கற்பதன் அலகுகள்

அன்புள்ள ஜெ

இந்திய தத்துவ சிந்தனை மரபை பொதுவாக நீங்கள் கற்பிக்கிறீர்கள். அதை அறிந்துகொள்ளாத ஒருவர் சைவசித்தாந்த வகுப்புகளில் பங்குகொள்ளலாமா? குழப்பங்கள் உருவாகாதா?முனைவர் சாந்திகுமார சுவாமிகளின் சைவசித்தாந்த வகுப்பு தத்துவ வகுப்புதான் என நினைக்கிறேன்.

செந்தில்குமார் எம்.ஆர்

அன்புள்ள செந்தில்குமார்,

சாந்திகுமார சுவாமிகள் நடத்துவது தத்துவ வகுப்புதான்.

நடராஜகுரு நம் சிந்தனைகளில் ஒரு அமைப்புவாதம் (structuralism) இருப்பதாகச் சொல்கிறார். நாம் எதையும் அமைப்பாகவே ஆக்கிக்கொள்வோம். நம் புரிதலென்பது நம் முன் வரும் தரவுகள், கருத்துக்களைக்கொண்டு ஓர் அமைப்பை அல்லது வடிவத்தை உருவாக்கிக்கொள்வதுதான்.

பின்னர் இரண்டுவகையில் அந்த வடிவத்தை பெரிதாக்குவோம். அதைப்போல பல அமைப்புகளை building block போல பயன்படுத்தி ஒன்றோடொன்று இணைத்துக்கொண்டு மேலும் பெரிய அமைப்புகளை உருவாக்குவோம். அந்த அமைப்புக்குள் மேலும் சிறிய அமைப்புகளை உள்ளே செலுத்தி அடுக்கி அகலமாக ஆக்குவோம்.

தத்துவக் கல்வியிலும் அதையே சொல்லலாம். சைவசித்தாந்த வகுப்புக்கு தாராளமாகச் செல்லலாம். அங்கே ஓர் அமைப்பை கற்று உருவாக்கிக் கொள்வீர்கள். பின்னர் இந்திய தத்துவசிந்தனையைக் கற்றால் இந்திய சிந்தனை என்ற பெரிய அமைப்புக்குள் அதை பொருத்திக் கொள்வீர்கள்.அப்படியே பௌத்த, சமண கருத்துக்களையும் கற்றுக்கொண்டு அடுக்கிக் கொள்ளலாம். அவை முரண்படுவதில்லை, ஒன்றுடனொன்று இணைகின்றன.

சைவசித்தாந்த வகுப்புக்குப்பின் ஒருவர் இந்திய தத்துவத்தின் பொதுவான அறிமுகத்தை அடைவாரென்றால் அவர் ஏற்கனவே கற்ற சைவசித்தாந்தம் விரிவடைவதை உணரமுடியும்.

இதை இன்னும் விரிவாகவும் சொல்லலாம். ஒருவர் சைவசித்தாந்த வகுப்புடன் சிறில் அலெக்ஸ் நடத்தும் பைபிள் வகுப்பையும் கற்றாரென்றால் இரண்டுமே ஒன்றையொன்று நுணுக்கமானவையாக ஆக்குவதை காணலாம்.

என்றாவது இங்கே மேலைத்த்ததுவம் கற்பிக்கப்பட்டு அதில் இவற்றுக்குப்பின் கலந்துகொள்பவர் இன்னும் கூர்மையாக அதை புரிந்துகொள்வார், அதைப் புரிந்துகொண்டபின் இந்த தத்துவங்கள் மேலும் தெளிவாகும்.

ஜெ


அ.வே.சாந்திகுமார சுவாமிகள் நடத்தும் சைவசித்தாந்தப் பயிற்சி வகுப்புகள் ஜூன் 7, 8 மற்றும் 9 தேதிகளில் நிகழும் (வெள்ளி சனி ஞாயிறு)

சிறில் அலெக்ஸ் நடத்தும் பைபிள் வகுப்புகள் ஜூன்21 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்

ஜா.ராஜகோபாலன் நடத்தும் வைணவ பிரபந்த வகுப்பு நாள் ஜூன் 28, 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)

நிஷா மன்சூர் நடத்தும் இஸ்லாமிய அறிமுக வகுப்பு ஜூலை 12 13 மற்றும் 14 நடைபெறும்

தொடர்புக்கு [email protected] 

முந்தைய கட்டுரைவேடிக்கைச் சத்தங்கள் !
அடுத்த கட்டுரைசெயலின்மையிலிருந்து ஏன் விடுபடவேண்டும்?