எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வெவ்வேறு குரல்களில் நாம் கேட்டுவரும் ஒரு வரி, இந்துமதம் பாரசீகர்களால் உருவாக்கப்பட்டது, அவர்கள்தான் இந்து என்ற பெயரை அளித்தனர் என்பது. பழைய நூல்களில் இந்து என்ற பெயரே இல்லை என்பார்கள்.
தமிழகம் முழுக்க திராவிட இயக்க மேடைகளில் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்துக்களிலேயே தங்களை பகுத்தறிவு கொண்டவர்கள் என நம்பும் பலர் அதைச் சொல்வார்கள். அந்த வரி உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதப்பரப்புநர்கள் சொன்னது. அதில் இருந்து இவர்கள் எடுத்துக்கொண்டனர். அவர்களுக்கெல்லாம் உள்நோக்கம் உண்டு. அவர்களை சொல்லி வெல்லவே முடியாது. நாம்தான் கொஞ்சம் வரலாற்றுடன் இணைத்துப் புரிந்துகொள்ளவேண்டும்.
இமையமலை நம் வடதிசையில் எழுந்து நிற்கிறது. மகாபாரதம் அதை தெய்வங்களின் இடம் என்கிறது. ’தேவதாத்மா ஹிமாலயா’ என்று குமாரசம்பவத்தில் காளிதாசன் சொல்கிறான். ’வடாஅது பனிபடு நெடுவரை’ என புறநாநூறு சொல்கிறது.
இந்தியாவை நவீன நில அளவை முறைப்படி 1802 முதல் வெள்ளையர் அளக்க தொடங்கினர். அந்த மலையை அளந்து அதன் உயரத்தை மதிப்பிட்டு அதில் உயர்ந்த சிகரத்திற்கு பதினைந்தாம் சிகரம் என பெயரிட்டனர். 1865ல் பிரிட்டிஷ் நில அளவையாளரான ஜார்ஜ் எவரெஸ்டின் பெயர் அதற்கு போடப்பட்டது. ஆனால் திபெத், நேப்பாளி மொழிகளிலும்; மற்றும் உள்ளூர் ஷெர்பாக்களின் மொழியிலும் அந்த சிகரத்துக்கு ஏற்கனவே பல பெயர்கள் இருந்தன.
இன்றைக்கு ஒருவர் வந்து 1865 ல்தான் எவரெஸ்ட் ‘கண்டுபிடிக்கப்பட்டது’ என்றும், அதற்கு முன் அது இல்லை என்றும் சொன்னால் அவரை நாம் எந்த மருத்துவமனைக்கு அனுப்புவோம்? இந்து மெய்ஞான மரபுக்கு இந்து என்ற பெயர் முன்னர் இல்லை என்று கொள்வோம். அப்படி ஒன்று இங்கு இருந்தது அல்லவா? அதன் பெயர் என்ன என்றுதானே பார்க்கவேண்டும். அது என்னவாக இருந்தது?
மதங்களின் உருவாக்கத்தைப் பற்றி இன்று ஏராளமாகவே பேசப்பட்டுள்ளது. சுருக்கமான, எளிய ஒரு சித்திரத்தை அளிக்கிறேன். மதங்கள் என நாம் இன்று அடையாளப்படுத்துபவை இரண்டு வகை. ஒன்று, இயற்கை மதங்கள். இரண்டு, தீர்க்கதரிசன மதங்கள்.
தீர்க்கதரிசன மதங்கள் ஓரு ஞானியின் படிப்பினைகளில் இருந்து தோன்றுபவை. அவருடைய மாணவர்களால் அந்த படிப்பினைகள் தொகுக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. அதை நம்புகிறவர்கள் மெல்ல மெல்ல ஓர் அமைப்பாக ஆகிறார்கள். காலப்போக்கில் அது ஒரு தத்துவக் கொள்கையாகவும் வழிபாட்டு முறையாகவும் ஆகும். அதற்கென அமைப்புகள் உருவாகும். அது மதம் என அழைக்கப்படும்.
உதாரணமாக, சமணம், பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியம் போன்றவை தீர்க்கதரிசன மதங்கள். அந்த முதல் ஞானிகள் தங்களுக்கு முன்பே ஒரு மரபு இருந்தது என்று அடையாளப்படுத்துவார்கள். உதாரணமாக வர்த்தமான மகாவீரர் தனக்கு முன் 23 தீர்த்தங்காரர் இருந்தார்கள் என்று சொல்லி தன்னை 24 ஆவது தீர்த்தங்காரர் ஆக அறிவித்தார். ஆனால் வர்த்தமானரின் போதனைகளே அந்த மதத்தின் தொடக்கமாக கொள்ளப்படுகின்றன.
இந்தியாவில் மகதி கோசாலன் உருவாக்கிய ஆசீவகம் என்னும் தீர்க்கதரிசன மதம் இருந்தது. அது மறைந்துவிட்டது. மத்திய ஆசியாவில் ஏராளமான தீர்க்கதரிசன மதங்கள் இருந்து மறைந்துவிட்டன. ஈரானில் பொதுயுகம் (கிபி) 3 ஆம் நூற்றாண்டில் மாணி என்னும் பாரசீக இளவரசர் தொடங்கிய மாணிகேய மதம் (Manichaeism) மதம் மிகப்பெரிய அளவில் இருந்தது. அது மறைந்துவிட்டது. ஜரதுஷ்ட்ரர் என்னும் ஞானி ஈரானில் உருவாக்கிய பார்ஸி மதம் இன்று சிறிய அளவில் எஞ்சியுள்ளது. அந்த தீர்க்கதரிசன மதங்களில் இன்று வலுவாக இருப்பவை கிறிஸ்தவமும் இஸ்லாமும்தான்.
அதேபோல புதிய தீர்க்கதரிசன மதங்களும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இருநூறாண்டுகளுக்கு முன், பொயு 1817 முதல் 1892 வரை ஈராக்கில் வாழ்ந்த பஹாவுல்லா என்பவரால் உருவாக்கப்பட்ட பஹாய் மதம் இன்று உலகம் முழுக்க உள்ளது. நூறாண்டுகளுக்கு முன்பு 1835 முதல் 1908 வரை பஞ்சாபில் வாழ்ந்த மிர்ஸா குலாம் அஹமத் உருவாக்கிய அஹமதியா மதமும் உலகம் முழுக்க உள்ளது. இவை இஸ்லாமில் இருந்து பிரிந்த மதங்கள்.
இயற்கை மதங்கள் என்பவை இப்படி ஒரு குறிப்பிட்ட ஞானியிடமிருந்து உருவாகி வருபவை அல்ல. அவை வரலாற்றின் போக்கில் இயற்கையாக உருவாகி வருபவை. அவற்றின் தொடக்கம் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டமாக இருக்கும். எந்த இயற்கைமதமும் எப்படி எப்போது தோன்றியது என்று சொல்லிவிட முடியாது. வரலாற்றின் வழியாக அவை வளர்ந்துகொண்டே இருக்கும்.
ஆகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் அவற்றுக்கு ஒவ்வொரு பெயர் இருக்கும். இடம்சார்ந்த பெயர் இருக்கும். இனம் சார்ந்த பெயர் இருக்கும். வெளியே இருந்து பார்த்தவர்கள் போட்ட பெயர் இருக்கும். ஒரு சொல் காலப்போக்கில் மருவி வந்த பெயர்கூட இருக்கும்.
இந்து மதம் என நாம் இன்று சொல்வது ஓர் இயற்கை மதம். உலகில் இதேபோல ஏராளமான மதங்கள் இருந்துள்ளன. ஐரோப்பாவில் இருந்த கிரேக்கமதம் உலகுக்கே ஞானத்தை வழங்கிய ஓர் இயற்கை மதம். அரிஸ்டாட்டில், பிளேட்டோ, சாக்ரட்டீஸ் எல்லாம் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். அது அந்த நாட்டின் பெயரால்தான் இன்று குறிப்பிடப்படுகிறது. அப்பல்லோ, பொஸைடைன், சோபியா போன்றவை கிரேக்க தெய்வங்கள்.
ஐரோப்பாவில் இருந்த இயற்கை மதங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. அவற்றை பொதுவாக பாகன் மதங்கள் (Paganism) என்கிறார்கள். அந்தப்பெயர் பிற்கால கிறிஸ்தவர்களால் போடப்பட்டது. அதன் பொருள் கிராமியமான, முரட்டுத்தனமான, பண்படாத மதம் என்பது. அம்மதங்களின் தெய்வங்கள் இன்று வெறும் கதைகளாகவும் சிலைகளாகவும் உள்ளன. பாகன் மதங்களில் ஒன்று கெல்டிக் மதம். அந்த மக்களின் இனப்பெயர் அது. தோர் என்று இன்று ஹாலிவுட் சினிமாக்களில் சுத்தியலுடன் வருவது கெல்டிக் மதத்தின் தெய்வம்.
திபெத்தில் பான் மதம் என்ற இயற்கை மதம் இருந்தது. ஜப்பானில் ஷிண்டோ என்ற இயற்கை மதம் இருந்தது. யூதமதமும் இயற்கை மதம்தான். எகிப்தில் இருந்த மதமும் இயற்கை மதம்தான். அவை பெரும்பாலும் இன அடையாளம் கொண்டவை.
இந்தியாவிற்கு பாரசீக வணிகர்கள் வந்தபோது சிந்து நதியை இண்டஸ் என்றனர். அதற்கு இப்பால் இருந்த மக்களை இந்துக்கள் என்றனர். இஸ்லாமியர் ஆட்சி செய்தபோது அவர்களை இந்துக்கள் என்று ஆட்சி வசதிக்காக குறிப்பிட்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபோது முகலாயர் காலத்து ஆட்சிமுறையையே பின்பற்றினர். ஆகவே அவர்களும் இந்து என்ற சொல்லை பயன்படுத்தினர்.
ஆமாம், இந்து என்று பெயரிட்டது பாரசீகர்தான். அதை சட்டபூர்வமாக ஆக்கியவர்கள் பிரிட்டிஷார்தான். இன்னும் இருநூறாண்டுகளில் இந்தப்பெயரும் மாறி இன்னொரு பெயர் வரலாம். பெரும்பாலான நதிகளுக்கு அப்படி பல பெயர்கள் உள்ளன. மலைகளுக்கு ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பெயர் உண்டு. இயற்கை மதம் என்பது பெயர் சூட்டி தொடங்கப்பட்ட லிமிட்டட் கம்பெனி அல்ல. அது ஓர் இயற்கையான நிகழ்வு.
இந்து மதம் என நாம் இன்று சொல்லும் இந்த மெய்ஞான மரபு குறைந்தது ஆறாயிரம் ஆண்டுகளாக மெல்லமெல்ல உருவாகி, செறிவாகி, இன்றைய வடிவை அடைந்துள்ளது என்ற புரிதல் நமக்கு வேண்டும். அது எப்படி உருவாகி வளர்ந்தது, ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்தது என்று நாம் அறிந்துகொள்ளவேண்டும். அப்போது இவ்வாறு எவரேனும் வந்து நம்மிடம் ‘இந்துமதத்தை உருவாக்கியவர்கள் பாரசீகர்கள்’ என்று உளறினால் ’நகர்ந்து போடா முட்டாள்’ என்று சொல்லும் திராணி கைகூடும்.