நவீன மருத்துவம், கடிதம்

நவீன மருத்துவம், கடிதம்

மருத்துவப்பயிற்சி, கடிதம்

அன்பிற்குரிய ஆசிரியருக்கு

நவீன மருத்துவ முகாம் அறிவிப்பு வந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இடம் நிரம்பி விடுமோ என்ற அச்சத்தில் உடனடியாக பதிவு செய்தேன். அதன் பின்னர் தான் தெரிந்தது யாரும் ஆர்வம் காட்டவில்லையென. பின்னர் யோசித்தேன் ஏன் இவ்வளவு முக்கியமான வகுப்பிற்கு எவரும் ஆர்வம் கொள்ளவில்லை?… ஒருவேளை இந்த வகுப்பு நோய்க்கான ஆலோசனை அல்லது அறிவுரை கூறும் விதமாக இருக்குமோ என்று நினைத்தார்களோ என்னவோ? அல்லது ஒருவர் தன் நோய்க்கான ஒரு குறிப்பிட்ட சிகிச்சையை எடுத்துக்கொண்டிருக்க அதற்கு முரண்பட்ட ஆலோசனையை இந்த வகுப்பின் மூலம் பெறக்கூடி அச்சம் கொண்டார்களோ என்னவோ?… ஆனால் வெள்ளிமலையில் நிகழும் அனைத்து வகுப்புகளும் நான் மேற்கூறிய சில்லறை விடயங்களுக்கு நேர் எதிரானவை. ஏனெனில் இங்கு நிகழும் வகுப்புகளனைத்தும் முழுக்க முழுக்க அறிதலின் இன்பங்களை சார்ந்தது. இன்பங்களிலெல்லாம் பேரின்பம் கற்றலின் மூலம் பெரும் இன்பங்களே. அதற்கு நிகரான இன்பம் வேறொன்றுமில்லை. இதனை நான் வெள்ளிமலையில் கலந்துகொண்ட வகுப்புகள் வாயிலாக உணர்ந்தேன்

மருத்துவர் மாரிராஜீம் இந்த வகுப்பிற்கு ஆட்கள் குறைவாகவே வருவார்கள் என்று எண்ணியிருந்தார். ஆனால் அவரே பிரம்மிக்கும் விதமாக வகுப்பின் முதல் நாளிலேயே அனைவரும் உற்சாகத்துடன் முக்கியமான வினாக்களை எழுப்பி அவரை மகிழ்வூட்டினர். அதற்கு வெகுமதியாக கேள்விக்கான விடையை அளித்தவர்களுக்கு சாக்லேட் வழங்கி மேலும் வகுப்பை சுவாரஸ்யமாக்கினார்

நவீன மருத்துவம் எப்படி உடலையும் மனதையும் பார்க்கிறது என்ற ஆர்வத்தின் உந்துதலிலேயே நான் இவ் வகுப்பில் கலந்தேன். அந்த ஆர்வத்தை மேன்மேலும் புதுபிக்கும் வகையில் மாரிராஜ் அவர்கள் ஒரு மருத்துவ துறை மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது போல் அல்லாமல் அனைவரும் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் மிகவும் நேர்த்தியாக நடத்தியது என்னை உண்மையில் ஆச்சரியமூட்டியது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் எவ்வாறு தத்தம் வேலைகளை முழுவீச்சில் நம் உடலை காக்கும் பொருட்டு செயல்படுகிறது அந்தந்த உறுப்புகளின் தனித்துவம் என்ன என்பதை அவர் கூறிய எளிமை விதம் என்னை மூன்று நாட்கள் வகுப்பிலும் மேலும் மேலும் ஆச்சரியத்துடனேயே கடத்தி சென்றது. நம் உடலில் இத்தகைய பெரும் நிகழ்வு நடக்கின்றதா என்றென்னி மெய்சிலிர்த்தேன். அப்போது தான் சிந்தித்தேன்.கடைசியாக எப்போது நான் நோய்வுற்று கிடந்தேன்?… வெகு வெகு நாட்களுக்கு முன் எப்போதோ ஒரு வருடத்தில். எனில் நான் இத்தனை காலமும் ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடித்ததன் நீட்சியா என்றால் உண்மையில் இல்லை.ஏனெனில் தவறான ஆரோக்கியத்தையே நாம் ஆரோக்கியம் என்ற மிதப்பில் உள்ளோம். உண்மையில் நம் உடல் உறுப்புகளின் முழுமையான, புதிரான செயல்பாட்டின் வாயிலாவே அது நம்மை காக்கின்றது. ஒருவர் தொடர்ந்து பல காலம் மது அருந்தி, புகை பிடித்து இன்னும் என் வலிமை கல் போல் இருக்கிறது என்று ஆணவத்தால் கூறுவாறே தவிர்த்து அதற்கு முக்கியமான காரணம் தம் உடல் உறுப்புகளின் முழுவீச்சின் செயல்பாடே இன்றி வேறொன்றுமில்லை. அத்தனை திடமான நம் உடல் நம்மை பேணுகிறது. அந்த முழுவீச்சின் செயல்பாட்டின் சிறிது விரிசலே நம்மை நோய்வுற செய்கிறது. இந்த விந்தையை எண்ணி எண்ணி பெரும் ஆனந்ததுடனேயே மூன்று நாள் வகுப்புகள் சர்ர்ர் என்று கடந்துது

இந்திய மருத்துவமுறைகளை பற்றி ஒரு நேர்த்தியான அறிமுகம் தொடங்கி இன்றைய நவீன மருத்துவம் எவ்வாறு நவீன அறிவியலை(வேதியியல், இயற்பியல், உயிரியல்) இன்னும் பல துறைகளை உள்வாங்கி உடலை அணுகின்றது என்பதை ஆர்வம் ததும்ப விளக்கினார். நான் நினைத்தை விட மிகவும் சுவையாக இருந்தது. (கற்றது கைமண்ணலவே

வகுப்பின் ஓய்வு களில் அருண்மொழி மேடமுடன் பயணம் சார்ந்த உரையாடலும் அங்கு சமையல் செய்த அம்மாவிற்கு காய்கறிகளை நண்பர்கள் நாங்கள் சிலர் ஒன்றிணைந்து நறுக்கியதும், அந்தியூர் மணி அண்ணாவுடன் இரவில் நிகழ்ந்த ஆன்மீக உரையாடல்களும் மேலும் சுவையாக இருந்தது.

ஒரு வேண்டுகோள்:இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதமும், நவீன மருத்துவமும் நிகழ்ந்தாகிவிட்டது. மற்ற மருத்துவ முறையான   ஹோமியோபதி மற்றும் அலோபதிக்கும் ஒரு அறிமுகம் இருந்தால் சாலச்சிறந்ததாகவும், முழுமையாகவும் இருக்கும் என எண்ணுகிறேன்

அன்புடன்

அசோக்

ஊட்டி

முந்தைய கட்டுரைகற்றலுக்குச் சூழல் அவசியமா?
அடுத்த கட்டுரைமுழுமைக்கல்வியில் அரசியல் தேவையா?