ஆலயக்கலைப் பயிற்சி, கடலூர் சீனு

இனிய ஜெயம்

குளிர் பருவத்தின்போது வந்தது, அதன் பின்னர் நேரடியாக இந்தக் கோடையில் நமது கல்விச்சாலை நோக்கி அதிகாலைப் பயணம். அந்தியூர் கடந்ததும் வரும் மலைத் தொடர்கள் மெல்லப் பசுமை குன்றி மலையிடை  குவடுகளில் மட்டும் பச்சையம் எஞ்ச மண் வண்ணம் ஏற்று மாறிக்கொண்டிருந்தது நெடுவரை.

கல்விச் சாலை நுழைகையில் வெயில் நன்றாகவே எழுந்து  பச்சைச் சுடர்கள் என ஒளிரும் இலைகளுடன் மரங்கள் வரவேற்க, கதவு திறக்கையில் மயில்கள் இரண்டு ஒயில் நடையிட்டு வலமிருந்து இடம் சென்றன. அருகே செடிகளில் புது மலர்கள் பூத்திருக்க, மரங்களின் கீழ் வீற்றிருந்த புத்தர் வாக் தேவி இருவரையும் வணங்கிவிட்டு, அந்தியூர் மணியண்ணனை சென்று சந்தித்தேன். நான் யானைகளை தூக்கிப்போட்டு அம்மானை விளையாடும் அதி பராக்கிரமசாலி என்பதை அறிந்து வைத்திருந்த மணி என்னை  யானை குடிலுக்கு ஆற்றுப்படுத்தினார்

பொதுவாக நான் இங்கே வருவது உறுதி என்றாகிவிட்டால், அந்தியூர் கடக்கும் போதே மொபைலை அணைத்து ஓரம் போட்டு விடுவேன். மீண்டும் இறங்கி அந்தியூர் வந்த பிறகே அதை தொடுவேன். இம்முறையும் அதையே செய்தேன். இருந்த இரண்டரை நாளும் வந்திருந்த வாசக நண்பர்களுடன் உரையாடலிலேயே இருந்தேன். இரண்டரை நாளும் ஐம்பது பேர் கொண்ட கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்த நிறைவு. செல்வேந்திரன் அண்ணாவின் மகள்கள் இருவரும் முழு வகுப்பிலும் கவனத்துடன் இருந்தார்கள். வகுப்பு இல்லா நேரங்களில் அவரது கடைக்குட்டி எல்லோருக்கும் செல்லப்பெண் என்றாகி கல்வி வனமே பட்டாம்பூச்சிகள் நிறைந்த தோட்டம் போல ஒரு உணர்வு. வந்திருந்த பெண்கள் அவர்கள் இல்லப் பணி போலும் சமையலில் காய்கறிகள் நறுக்கி அளிப்பது உள்ளிட்ட பல பணிகளை இணைந்து செய்தார்கள். கல்விக்கு வந்திருந்த  ஓதுவார் மரபு ஐயா ஒருவர் எப்போதும் அந்தியூர் மணியுடன் இணைந்து உணவு பரிமாறும் பணியை மேற்கொண்டார. இரவெல்லாம் கதைகள், பிரியம்வதா அவரது மணாளன், ஆசிரியர் jk யும் பிறரும் உடன் இணைந்து பாடிய செமி கிளாசிக்கல் பாடல்கள் என இத்தனை மகிழ்வுக்கும் நடுவே ஆசிரியர் ஜெயக்குமார் பரத்வாஜ் அவர்களின் ஆலயக்கலை அறிமுக வகுப்புகள் இனிதே நடந்தேறியது.

2500 ஆண்டுகளாக அறுபடாமல் நிகழும் இந்த நெடிய ஆலயக்கலை மரபு எந்த வாஸ்து, சிற்ப, ஆகம விதிகள் மேல் எழுவன, அவை ஒவ்வொன்றும் கொண்ட உட் பகுதிகள். குடைவரை காலம் முதல் நாயக்கர் காலம் வரை ஆலயக்கலை கொண்ட மதப் பண்பாட்டு இலக்கிய வரலாற்று பின்புலம், குடைவரை காலம் முதல் நாயக்கர் காலம் வரை கோயில் என்ற அமைப்பின் கோபுரம் துவங்கி விமானம் வரை அதன் சிற்பங்கள் உள்ளிட்டு ஒவ்வொரு அலகு  சார்ந்தும் அதன் பிற பகுதிகள் குறித்தும் அவற்றின் அடிப்படைகளை இரண்டரை நாளில்  அறிமுகம் செய்தார். இந்த அறிமுகம் சில மாதம் கண்ட குழந்தைக்கு உணவை நெய் போல் பிசைந்து ஊட்டும் முறையில் அன்றி, எதை எப்படி எந்த அளவு சொல்லி மீதத்தை வாசக தூண்டுதலுக்கு எவ்விதம் விட வேண்டுமோ அப்படி விட்டு செய்யப்பட்ட அறிமுகம்.

இப்போது தஞ்சை அருங்காட்சியகத்தில் இருக்கும் தாராசுர கோயிலை சேர்ந்த ஆனை உரிக்கும்பிரான், திருச்சி மலைக்கோட்டை குடைவரையில் உள்ள கங்காதரர் படிமங்கள் இவற்றை ஆசிரியர் அவற்றின் புராணக் கதை மற்றும் இலக்கிய வடிவுடன் இணைத்து விவரிக்கையில் அவை முழுமையும் வியந்ததைக் கண்டேன்

கங்காதரர் படிமைக்கு அருகே இருக்கும் நாய் சிலைக்கு பின்னுள்ள வானவியல் ஊகம், புராண வரலாறுகள் வழியே மறதிக்குள் புதைந்து போய் இருந்த ராஜராஜ சோழன், நவீன வரலாற்று முறைமை வழியே கண்டு பிடிக்கப் பட்டமை, ராஜ ராஜேஸ்வரம் கோயில் மற்றும் ராஜ ராஜ சோழனுக்கும் கருவூர் தேவருக்கும் இடையேயான தொடர்பு மற்றும் புத்தர் கோயிலை அழித்து எழுப்பப்பட்டதா தஞ்சை பெரிய கோயில் போன்ற கேள்விகளுக்கு ஆசிரியர் அளித்த பதில் இந்த கல்விப் பகுதியில் முக்கியமான ஒன்று.

தனிப்பட்ட முறையில் எனக்கு மிக மிக முக்கிய நாட்கள் இவை. விஷ்ணுபுரம் நாவல் வாசித்த பின்னர் அங்கிருந்தே எனது ஆலயக்கலை குறித்த தேடலை துவங்கித் தொடர்பவன் நான். ஒரு சரியான ஆசிரியர் காலடியில் அமர்ந்தால் மூன்றே நாளில் அறியக் கூடிய அடிப்படைகளை மூன்று வருடங்களுக்கு மேலும் தேடித் தேடி அடைந்திருக்கிறேன் என்பதை என்ன என்று சொல்வது. ஆசிரியர் அன்றி அள்ளிச் சேர்க்கும் கல்வி எங்கே இடறும் என்பதை நேரடியாக இந்த வகுப்பில் உணர்ந்தேன். ஆலயக்கலையை கேசாதி பாதம், மற்றும் பாதாதிகேசம் என இரண்டு வழிகளில் அறியலாம். இரண்டுமே சரிதான் என்றாலும் இரண்டும் அதன் கலைச்சொற்கள் உள்ளிட்டு வெவ்வேறு கல்வி வழி முறைகள் என்று அமைவன. நான் நூல்கள் வழியே 80 சதம் கேசாதி பாதம் என்ற முதல் வழியிலும், 20 சதவீதம் பாதாதி கேசம் என்ற இரண்டாம் வழியிலும் கற்றிருக்கிறேன். கற்பது என்பது எதற்கோ அந்த இலக்கைத் தவற விடும் கல்வி என்பது இத்தகு பிழைகளில் இருந்து எழுவதே

நிறைய நிறைய படங்கள் கொண்ட இந்த வகுப்பில் நான் வைத்திருக்கும் பல படங்களை கண்டேன். அதில் முக்கிய ஆசிரியர் நூலில் இருந்து ஒரு படம். முருகன் கை ஆயுதமான சக்தி யின் கீழ் வஜ்ரம் என்று இருந்து. அன்று கவனத்தில் இருந்து தப்பிய அந்த பிழை அவ்வாறே தொடர, அதை இன்று ஆசிரியர் பிழை திருந்த வேண்டிய படம் மன்னித்து விடுங்கள் என்று சொல்லி சுட்டும் போதே அறிந்தேன். அன்று வரை அது வஜ்ரம் என்றே என்னுள் பதிந்திருந்தது. இப்படி பல்வேறு விஷயங்களை என்னில் கலைத்து அடுக்கிய வகுப்பு இது. என்னை உள்முகமாக சொடுக்கி உதறி தூசி தட்டி விட்டுக்கொண்ட உணர்வு.

நமது மேன்மைகள் குறித்த அறியாமை கொண்ட, வெற்று அரசியல் வழியே , சோதிடம் வழியே வந்து சேரும் கும்பல் இவற்றில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் ஆலயங்கள் மீது, ஒரு சிறு வட்டத்திலேனும் இத்தகு ஆலயக்கலை வகுப்புகள் நமது பண்பாட்டு ஆழம் சார்ந்த ஒரு விழிப்புணர்வை  உருவாக்கும் எனில் அதை விட செயல் மேன்மை வேறென்ன வேண்டும். வகுப்பில்  இனி என்றென்றும் என் மனதை விட்டு அகலாது எனும்படிக்கான படம் ஒன்றைக் கண்டேன். திரு கணபதி ஸ்தபதி அய்யா அவர்கள் ப்ரும்மாண்ட சிலை ஒன்றின் கண்களை எழுதித் திறக்கும் தருணம் அது. கண் திறத்தல். தங்க ஊசி கொண்டு திறக்கப்படும் கண்கள். இந்த வகுப்பு எனக்கு அத்தகைய்ய ஒன்றே. ஆசிரியர் வரிசைக்கு நன்றி.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைசெறிவான உரையின் தேவை என்ன?
அடுத்த கட்டுரைஇந்துமதம் காட்டுமிராண்டி மதமா?