தவிர்ப்பவர்கள்

தயக்கமெனும் நோய்

ஒரு நாளில் மூவர் தங்களால் நிகழ்வுக்கு வரமுடியாது என்னும் செய்தியை அனுப்பியிருந்தனர். ஒருவர் ஒரே வரியில் வரமுடியாது என்று கூறியிருந்தது ஒரு சீற்றத்தை அளித்தது. அவர் அளித்த பணத்தை திரும்ப அனுப்பி அவருடனான எல்லா தொடர்புகளையும் ரத்துசெய்தேன். இனி என் உலகில் அவர் இல்லை.

ஏனென்றால் சென்ற காலங்களில் இங்கே ஏராளமான இலக்கிய – அறிவியக்க முன்னெடுப்புகளை அழித்தவர்கள் இப்படி கடைசியில் வராமலானவர்கள். சரி, 30 ஆண்டுகளாக நிகழ்வுகள் ஒருங்கிணைக்கும் என்னையே எடுத்துக் கொள்வோம். நான் ஒருங்கிணைத்த நிகழ்வுகளை சில்லறைக் காரணங்களால் கடைசியில் தவிர்த்தவர்களால் எனக்கு உருவான இழப்பு என தோராயமாகச் சில லட்சங்களைச் சொல்லிவிடலாம்.

ஒரு நிகழ்வு ஐம்பது பேருக்காக ஒருங்கிணைக்கப்படுகிறது, எல்லாமே அதனடிப்படையில் திட்டமிடப்படுகிறது, பத்துபேர் வரவில்லை என்றால் என்னாகும்? எந்தச் செலவும் குறையாது, அமைப்பாளர் அந்த பத்து பேருக்கான செலவையும் அளித்தாகவேண்டும்- மறைமுகமாக. ஐம்பதுபேர் இருபதுபேர் அப்படிச் சொல்லிவிட்டால் நிகழ்வே சோர்வடைந்துவிடும்.

ஆனால் நம் மக்கள் எந்தச் சுணக்கமும் இல்லாமல் அதைச் செய்வார்கள். ஊரிலிருந்து சொந்தக்கார மாமா வந்துவிட்டார் என்பதில் இருந்து வீட்டில் கறி எடுத்தார்கள் என்பது வரை முக்கியமான நிகழ்வுகளை தவிர்ப்பதற்கான காரணங்களாக என்னிடம் சொல்லப்பட்டுள்ளன. ஒருமுறை நாற்பதுபேர் பதிவுசெய்த நிகழ்வுக்கு எட்டே எட்டு பேர் வந்திருந்தனர். குரு நித்ய சைதன்ய யதி அவர்களுக்காக காத்திருந்து புன்னகையுடன் எஞ்சியோரிடம் பேசினார். அவர்கள் வராமலான காரணம் பின்னர் தெரிந்தது, தொலைக்காட்சியில் மணிரத்னத்தின் அக்னிநட்சத்திரம் என்ற படம் போட்டார்கள்.

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபோது சியாட்டிலில் ஒரு நண்பர் நிகழ்வு ஒருங்கிணைத்திருந்தார். நான் எப்போதுமே சொல்வது not refundable கட்டணம் வசூலிக்காதவரை நம்மவர் வருவதாகச் சொன்னால் கால்வாசிப்பேர்தான் வருவார்கள் என்பது. சினிமா சம்பந்தமான நிகழ்வுக்கு மட்டுமே வரவேண்டாம் என்று தடுத்தாலும் வந்து கூடுவார்கள். மொட்டைவெயிலிலோ கடுங்குளிரிலோ நின்றுகொள்வார்கள். எந்தக் கட்டணம் வைத்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள்.

நண்பர் அதை நம்பவில்லை. வருவதாகச் சொன்ன அனைவரிடம் நேரில் பேசினார். அவர்களனைவருமே உறுதியளித்தனர். அவர் கட்டணம்  பெறவில்லை என எனக்குத் தெரியும், நம்மவரையும் தெரியும். ஆகவே என் தளத்தில் அந்நிகழ்வுக்கு தொடர்ச்சியாக அறிவிப்பு வெளியிட்டேன். என் வாசகர்கள் சுற்றிலுமுள்ள ஊர்களிலிருந்து வந்தனர். நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. ஆனால் உறுதி சொன்னவர்களில் முக்கால்வாசிப்பேர் வரவில்லை. ஒரு சிலர் ஏதேதோ காரணம் சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் அதன்பின் நேரில் காண்கையில் ‘அன்னிக்கு வரமுடியலை’ என்பதையே காரணமாகச் சொன்னார்கள்.

ஏன் தவிர்க்கிறார்கள்? அறிவார்ந்த எதன்மீதும் உண்மையான ஈடுபாடில்லை என்பதே முதன்மைக் காரணம், அப்படியே நாம் வளர்ந்திருக்கிறோம். பள்ளி – கல்லூரிக் கல்வி மட்டுமே நாம் அறிவை சற்றேனும் பயன்படுத்திய காலம். அதன்பின் ஒரே வேலையை திரும்பத் திரும்பச் செய்கிறோம். மூளை காற்றுப்படாமல் அப்படியே இருக்கிறது. வாழ்க்கை அப்படியே பழகிவிடுகிறது

அறிவார்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றி பிறர் சொல்லும்போது பலருக்கும் வருவது மேலோட்டமான ஒருவகை ஆர்வம்தான். அத்துடன் அவர்களுக்கு தங்கள் மூளை செத்துவிட்டது என உண்மையிலேயே தெரியாது. இவன் போகிறான் என்றால் நான் ஏன் போக முடியாது என்று நினைப்பார்கள். ஆகவே வரத்தான் எண்ணுவார்கள், ஆனால் கிளம்பும் நேரத்தில் தவிர்க்கத் தோன்றும். அதற்கு ஏதாவது ஒரு காரணம் தானாகவே உருவாகும். டிவியில் ஏதோ ஒரு நிகழ்ச்சி வந்தால்கூட போதும்.

ஆனால் இவர்களின் இந்த பொய்யான வாக்குறுதி அளிக்கும் அழிவு பெரியது. இவர்கள் இந்த வாக்குறுதியை அளிக்காவிட்டால் நாம் சிறிய அளவில், சிறிய செலவில் நம் பணிகளைச் செய்துகொண்டிருப்போம். இவர்களை நம்பி இழப்பு அடைகிறோம்.

தமிழகத்தில் முப்பதாண்டுகளாக நிகழ்வுகளை வெற்றிகரமாக நான் ஒருங்கிணைக்கிறேன். இதற்கிணையாக இன்னொருவரை உதாரணமாகச் சுட்ட முடியாது. என் வெற்றிக்குக் காரணம் நான் தொடர்ச்சியாக அக்கறையற்றவர்கள், தயக்கம் கொண்டவர்கள், எதிர்மறை மனநிலை கொண்டவர்களை தவிர்த்துக் கொண்டே இருக்கிறேன் என்பதுதான். களையெடுப்பு நிகழ்த்தாமல் ஒரு செயலை தொடர்ச்சியாகச் செய்யவே முடியாது.

என் வரையில் ஒரே ஒரு முறை உரிய காரணம் இல்லாமல் ஒரு நல்ல நிகழ்வை தவிர்ப்பவர் என்னிடமிருந்து நிரந்தரமாக விலகிவிடுகிறார். உரிய காரணம் தெரிவித்து தன் அக்கறையை, தவிர்க்கமுடியாமையை அவர் எனக்கு காட்டியாகவேண்டும். இல்லையேல் அவரை முழுமையாக அகற்றி விடுவேன். அதனால் எனக்கு இழப்பே இல்லை. நன்மை மட்டும்தான்.

தயங்குபவர் சொல்லும் சில்லறைக் காரணங்கள் எவையும் உண்மை அல்ல என எனக்கு மிக நன்றாகவே தெரியும். தயக்கம் என்பது அறிவார்ந்த தேக்கநிலையின் வெளிப்பாடு. அறிவார்ந்த தேக்கநிலைக்குச் சென்றுவிட்ட ஒருவரை நாம் மீட்கவே முடியாது. அவரே ஒருவேளை அந்த தேக்கத்தை உதறி மீள முயன்றால்கூட வெற்றி நூற்றில் ஒருவருக்கே அமையும். அவ்வளவு கடினமானது அந்த மீட்பு. அறிவார்ந்த தேக்கநிலை உருவாகி, பின்னர் மீண்டவர் என நான் இதுவரை நாலைந்து பேரைக்கூட கண்டதில்லை

ஆனால் அப்படி தேங்கிப்போன ஒருவருடன் நாம் அன்பாலோ, மீட்டுவிடலாம் என்னும் கரிசனையாலோ நம்மை பிணைத்துக்கொண்டால் நாமும் தேங்க ஆரம்பித்து விடுவோம். நமக்கே தெரியாது அது. அப்படி ஒரு தேங்கிப்போன நண்பர் மீதான அன்பால் தேங்கிப்போன ஏராளமானவர்களை எனக்குத் தெரியும். தேங்கியவரை அப்படியே உதறிவிடுவது மட்டுமே செய்யத்தக்கது.

ஏனென்றால் அறிவுச்சோம்பல், அதன் விளைவான அறிவுத்தேக்கம் என்பது இந்தக் காலகட்டத்தின் மிகக்கொடிய நோய். இது இருநூறாண்டுகளுக்கு முன்பு வேலைப்பகுப்பு முறை (work division) பிறந்து; தொழிற்சாலை, அலுவலகம் ஆகியவை உருவானதுமே தோன்றிய நோய்க்கூறு. இதைப் பற்றி கார்ல் மார்க்ஸ் கவலைகொண்டு எழுதியிருக்கிறார். காந்தி எழுதியிருக்கிறார். இன்று அதன் உச்சநிலை வந்தமைந்துவிட்டது. நாம் அதிலிருந்து நம்மைக் காப்பதே முக்கியமானது.

முந்தைய கட்டுரைபண்?
அடுத்த கட்டுரைஆயுர்வேதப் பயிற்சி எதற்காக?