிவாக ஒரு சித்திரம் அளிக்கப்படும். அதற்குத் தகுதியானவரையே தெரிவுசெய்துள்ளோம்

அதைக் கற்பவர் கூடவே வைணவ தத்துவத்தையும் கிறிஸ்தவ தத்துவத்தையும் கற்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம். ஆனால் ஒரு சைவமத நம்பிக்கையாளர் சைவசித்தாந்தத்தை நவீன முறையில் கற்க விரும்பி இதில் சேர்ந்தால் அந்த அளவுக்கு அவருக்கு அது தெளிவை அளிக்கும்.

ஜெ

சைவசித்தாந்த வகுப்புகள், முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

நிகழ்வு ஜூன் 7, 8 மற்றும் 09 தேதிகளில் நிகழும் (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைவகுப்புகள், காணொளிகள் – கடிதம்
அடுத்த கட்டுரைஇலக்கியப் பயிற்சிகள் எவருக்காக?