செயலுக்கான சிறந்த வழி

அன்புள்ள ஜெ,

தமிழின் தலைசிறந்த எழுத்தாளராக திகழ்கிறீர்கள். தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் எழுத்தின் அளவும் அதேசமயம் ஆழமும் தீவிரமும் மலைக்கச் செய்பவை. ஒருவரே இவற்றை எல்லாம் எழுதினாரா என்ற பிரமிப்பு உருவாகிக்கொண்டே இருக்கிறது. இவற்றை எழுதும்போது என்ன மனநிலையில் இருந்தீர்கள் என்ற பதற்றமும் உருவாகிறது. வெண்முரசின் பல இடங்கள் பித்து உச்சம் நின்று எழுதப்பட்டவை. 130 கதைகள் எல்லாமே மிகக்கனிந்த நிலையில் இருந்து எழுதப்பட்டவை. அவை ஒவ்வொன்றும் அற்புதமான முத்துக்கள். சினிமாவில் இருப்பவன் என்னும் நிலையில் அந்த கதைகள் பல வைரங்களை விட அதிக விலைக்கு சினிமாவுக்காக விற்கப்பட்டுக்கொண்டே இருப்பதை அறிந்திருக்கிறேன்.

இவ்வளவு எழுதும் நீங்கள் அமைப்புகளை உருவாக்கி நடத்துகிறீர்கள். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறீர்கள். எவற்றையும் தொடங்கிவிட்டு நடத்தமுடியவில்லை, ஆதரவில்லை என இது வரை புலம்பியதே இல்லை. எந்த அளவு இருக்கும் என்று முன்னரே ஊகிக்கிறீர்கள். அதற்கேற்பச் சரியான திட்டமிடலுடன் செய்து முடிக்கிறீர்கள். சோர்வே இல்லை. எதையும் குழப்பிக்கொள்வதில்லை. உங்களுக்கு தோல்வியே இல்லை. தோல்வி நிகழமுடியும் என்றே நினைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு எல்லா செயலிலும் பெர்ஃபெக்ஷன் உள்ளது. இப்போது யூடியூப் சானல் வருகிறது. தமிழில் எழுத்தாளர்களின் சானல்களிலேயே இதுதான் தொழில்நுட்பத்தரம் உடையது. இதை நீங்கள் நிறுத்தப்போவதுமில்லை என தெரிகிறது

உங்களுடைய ‘தொழில் ரகசியம்’ என்ன? அதை அறிந்தால் பிறரும் தங்கள் தொழில்களில் கடைப்பிடிக்கலாம்.

கிருஷ்ணசாமி மூர்த்தி

 

அன்புள்ள கிருஷ்ணசாமி,

என் தொழில் ரகசியங்கள் மிக வெளிப்படையானவை, நான் பிரச்சாரம் செய்வதே அவற்றைத்தான்

அ. நான் கனவுகள் காண்கிறேன். திட்டமிடுகிறேன். ஆனால் எல்லாவற்றையும் நானே செய்வதில்லை. பிறர் செய்யவைக்கிறேன். அவர்களின் தனியாற்றல்களை அடையாளம் கண்டு, அவர்களை உள்ளே கொண்டுவந்து செயலாற்றச் செய்கிறேன். என் அமைப்புகள் என்னைவிட பலமடங்கு ஆற்றல்கொண்டவர்களால் நடத்தப்படுகின்றன

ஆ. நான் என்னை முன்வைப்பதில்லை. பிறரை முன்வைக்கிறேன். ‘வளர்ப்பதனூடாக வளர்தல்’ என இந்த முறையைச் சொல்லலாம். விஷ்ணுபுரம் அமைப்பும் சரி, முழுமையறிவு அமைப்பும் சரி, இவற்றில் தொடர்புகொண்டுள்ள ஒவ்வொருவரையும் வளர்க்க முயல்கின்றன. ஆகவே தாங்கள் வளர்கின்றன. மெய்யான வளர்ச்சி அதுவே. ஓர் உடல் வளர்வது அதிலுள்ள எல்லா செல்களும் வளரும்போதுதான்.

இ. என் தனிவாழ்க்கையில் படைப்பு- அமைப்பு- தொழில்- குடும்பம் என நான்கையும் மிகச்சரியாகப் பகுத்துக்கொண்டிருக்கிறேன். நான் மிகமிக தீவிரமாக சினிமாவில் ஈடுபட்டிருக்கும் படைப்பாளி. ஆகவே என் நேரம் மிக அரியது. அதை வீணடிப்பதில்லை. ஒன்றின் பொருட்டு இன்னொன்றை இழப்பதில்லை. ஒன்றில் ஈடுபடுகையில் இன்னொன்றை முழுமையாக விலக்கி அதில் மட்டுமே ஈடுபடுகிறேன்.

ஈ. நான் கொஞ்சம் தன்முனைப்பு கொண்டவன். அது இல்லாமல் அமைப்புகளை உருவாக்க முடியாது. ஆனால் எப்போதும் நண்பர்களிடையே ஓர் எளிய நண்பனே. நண்பர்களின் கூட்டுதான் செயல்களைச் செய்யும். மேல் கீழ் அடுக்கு எவ்வகையிலும் உதவாது. விஷ்ணுபுரம் அமைப்பு, முழுமையறிவு அமைப்பு ஆகியவற்றில் எவரும் மேலும் கீழும் கிடையாது.

உ. கடைசியாக, இதுதான் முக்கியம், தத்துவப் பற்றில் இருந்தே தளராத செயலூக்கம் அமையும். தத்துவ நிலைபாடே உறுதிப்பாட்டை அளிக்கும். தத்துவத்தெளிவில் இருந்தே சோர்வுகளை களைய முடியும். எந்த பெருஞ்செயல்பாட்டாளரும் தனக்கான தத்துவம் கொண்டவரே. நான் வேதாந்தி, அத்வைதி. என் ஆசிரியரிடமிருந்து அதைக் கற்றவன். ஆகவே புகழ்ச்சி, வசை இரண்டுக்கும் அப்பால் என்னை நிறுத்திக்கொள்ள முடிகிறது. செயலின் தேவையை அறிவேன். அதேசமயம் உலகியலின் அடிப்படையான பொருளின்மையையும் அறிவேன். நான் விளைவுகளை கணக்கிட்டு எதையும் செய்வதில்லை. என் மகிழ்ச்சிக்காகவும் நிறைவுக்காகவுமே செயலாற்றுகிறேன். செயல் என் விடுதலை என்பதனால். இடையன் அதைச் சொல்லி நிறுவிச் சென்றிருக்கிறான்

ஜெயமோகன்

வேடிக்கைச் சத்தங்கள் !

முந்தைய கட்டுரைஇணையக் கல்வி, இணையப்போதை – கடிதம்
அடுத்த கட்டுரைஇந்துமதம் என ஒன்று உண்டா?