நான் நித்ய சைதன்ய யதி பற்றி அல்லது வேதாந்தம் பற்றிப் பேச ஆரம்பிக்கையில் உடனடியாக ஒரு எதிர்ப்பேச்சு உருவாகும். வேதாந்தம் படித்தால் எல்லாவற்றிலும் பற்று இல்லாமலாகிவிடும். எதிலும் அர்த்தமில்லை என்று தோன்றிவிடும். எதையும் செய்யத்தோன்றாது.இந்தியாவை வேதாந்தம்தான் தேங்கச் செய்தது. அந்த வரிகளை அறிஞர்கள் என்று அறியப்பட்ட பலரும் அவர்களின் நூல்களில் எழுதியிருப்பதை கண்டிருக்கிறேன்.
வேதாந்தம் என்ன சொல்கிறது என்ற விவாதத்திற்குள் செல்லவேண்டாம். ஏனென்றால் வேதாந்தத்தை கற்காத ஒருவரிடம் நாம் அது என்ன சொல்கிறது என விவாதிக்க முடியாது. நாம் வரலாற்றையே பார்ப்போம்.
இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டு முதல் ‘இந்து மறுமலர்ச்சி’ உருவானது. இந்து மதத்தின் தேங்கிப்போன ஆசாரவாதம், மூடநம்பிக்கைகள், மனிதாபிமானத்திற்கு எதிரான வரலாற்று அம்சங்கள் ஆகியவற்றுக்கு எதிரான பெருந்தாக்குதல் நிகழ்ந்து இந்து மதமே ஒட்டுமொத்தமாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதைச் செய்த முன்னோடியான சமூகசீர்திருத்தவாதிகள் கிட்டத்தட்ட அனைவருமே வேதாந்த -அத்வைத மரபைச் சேர்ந்தவர்கள். பல்லாயிரம் துறவிகள் தீண்டாமை ஒழிப்பு, பெண்கல்வி, அடிப்படை மனித உரிமை மீட்பு ஆகியவற்றுக்காக கிராமம் கிராமமாகச் சென்றுள்ளனர். வாழ்க்கையையே அளித்துள்ளனர்.
இந்து மறுமலர்ச்சியின் நாயகர்களான வேதாந்திகள் என ராஜா ராம்மோகன் ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், நாராயண குரு, விவேகானந்தர் என ஒரு மிகப்பெரிய பட்டியல் போட முடியும். இந்தியாவின் சமூக அவலங்களை அகற்றி, நம்மை ஒரு நவீனச் சமூகமாக ஆக்கியதில் இந்தியாவின் வேறெந்த கருத்தியலை விடவும் அத்வைதத்தின் பங்களிப்பே மிகுதி. இந்தியாவில் மிக அதிகமாகக் கல்விப்பணியாற்றியவை, ஆற்றி வருபவை அத்வைதம் சார்ந்த நிறுவனங்களே. இந்தியாவில் மிகப்பெரிய பஞ்சநிவாரணப் பணியை ஆற்றியவர்கள் ராமகிருஷ்ண மடம் மற்றும் அதில் இருந்து கிளைத்த பலநூறு அத்வைத அமைப்புகளே. பஞ்சத்திலும் கொள்ளைநோயிலும் சேவையாற்றிய பலநூறு வேதாந்தத் துறவிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்திய தேசிய மறுமலர்ச்சி இயக்கம் என்பது விவேகானந்தர் உள்ளிட்ட இந்து மறுமலர்ச்சித் தலைவர்களிடமிருந்து தொடங்குவது என விரிவான வரலாற்றுச்சித்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்திய தேசிய இயக்கத்தின் முதன்மைத் தலைவர்கள் பலர் அத்வைதச் சார்பு கொண்டவர்கள். இந்திய தேசிய இயக்கத்தில் பங்குகொண்ட பல்லாயிரம்பேர் அத்வைதம் சார்ந்த அமைப்புகளில் இருந்து வந்த துறவிகள்.
சுதந்திரத்திற்குப் பிறகும்கூட அத்வைதச் சார்பு கொண்ட அமைப்புகளே கல்விப்பணியை முன்னெடுக்கின்றன. யோகம், தியானம் முதலியவற்றை உலகளாவ முன்னெடுப்பவையும் அவையே. பலநூறு அமைப்புகளாகப் பிரிந்து அவை இன்றும் பெரும் பணி ஆற்றிக்கொண்டிருக்கின்றன.
வரலாற்றில் பின்னால் செல்வோம். பொ.யு பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் இந்தியாவின் சமூகக்கட்டமைப்பு அன்னியப் படையெடுப்புகளால் அடியோடு நொறுக்கப்பட்டு, இந்திய அரசர்களின் ஆட்சிகள் அழிந்து, ஆதரவின்றி இந்து மதமும் இந்தியக் கலைகளும் இந்திய இலக்கியமும் அழியும் நிலையில் இருந்தபோது வேதாந்த -அத்வைத மரபைச் சேர்ந்த வித்யாரண்யர் போன்ற ஞானிகளே அவற்றைக் காத்து நின்றனர். ஆதிக்கத்துக்கு எதிரான சக்தியாக விஜயநகரை உருவாக்கியவர் வித்யாரண்யர். விஜயநகர அரசர்களால் தென்னிந்தியாவில் நாம் காணும் ஆலயங்கள் அனைத்தும் உருவாயின. தென்னகத்தில் முந்நூறு ஆண்டுக்காலம் கலைகளும் இலக்கியங்களும் செழித்தன.
அத்வைத வேதாந்தியான வித்யாரண்யரால்தான் இந்து மதத்தின் ஆறுபிரிவுகளும் ஒன்றாக்கப்பட்டு, ஆறுக்கும் பொதுவான பூசக மரபான ஸ்மார்த்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அதை வேதாந்தமே செய்ய முடியும். ஏனென்றால் அத்வைதம் இந்துமரபின் எல்லா மதங்களுக்கும் அடிப்படையாக உள்ள தத்துவ மையம். 14 ஆம் நூற்றாண்டு முதல் வடஇந்தியாவின் மிக எதிர்மறையான சூழலிலும் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மடங்களே போராடி தாக்குப்பிடித்தன. மராட்டியர் உதவியால் புரி சங்கரமடம்தான் ஒட்டுமொத்த ஒரிசாவிலும் வங்காளத்திலும் இந்து மதமரபை காத்து நின்றது.
அதற்கும் முன்பு செல்வோம். பொயு 9 ஆம் நூற்றாண்டில் சங்கரர் முப்பத்திரண்டு வயதுக்குள் இந்தியாவெங்கும் கால்நடையாக அலைந்து ஆறு இந்து மதப்பிரிவுகளையும் தத்துவார்த்தமாக இணைத்தார். நான்கு சங்கர மடங்களை உருவாக்கினார். பல தத்துவ நூல்களை இயற்றினார். பலநூறு அவைகளில் தத்துவ விவாதங்களில் பௌத்தர்களை வென்றார்.
சொல்லுங்கள், வேதாந்தம் அல்லது அத்வைதம் எங்கே எவரை செயலின்மை கொள்ளச் செய்துள்ளது? இந்திய வரலாற்றில் வேதாந்திகளைப்போல செயலூக்கம் கொண்ட வேறு எவர் இருக்கிறார்கள்?