இந்துமதம் காட்டுமிராண்டி மதமா?

இயற்கை மதங்கள் எப்படி உருவாகின்றன என்பதற்கு உலகளாவிய ஆய்வுமுடிவுகள் உள்ளன. ஜோசப் கேம்பெல் முதல் குளோட் லெவிஸ்ட்ராஸ் வரை ஏராளமான அறிஞர்கள் விளக்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தச் சித்திரத்தை மிகச்சுருக்கமாக இப்படி விளக்குகிறேன்.

இயற்கை மதங்கள் தோன்றுவது பழங்குடி (அதாவது ஆதிவாசி) வாழ்க்கையில்தான். அவர்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்வது நம் தந்தை முகத்தில் நாமே சேறுவீசுவதைப் போல. இன்று உலகத்தில் எங்கும் எந்த கற்றறிந்த அறிஞனும் ஆதிவாசிகளை காட்டுமிராண்டிகள் என்று சொல்வதில்லை. அவர்களைப் பற்றி ஆராய மானுடவியல் (ஆந்த்ரபாலஜி) என்ற துறையே உள்ளது. மிகமிக நுட்பமான ஆராய்ச்சிகள் நடைபெற்று அரிய உண்மைகள் கண்டையப்படுகின்றன.

ஒன்றை மட்டும் நினைத்துப் பார்த்தால்போதும். நாம் இன்றைக்கு உண்ணும் உணவுப்பயிர்கள் முழுக்க ஆதிவாசிகள் கண்டுபிடித்தவைதான். இன்றைய அறிவியல், இன்றைய மருத்துவம் எல்லாமே ஆதிவாசிகளிடமிருந்து உருவானவையே.

இயற்கை மதமும் ஆதிவாசிப் பண்பாட்டில் இருந்து தானாகவே உருவானதுதான். அந்த வேரில் இருந்து முளைத்து எழுந்து அது மரமாகிறது. அதில் மாபெரும் ஞானிகளும் பேரறிஞர்களும் பெரும்கவிஞர்களும் உருவாகிறார்கள். இந்துமதம் அவ்வாறு உருவானது.

உலகில் இன்று இருப்பதிலேயே பெரிய இயற்கை மதம் என்பது இந்துமதம்தான் (நினைவுகூர்க, இந்து தர்மம்). இந்து மதம் ஆதிவாசிப் பண்பாட்டில் இருந்து உருவானது என்பது அதன் தனித்தன்மையும் பெருமையும் ஆகும்.

பழங்குடிகள் தங்களுக்கே உரிய முறையில் இயற்கையையும், பிரபஞ்சத்தையும் புரிந்துகொள்கிறார்கள். தெய்வங்களை கண்டடைகிறார்கள்.

பொதுவாக மூன்று வகையான தெய்வங்கள் அவர்களிடம் இருக்கும்.

அ.நீத்தார். அதாவது மறைந்த முன்னோரை அவர்கள் தெய்வமாக வழிபடுவார்கள்.

ஆ. இயற்கைச் சக்திகள் வெவ்வேறு வகைகளில் உருவகிக்கப்பட்டு வழிபடப்படும்

இ. அடையாளங்கள். மிருகங்கள், பறவைகள், மலைகள், ஆறுகள், அவற்றை அவர்கள் தங்கள் குல அடையாளங்களாகக் கொள்வார்கள். காலப்போக்கில் அவை தெய்வங்கள் ஆகிவிடும். இவை குலக்குறி வழிபாடு எனப்படுகின்றன.

இந்த வழிபாடுகளை அவர்கள் தங்கள் ‘அறியாமையால்’ செய்தார்கள் என்று சொல்பவன் வெறும் அறிவிலி மட்டுமே. மனிதன் ஆடை அணிய ஆரம்பிக்கும் முன்னரே ஆன்மிகத்தை அடைந்துவிட்டான். தீயை பயன்படுத்தி சுட்டு தின்ன ஆரம்பிக்கும் முன்னரே தெய்வ வழிபாட்டை ஆரம்பித்துவிட்டான். அதற்கு சான்று என்னவென்றால் அதே நிலையில் இருக்கும் இன்றைய பழங்குடிகள் தெய்வ வழிபாடும் பலவகை சடங்குகளும் செய்வதுதான்.

ஏன் தெய்வ வழிபாடு ஆதிகுடி மக்களுக்குள் உருவானது?  எங்கும் நிறைந்திருக்கும் இறைச்சக்தி அவர்களுக்கு அப்படி தென்பட்டது என்றுதான் ஓர் ஆன்மிகவாதி அதைப் புரிந்துகொள்வான். தெய்வசான்னித்தியத்தை அவன் மலைகளில், ஆற்றில், மழையில், இடிமின்னலில், சிங்கத்தில், மயிலில் எல்லாம் கண்டடைந்தான். அதை வழிபட்டான்.

ஐம்பதாயிரம் அல்லது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு தொல்மனிதன் எப்படியோ தெய்வத்தின் இருப்பை உணர்ந்து ஒரு கல்மேல் இன்னொரு கல்லை தூக்கிவைத்து வழிபட்டான் என்றால் அது எவ்வளவு பெரிய நிகழ்வு. அந்த வடிவை அப்படியே இன்றைக்கும் நாம் சிவலிங்கம் என்று வணங்குகிறோம் என்றால் அது எவ்வளவு பெரிய தொடர்ச்சி. அதை எண்ணி மெய்சிலிர்ப்பவனே இந்து மரபை உணர்ந்தவன்.

பழங்குடிகளின் வழிபாடுகள் காலப்போக்கில் ஒன்றோடொன்று இணைகின்றன. ஓடைகள் இணைந்து ஆறு உருவாவதுபோல அது நடைபெறுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஞானிகள் அந்த ஆன்மிக நம்பிக்கைகளை தத்துவக்கொள்கைகள் ஆக மாற்றுகிறார்கள். அந்த தத்துவக்கொள்கைகள் ஒன்றுடன் ஒன்று விவாதித்து காலப்போக்கில் இணைகின்றன அதையே இயற்கை மதம் என்கிறோம்.

இப்படி ஓர் இயற்கைமதம் உருவாகி வந்துள்ளது என்றால் அந்த உருவாகும் வழிமுறை ஏதேனும் ஒரு காலகட்டத்தில் நின்றுவிடுவதில்லை. அந்த வழிமுறை அந்த மதத்தின் இயல்பிலேயே இருந்துகொண்டிருக்கும். அது எவ்வளவு ஆயிரம் ஆண்டுகளானாலும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

இந்து மதம் என நாம் அழைக்கும் மெய்ஞானமரபில் அந்த வழிமுறை எப்போதும் செயல்பட்டபடியே உள்ளது. நமக்கு தெரியாத தொல்பழங்காலத்தில் தொன்மையான ஆதிவாசி தெய்வங்கள் படிப்படியாக பெருந்தெய்வங்களாக ஆயின. அந்த உருமாற்றம் இன்றும் நடைபெறுகிறது. இப்போதும் ஆதிவாசிகளின் தெய்வங்கள் இந்துமரபுக்குள் நுழைந்துகொண்டே இருக்கின்றன.

உதாரணமாக, கேரளத்தில் ஆதிவாசிகளின் தெய்வமான குளிகன் சென்ற நூறு ஆண்டுகளுக்குள்தான் இந்து வழிபாட்டு மரபுக்குள் வந்தது. நம்மைச்சுற்றி அப்படி எத்தனையோ தெய்வங்கள் இந்து மரபுக்குள் வந்துகொண்டிருப்பதைக் காணலாம். இது இங்கே முடிவடையாது. ஒருவேளை இந்து மதம் ஆப்ரிக்காவுக்குச் சென்றால் ஆப்ரிக்கப் பழங்குடிகளின் தெய்வங்கள் உள்ளே வந்து சைவத்திலும் வைணவத்திலும் இணைந்துகொள்ளும்.  ஆப்ரிக்கர்களின் ஆகாயதெய்வமான நியாமே ( Nyame) விஷ்ணுவின் வடிவமாக ஆகிவிடும்.நமக்கு அது ஏற்புடையதுதான்.

இதைத்தான் ‘ஒருங்கமைவு’ என்று சொல்கிறோம். சம்ஸ்கிருதத்தில் சமன்வயம் என்பார்கள். அதாவது எந்த ஒன்றையும் மறுக்காமல் அழிக்காமல் அப்படியே உள்ளே இழுத்துக்கொள்ளும் தன்மை. அப்படி உள்ளே இழுக்கப்பட்டதை உருமாற்றாமல் அப்படியே உள்ளே வைத்திருக்கும் தன்மை. அதுவே இயற்கை மதங்களின் இயல்பு. இந்து மதத்தின் அடிப்படையே அந்த இயல்புதான்.

இந்தப் பண்பைப் பற்றி நாம் பெருமிதம் கொள்ளவேண்டும். ‘இதுவே உண்மை, மற்றவை எல்லாம் பொய்’ என்று இந்து மரபு சொல்வதில்லை. ‘கடல் ஒன்றே. எல்லா ஆறுகளும் அதில்தான் சென்று சேர்கின்றன’ என்று சொல்கிறது. இந்த உவமை தொன்மையான சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ளது.

காலந்தோறும் இந்து மரபில் ஞானிகள் உருவாகி இந்த ஒருங்கிணைப்பைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். வரலாற்றைப் பார்த்தால் நாராயண குரு, அதற்குமுன் ராமகிருஷ்ண பரமஹம்சர், அதற்கு முன் வித்யாரண்யர், அதற்கு முன் சங்கரர் என ஒவ்வொரு ஞானியும் இதையே செய்திருப்பதைக் காணலாம்.கீதையில் கிருஷ்ணன் செய்வதும் இதையே. அதற்கு முன் வேதவியாசர் செய்ததும் இதைத்தான்.

ஆகவே இந்துமதம் போன்ற இயற்கை மதத்திற்கு எல்லா காலத்திலும் இருந்துகொண்டே இருக்கும் ஒரு மாறாத வடிவம் இருக்காது. நூறாண்டுகள் பின்னோக்கிச் சென்றாலே அதன் அமைப்பும், அதன் வழிபாடுகளும் மாறியிருப்பதை காணமுடியும். திருச்சியில் நாம் காணும் காவேரி வேறு, மைசூரில் காணும் காவேரி வேறு. ஆனால் அது காவேரிதான். அதைப்போன்றதே இந்து தர்மமும்.

ஏன் அப்படிச் சொல்கிறோம்? சமன்வயம் அல்லது ஒருங்கிணைவு பற்றிச் சொன்னேன். அந்த இணைப்பு நடந்துகொண்டே இருக்கிறது. ஆனால் எதன் அடிப்படையில் அந்த இணைப்பு நடைபெறுகிறது? அடிப்படையான சில ஞானதரிசனங்களின் அடிப்படையிலேயே அந்த இணைப்பு நடைபெறுகிறது. அது மாறுவதில்லை. அது இத்தனை உருமாற்றங்கள் வழியாகவும் தொடர்ந்து வருகிறது. அதுவே இந்து மரபின் சாராம்சம். அது இருப்பதனால்தான் இதை ஒரே ஞானமார்க்கம் அல்லது தர்மம் என்கிறோம்.

முந்தைய கட்டுரைஆலயக்கலைப் பயிற்சி, கடலூர் சீனு
அடுத்த கட்டுரைபிரபந்த வகுப்பு, கடிதம்