சென்ற ஒரு மாதமாகவே என்னிடம் வாசகர்கள் பலர் மின்னஞ்சலில் இக்கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தார்கள்- இந்து மதம் என ஒன்று உண்டா? அவர்களில் பலர் இளைஞர்கள். நவீனக்கல்வி கற்றவர்கள். பண்பாட்டின்மேல் ஆர்வம் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் கவனிப்பதெல்லாம் சமூகவலைத்தளங்களையும் அரசியல்வாதிகளின் வம்புப்பேச்சுகளையும் மட்டும்தான்.
நான் கொஞ்சம் எரிச்சலுடன் பதில் சொன்னேன். “உலகிலேயே இந்துக்களுக்கு மட்டும் ஒரு தனித்தன்மை உண்டு. அவர்கள் மட்டும்தான் இந்து மதத்தின் எதிரிகளிடமிருந்தும், அதை அழிக்கப்போவதாகச் சூளுரைத்துச் செயல்படுபவர்களிடமிருந்தும் தங்கள் மதத்தைப்பற்றி தெரிந்துகொள்கிறார்கள்”
யோசித்துப் பாருங்கள். எவ்வளவு தத்துவ அறிஞர்கள், எவ்வளவு ஞானிகள் இங்கே இருந்திருக்கிறார்கள். எத்தனை நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. அவற்றை எவரும் வாசிப்பதில்லை. ஆனால் இந்து மரபின் வரலாறு பற்றியோ, அதன் மெய்ஞானம் பற்றியோ அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் மேடைகளில் வெறுப்புடன் கூச்சலிடுவதைக் கேட்டு இந்துமதம் என்றால் இப்படி என ஒரு புரிதலை உருவாக்கிக்கொள்கிறார்கள். இதைவிடப் பரிதாபநிலை உலகில் வேறெந்த மதத்திலாவது இருக்கிறதா?
நூல்களில் இருந்து வரலாற்றுப்புரிதலுடன் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்வதுதான் சிந்தனை என்பது. வாட்ஸப், ஃபேஸ்புக் அரட்டைகள் வழியாக ஒரு சில வரிகளை மட்டுமே தெரிந்துகொண்டு பேசுவது என்பது அறியாமை மட்டுமல்ல, அறியாமையை பரப்பும் அயோக்கியத்தனமும்கூட.
இந்துமதம் என ஒன்று உண்டா என்னும் கேள்வியை முன்வைப்பவர்கள் பெரும்பாலும் பண்பாட்டு வரலாற்றையோ, மதங்கள் இயங்கும் முறையையோ அறியாத மிகச்சாதாரண அரசியல்வாதிகள்.
கேள்விக்கு வருகிறேன். இந்து மதம் என ஒன்று உண்டா? ஆயிரம் ஆண்டுக்கு முன் இந்துமதம் இருந்ததா?
முதலில் ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். மதம் என நாம் இன்று சொல்வது ஒரு கருத்து (Idea) மட்டும்தான். பொதுவாக போதிய படிப்பறிவில்லாதவர்கள் நாம் இன்றைக்குப் பேசும் எல்லா கருத்துக்களும் எல்லா காலத்திலும் இருந்துகொண்டிருந்தன என நம்புவார்கள். உண்மை அப்படி அல்ல. இன்றைக்கு நாம் பேசும் பல கருத்துக்கள் முந்நூறாண்டுகளுக்குள் உருவானவை. உதாரணம் மக்களாட்சி, தனிமனித உரிமை போன்றவை.
இந்த கருத்துக்கள் ஒவ்வொன்றும் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக வலிமை அடைந்து, உலகமெங்கும் பரவிய வரலாறு விரிவாகவே எழுதப்பட்டுள்ளது. அந்த வரலாற்றை கொஞ்சமேனும் தெரிந்துகொள்ளாமல் இதைப்பற்றிப் பேசமுடியாது.
அப்படி ஒரு கருத்துதான் மதம் என்பதும். அது பொதுயுகம் (கிபி) பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் உருவான ஒன்று. மதம் என்பதை குறிக்கும் ரிலிஜியன் (Religion) என்னும் வார்த்தை பிரெஞ்சு வார்த்தையான ரிலிஜியோ (Religiō) என்பதில் இருந்து வந்தது. பதினேழாம் நூற்றாண்டு வரை அதற்கு ’புனிதமானவற்றை வழிபடுவது’ என்றுதான் அர்த்தம்.
பொ.யு பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்து பல கிறிஸ்தவப் பிரிவுகள் உருவாயின. அவற்றை புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவம், அல்லது சீர்திருத்த கிறிஸ்தவம் என்பார்கள். அந்த கிறிஸ்தவப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டவே ரிலிஜன் என்னும் சொல் பயன்பாட்டுக்கு வந்தது. காலப்போக்கில் அதுவே மதம் என்று நாம் இன்று சொல்லும் அர்த்த்தை அடைந்தது.
அந்த அர்த்தம் முழுக்கமுழுக்க ஐரோப்பாவில் கிறிஸ்தவ நம்பிக்கை சார்ந்து உருவான ஒன்று. இன்றுவரை ஐரோப்பிய அறிஞர்கள் மதம் என்று சொல்லும்போது அளிக்கும் அர்த்தம் அதுதான்.
அவர்களின் உருவகத்தின்படி ஒரு மதத்தில் நான்கு அம்சங்கள் இருக்கும்.
அ .வழிபாட்டுக்குரிய தெய்வம் அல்லது தெய்வங்கள்
ஆ.வழிபாட்டுக்குரிய வழிமுறை மற்றும் வழிபாட்டு இடங்கள்
இ. வழிபாட்டுத் தத்துவங்கள் மற்றும் அவற்றை முன்வைக்கும் புனித நூல்கள்
ஈ. வழிபாட்டை கட்டுப்படுத்தும் நிர்வாக அமைப்பு,
இந்நான்கும் இருந்தால்தான் அது மதம்.
ஐரோப்பியர் பதினேழாம் நூற்றாண்டு முதல் உலகம் முழுக்க பரவி வணிகம் செய்தனர். பின்னர் நாடுகளை பிடித்து ஆட்சி செய்தனர். அதை நாம் காலனியாதிக்கம் என்கிறோம்.
ஐரோப்பியர் அவர்கள் சென்ற ஊர்களில் இருந்த வழிபாட்டு முறைகளை கண்டு அவற்றையும் மதம் என்று வரையறை செய்தனர். அவ்வாறுதான் அவர்கள் இந்தியாவில் இருந்த வழிபாட்டு முறைகளை இந்துமதம், பௌத்தமதம், சமணமதம், சீக்கிய மதம் என்று அடையாளப்படுத்தினர்.
அப்படி என்றால் ஏற்கனவே இங்கே இருந்த இந்த ஆன்மிக மரபுகளுக்கு என்ன பெயர்?
முன்பிருந்த ஆன்மிக மரபுகள், வழிபாட்டுமுறைகள் போன்றவை தங்களை மதம் என சொல்லிக் கொள்ளவில்லை. இஸ்லாம் தன்னை மார்க்கம் (வழி) என்று சொன்னது. பௌத்த மரபு, இந்து மரபு, சமண மரபு ஆகியவை தங்களை தர்மம் (நெறி) என்றுதான் முன்வைத்தன. கத்தோலிக்கக் கிறிஸ்தவ மரபு கூட தன்னை ஒழுங்கு அல்லது அமைப்பு (order) என்றுதான் சொன்னது. மதம் என்ற அடையாளம் பிற்பாடு நவீன அறிஞர்களால் அதற்கு போடப்பட்டதுதான்.
அப்படியென்றால் மதம் என்ற சொல் எப்படி வந்தது? மதம் என்ற சொல் ஏற்கனவே இந்து மரபில் ‘உறுதியான தரப்பு’ அல்லது ‘கொள்கை’ என்ற பொருளில் கையாளப்பட்டது. தமிழில் உள்ள சமயம் என்னும் சொல்லும் அதே அர்த்தம் உடையதுதான். அதாவது ’காலையில் காபி குடிப்பது நல்லது என்பதே என் மதம்’ என்று சொல்லலாம்.
அப்படி பல மதங்கள் இங்கிருந்தன. ஒரு தத்துவமரபுக்குள் உள்ள கொள்கைகள் எல்லாமே மதம் என அழைக்கப்பட்டன. அதாவது வேதாந்தம் என்பது ஒரு மதம். அதற்குள் பிரம்மம்தான் பிரபஞ்சமாக உருமாற்றம் அடைகிறது என நம்புபவர்கள் விவர்த்தவாத மதத்தை சேர்ந்தவர்கள். பௌத்தம், சமணம் ஆகியவற்றுக்குள் அப்படி பல மதங்கள் உண்டு.
பொதுவான கொள்கை கொண்டவர்களிலேயே உண்மை என்பது வெறும் தர்க்கம் மட்டுமே என்று சொல்பவர்கள் தார்க்கிக மதத்தவர் என்று அழைக்கப்பட்டார்கள். உலக இன்பங்கள் மட்டுமே உண்மை என நம்பியவர்கள் சார்வாக மதத்தவர் என அழைக்கப்பட்டனர்.
அதாவது ஐரோப்பாவில் ரிலிஜன் என்று சொல்லப்பட்ட பொருளில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை இங்கே மதம் என்னும் சொல் பொருள்கொள்ளப் படவில்லை.
இந்தியாவிலுள்ள வழிபாட்டுமுறைகளை மதம் என வரையறை செய்தவர்கள் ஆங்கில நிர்வாகிகள். பிறகு அது சட்டத்தில் இடம்பெற்றது. பத்திரிகைகளின் செய்தி வழியாக பரவியது.
ஐரோப்பியர்கள் வழிபாட்டுமுறைகளைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்திய ரிலிஜன் என்னும் சொல்லை இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்த்தபோது மதம், சமயம் என்னும் சொற்களை முன்னோடிகள் பயன்படுத்தினர். இவ்வாறுதான் நமக்கு மதம் என்னும் சொல் இன்றுள்ள பொருளில் தெரிய வந்தது.
இவ்வாறுதான் நாமும் இந்து மதம் என ஒன்று உண்டு என நம்ப ஆரம்பித்தோம். பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே இருப்பது இந்து மதம் என்று கூறிக்கொள்ளத் தொடங்கினோம். இப்படி இங்குள்ள வழிபாடுகள், ஆன்மிகம் ஆகியவற்றை மதம் என சொல்லுவதை பல அறிஞர்கள், முன்னோடிகள் கண்டித்து எச்சரித்துமுள்ளனர்.
இங்கே பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துகொண்டிருப்பது ஐரோப்பியர் வரையறை செய்ததுபோன்ற ஒரு மதம் (அதாவது ரிலிஜன்) அல்ல. இங்கே இருந்ததற்குப் பெயர் தர்மம். இந்து, பௌத்தம், சமணம் மூன்றுமே தர்மங்கள்தான்.
தர்மம் வேறு மதம் வேறு. மதத்திற்கு அவசியமான மேலே சொன்ன நான்கு அடிப்படைகளும் தர்மம் என்னும் மரபில் இருக்காது. ஆகவே முதலில் கேட்ட கேள்விக்கான பதில் இதுவே. இந்து என்னும் மதம் உண்டா? இல்லை. இங்கே இருந்ததும் இருப்பதும் இந்து தர்மம் மட்டுமே