இஸ்லாமிய மெய்யியல் வகுப்புகள், அறிவிப்பு

இஸ்லாமிய மெய்யியல் – இலக்கிய அறிமுகம்

இந்தியப் பண்பாட்டின் ஓர் அம்சமாக இஸ்லாம் பலநூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஆனால் இஸ்லாம் குறித்த புரிதல் இஸ்லாமியர் அல்லாதவர்களிடமில்லை. அப்புரிதல் இல்லாமல் இந்திய வாழ்வில் ஒருமைப்பாடு அமையாது. நமக்குத்தேவை ‘சகிப்புத்தன்மை’ அல்ல ‘புரிதல்’.

இஸ்லாமின் மெய்யியல்களில் ஒன்றான சூஃபி மரபு இந்திய ஆன்மிகச் சிந்தனையில், இந்திய கலைகளில் (குறிப்பாக இசையில்) மிகப்பெரிய பங்களிப்பாற்றிய ஒன்று. அதை உணராமல் இந்திய இலக்கியத்தையும் கலையையும் முழுதறிய இயலாது.

இஸ்லாமிய அரசியல்வாதிகளிடமிருந்து எவரும் அப்புரிதலை அடையமுடியாது, அவர்கள் பிரிவினையையே முன்வைப்பார்கள். இஸ்லாமிய மெய்யியலை அறிந்தவர்களிடமிருந்தே அப்புரிதலை அடையமுடியும். இன்று வெறுப்பும் பிரிவினைநோக்கும் ஓங்கியுள்ள சூழலில் ஆழ்ந்து அறிதலே இச்சூழலுக்கு எதிரான மெய்யான எதிர்வினையாக அமையும்.

இஸ்லாமியர்கூட இன்று இஸ்லாமை இரண்டு வகையிலேயே அறியமுடியும். மதம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும். மெய்யியல் சார்ந்து அறிய அதற்கு மட்டுமே உரிய வகுப்புகள் மிக அரிது.

தமிழ்ப்பண்பாட்டின் முக்கியமான ஒரு கூறு தமிழ் இஸ்லாம். தமிழின் காவியமரபு, தமிழின் சிற்றிலக்கிய மரபு இரண்டிலும் பெரும்பங்களிப்பு கொண்டது. அதை தமிழிலக்கிய வாசகர், தமிழ்ப்பண்பாட்டு ஆர்வலர் அறிந்திருக்கவேண்டும்.

கவிஞர், இஸ்லாமிய ஆய்வாளர் நிஷா மன்ஸூர் நடத்தும் இவ்வகுப்பில் இஸ்லாம் மதத்தின் வரலாற்றுப்பின்னணி, அதன் மெய்யியல், அதன் உலகளாவிய சூஃபி மரபு, தமிழ் சூஃபி இலக்கியம் ஆகியவை பயிற்றுவிக்கப்படும்

ஜூலை 12 13 மற்றும் 14 (வெள்ளி மாலை முதல் ஞாயிறு மதியம் வரை)

தொடர்புக்கு [email protected]

==============================================

எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru  

Our English Website   unifiedwisdom.today 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

 

முன்பு அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் – இடமிருப்பவை 

 

 

கிறிஸ்தவ மெய்யியல் அறிமுக வகுப்பு

சிறில் அலெக்ஸ் நடத்திய முந்தைய பைபிள் வகுப்பு பற்றி வந்த எதிர்வினைகள் மூன்று கோணங்களில் இருந்தன. பெரும்பாலும் இளைஞர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்வு அது. எதிர்வினைகளும் இளைஞர்களிடமிருந்தே

  1. பைபிள் வகுப்பு மிகமிக உணர்ச்சிகரமானதாக இருந்தது. பல இடங்கள் நெகிழ்வில் கண்ணீர் வருமளவுக்கு கவித்துவமும் ஆன்மிகமுமான எழுச்சி கொண்டிருந்தன. மதம் என்னும் சொல்லையே இன்னொரு கோணத்தில் பார்க்க முடிந்தது.  நாம் வேறுமதத்தைச் சார்ந்தவர் என்றாலும் அந்த மதத்தை புதியதாக பார்க்க ஆரம்பிப்போம். தத்துவார்த்தமான புதிய கோணம் உருவாகியது.
  2. பைபிள் என்பது மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த பண்பாட்டு வரலாறும் அடங்கியது என்று புரிந்தது. பைபிளின் அடிப்படைத்தத்துவ அறிமுகமில்லாமல் ஐரோப்பிய சினிமாக்களைப் பார்ப்பது வீண். அவற்றை புரிந்துகொண்டோம் என நினைப்பது அசட்டுத்தனம். ஐரோப்பிய இசை,ஐரோப்பிய இலக்கியம் எல்லாவற்றையுமே பைபிள் வழியாகவே சரியாகப்புரிந்துகொள்ள முடியும்
  3. பைபிள் அறிமுகம் என்பது என் தொழிலுக்கு முக்கியமானது என்று தெரிந்தது. என் தொழிலில் என்னுடன் தொடர்புகொள்ளும் ஐரோப்பியர், அமெரிக்கர் பலர் கிறிஸ்தவர்கள். அவர்களின் மதக்கொள்கை என்ன என்றே தெரியாமல் இருப்பது என்னை முட்டாளாகக் காட்டிவிடும் என புரிந்தது. ஏனென்றால் என் மதம் பற்றி அவர்கள் கொஞ்சம் தெரிந்துகொண்டே வருகிறார்கள்.

முறைப்படி கிறிஸ்தவ இறையியல் பயின்றவரான நண்பர் சிறில் அலெக்ஸ் நவீன வாசகர்களுக்காக பைபிளின் ஆன்மிகத்தையும் அழகியலையும் வரலாற்றையும் கற்பிக்கிறார். இவ்வாறு பைபிள் அறிவார்ந்து மட்டுமே கற்பிக்கப்படும் இன்னொரு இடம் இல்லை.

ஆன்மிகமாக பைபிளைச் சென்றடைவது ஓர் ஆழ்ந்த பயணம். எந்த ஆன்மிகப்பயணிக்கும் இன்றியமையாதது. ஆனால் இது மதக்கல்வி அல்ல. இதனுடன் வழிபாடோ பிரார்த்தனையோ இணைக்கப்படுவதில்லை. ஒருவர் ஆன்மிகமான தன் பயணம் வழியாக பைபிளை அறிவதற்கான கல்வி மட்டுமே.அத்துடன் பிற மெய்யியல்களுடன் இணைத்து ஓர் ஒட்டுமொத்த அறிதலை, அகவிரிவை அடைவதற்கான பயிற்சியும்கூட

ஜூன்21 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]

வைணவ இலக்கிய அறிமுக முகாம்

நாலாயிரத் திவ்யபிரபந்தமே வைணவ தத்துவம் தோன்றிய விளைநிலம். அதை அறிவார்ந்து அணுகுவதும், அதன் தமிழ்ச்சுவையை அறிவதும் இன்றைய தமிழ்ப்பண்பாட்டை அறிவதற்கு மிக இன்றியமையாதது. அறியாதவர் தமிழறியாதோர் என்றே சொல்லிவிட முடியும். இதற்கு முன் நான்கு வகுப்புகள் வைணவ இலக்கிய அறிமுக முகாம் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொன்றும் மிகப்பெரிய அறிதலாகவும் உணர்வனுபவமாகவும் இருந்தது என்றே கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

நாள் ஜூன் 28, 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)

——————    ——————————————————————————-

இடங்கள் நிறைந்தவை

(பல நிகழ்வுகள் முகப்பில் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இடங்கள் நிறைவுறுவதனால் ஆர்வமுள்ளோர் முன்னரே விண்ணப்பிக்கும்படிக் கோருகிறோம்)

தத்துவம் நான்காம் வகுப்பு :இந்திய தத்துவம் நான்காம் வகுப்பு ஜூன் 14, 15, 16 ஆம் தேதிகளில் நிகழ்கிறது. இடங்கள் நிறைவுற்றன

பௌத்த மெய்யியல்- தியானம். நாள் ஜூலை 5,6  மற்றும் 7  தேதிகளில் நிகழ்கிறது (வெள்ளி, சனி ,ஞாயிறு)( இடங்கள் நிறைவுற்றன)

ஜெயமோகன்

அபுனைவு வாசிப்புப் பயிற்சி ஜூலை 19 மற்றும் 20 தேதிகள். (வெள்ளி, சனி)(இடங்கள் நிறைவுற்றன)

தத்துவம் முதல் வகுப்புஆகஸ்ட் 2,3 மற்றும் 4 (வெள்ளி, சனி, ஞாயிறு) அன்று அறிவிக்கப்பட்டிருந்த தத்துவம் முதல் வகுப்புக்கான இடங்கள் நிறைவுற்றன.

 வரவிருக்கும் நிகழ்வுகள்

(இப்போதே விண்ணப்பிக்கலாம்)

 

அடிப்படை யோகப்பயிற்சி முகாம்

யோக ஆசிரியர் சௌந்தர் நடத்தும் அடிப்படை யோகப்பயிற்சி முகாம். இது யோகத்தை அறிமுகம் செய்துகொள்பவர்களுக்கும், ஓரளவு தெரிந்து முறையாகச் செய்ய விரும்புபவர்களுக்கும் உரியது. சௌந்தர் சிவானந்த யோக மரபைச் சேர்ந்தவர். முறையான பயிற்சிபெற்றவர்கள். சத்யானந்த யோக மையம் என்னும் அமைப்பை நடத்தி வருகிறார். முற்றிலும் மரபான முறையில் யோகப்பயிற்சிகள் அளிக்கிறார்

இரு சாராருக்கு இந்தப்பயிற்சிகள் மிக உதவியானவை என நாங்கள் கண்டடைந்துள்ளமையால் இவற்றை முன்வைக்கிறோம்.

தொடர்ச்சியாக அமர்ந்திருக்கும் வாழ்க்கை காரணமாகவும், உள்ளறை வாழ்க்கையின் சலிப்பு காரணமாகவும் உடல் இறுக்கமடைந்து, பலவகையான உடல்வலிகள் மற்றும் துயில்நீக்கம் அடைந்து சிக்கலுக்குள்ளாகும் இளைய தலைமுறையினருக்கு இவை விடுதலையை அளிக்கின்றன.
முதுமையின் வழக்கமான உடல்நலிவை மிக ஓய்வான வாழ்க்கை மற்றும் உளச்சலிப்பு காரணமாக பலவகையான உடல்வலிகள், துயில்நீக்கம் போன்றவற்றை அடைந்தவர்கள்.

இவ்விரு சாராருக்கும் அவரவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனித்தனியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே ஒரு முகாமில் பங்கேற்பு அமையும். ஆகவே ஆசிரியருடன் நேரடித்தொடர்பு, உரையாடலுக்கு வழி அமையும். யோக ஆசிரியர் வாழ்க்கைமுறை அனைத்துக்கும் குரு என்னும் நிலையிலிருந்து வழிகாட்டவேண்டும் என்பது மரபு.

இப்பயிற்சிகள் இந்து மரபைச் சேர்ந்தவை என்றாலும் நாங்கள் இவற்றை மதம்கடந்தவையாகவே முன்வைக்கிறோம். இப்பயிற்சிகளுடன் எந்த மதநம்பிக்கையும், மதச்சடங்கும் கலந்துகொள்ளப்படுவதில்லை. எல்லா மதத்தவரும் நாத்திகர்களும் கலந்துகொள்ளலாம்

நாள் ஜூலை 26 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு) 

 

 

ஆலயப்பயிற்சி, இரண்டாம் நிலை

இது வரை நிகழ்ந்த ஆலயப்பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டவர்களுக்கான அடுத்த நிலை பயிற்சி இது. இதில் ஓர் ஆலயத்தில் மேற்கொண்டு கற்கவேண்டியவை, கவனிக்கவேண்டியவை எவை என ஆசிரியர் பயிற்றுவிப்பார்.

அத்துடன் இக்கல்வியை எப்படி நமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக்குவது என்றும் கற்பிப்பார். ஓர் ஆலயத்தை எடுத்துக்கொண்டு முழுமையாக அதை ஆராய்ந்து, ஆவணப்படுத்தி எப்படி ஒரு சிறு நூலாக எழுதுவது என்பது ஆர்வமுள்ளவர்களுக்குக் கற்பிக்கப்படும்.

சிறு குழுவாக ஆகி இதை செய்வது செய்பவர்களுக்கும் ஆழ்ந்த கவனத்தையும், ஆலயக்கலை சார்ந்த பயிற்சியையும் அளிக்கும். நம் ஆலயங்ளைப் பதிவுசெய்யும்  பெரும்பணியையும் தொடங்கியவர்கள் ஆவோம்

நாள் ஆகஸ்ட் 16 17 மற்றும் 18 (வெள்ளி, சனி, ஞாயிறு)

ஜெர்மானிய தத்துவ அறிமுகம்

ஜெர்மானிய தத்துவம் கான்ட் முதல் ஹைடெக்கர் வரை. ஓர் அறிமுகம்.

நடத்துபவர் அஜிதன்.

ஆகஸ்ட் 23,24 மற்றும் 25 (வெள்ளி சனி ஞாயிறு)

 

 ===================ட்===================================

 Our other websites

Tamil   unifiedwisdom.guru  

You tube Channel Unified Wisdom You Tube

Face Book muzumaiarivu

Insta  muzumaiaivu insta

=======================================================

எங்கள் இணையப்பக்கம்

முழுமையறிவு

முந்தைய கட்டுரைஇந்துமதத்தை பாரசீகர்கள் உருவாக்கினார்களா?
அடுத்த கட்டுரைகுரு நித்யா காவிய முகாம் – கடிதம்