குரு நித்யா காவிய முகாம் – கடிதம்

அன்புள்ள ஜெ,

எல் என்பது சூரியனைக் குறிக்கும் சொல் என்று முதல் நாள் நீங்கள் சொன்னது புதியதாக இருந்தது. பக்தி இலக்கிய அமர்விலும் கம்பராமாயண அமர்விலும் தமிழ் சொற்களின் பயன்பாடு குறித்த விளக்கங்களும் உரையாடல்களும் மிகவும் ஆர்வமூட்டும் ஒன்றாக இருந்தது. பவக்கடல் என சமணக் கோட்பாட்டினை திருவிளையாடற் புராணம் முதல் சீறாப்புராணம் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கும் பகுதியும் அற்புதமாக இருந்தது.  அற்புதத் திருவந்தாதி முதல் திருவாலங்காட்டு திருப்பதிகங்கள் வரையிலான காரைக்கால் அம்மையாரின் பயணம் குறித்து அந்தியூர் மணி அண்ணாவின் அவதானமும் அதற்கு நீங்களும் நாஞ்சில் நாடன் அவர்களும் அளித்த மேலதிக விளக்கம், குறிப்பாக காரைக்கால் அம்மையார் பேயுருவம் கொண்டார் என்பதை காளாமுகர்-காபாலிகர் என அமங்கல சமய பிரிவில் இணைந்தார் என பொருள் கொண்டது அபாரமானது.    வேதங்களில் சிவன் இல்லை என்பதும், ஷோடச ருத்திரனே பின்னர் சிவபெருமானாக பரிணாமம் அடைந்ததையும் , சுந்தர சைவம் – அமங்கல சைவம் முரணியக்கத்தை விளக்கி Aesthetics of absurdity – insanity என அதை நீங்கள் சொன்னது அற்புதமான ஒன்று.

கவிதையின் தொடர்புறுத்தலில் இசையின் முக்கியத்துவம் பார்கவி அவர்களது கம்பராமாயண அரங்கில் அறிய முடிந்தது. சொல் நயமும் பொருள் நயமும் இசையுடன் இணைகையில் வருகின்ற இனிமை அற்புதமானது.

நாஞ்சில் நாடன் , தேவதேவன்‌அவர்கள் கவிதைகளில் ஓசை நயம் குறித்து தனியாக பேசிக்கொண்டிருக்கையில் நாஞ்சில் சாரின் கம்பராமாயண விளக்கம் அற்புதமான ஒன்றாக இருந்தது. சலம் என்றால் சூழ்ச்சி, வாள் என்றால் வைரம் – விஷம், கவிக்குலம் என்பதில் கவி என்றால் குரங்கு, அண்ணல் என்றால் யானை என சொல்லிக் கொண்டே சென்றார். ராமன் தன்மீது தொடுத்த அம்பினை கையால் பற்றிய வாலி,

வீரம் அன்று; விதி அன்று; மெய்மையின்

வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என் உடல்

பாரம் அன்று; பகை அன்று; பண்பு அழிந்து 

ஈரம் இன்றி, இது என் செய்தவாறு அரோ

என்று சொன்னதை நாஞ்சிலாரின் உணர்ச்சிமிகு குரலில் கேட்டது பேரனுபவம். மேலும் கும்பகர்ணன்,

நீர்க்கோல வாழ்வை நச்சி

மா துயர் நரகம் நண்ணாவண்ணமும் காத்தி மன்னோ   

என விபீஷணனை வழியனுப்பும் நிகழ்வும் அற்புதமான ஒன்று.

மேலும்,  பாரதிதாசனின் ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை 

எழுதென்று சொன்னது வான்

என்பதில் உள்ள ஓசை நயம் பற்றி விளக்கினார்.  மீனின் கருவை விட நுண்மையான ஆலம் விதை விரிந்தெழுந்தால் பேருருவம் கொள்ளும் என்று பொருள் வரும்

பிற்காலப் பாடல் ஒன்றையும் விளக்கினார்.

கடல் கொண்ட மதுரையிலிருந்து தப்பிய சில பரதவர்களின் நாவில் விளையாடும் தமிழ் பற்றி கொற்றவையில் ஒரு சித்திரம் வரும். நாமும் அவ்வாறு தான் இருக்கிறோம் என நாஞ்சில் சார் பேசுகையில் நினைத்துக் கொண்டேன்.

ஹோமர் மற்றும் தாந்தே குறித்த அரங்குகளும் சிறப்பாக இருந்தன. இலியட் சுட்டும் மைய விழுமியம் என்ன என்னும் கேள்விக்கு, ஆதி இலக்கியங்களை மறுசீரமைத்து விழுமியங்களை நாட்டுவதே செவ்விலக்கியம் என்று நீங்கள் கூறினீர்கள். மேலும், ஹோமரின் பார்வையின்மையை விழுமியத்தின் மீதான குருட்டுத்தனம் என்றும் சொன்னீர்கள். தேவதேவன் அவர்கள் போர் வன்முறை என்பது வீணடிக்கப்பட்ட ஆற்றல் என்று சொன்னார்.

தாந்தேவின் திருக்காட்சி குறித்த சுசித்ரா அவர்களது அமர்வும் அருமை. நரகம் – பாவனம் – சொர்க்கம் என்பதை ஜாக்ரத் – ஸ்வப்னம் – க்ஷுப்தி என்றும் விளக்கலாம்.  திருக்காட்சியின் மைய விழுமியம் அன்பு – நரகில் திரிபுபட்ட அன்பு , பாவனத்தில் அன்பின்மை, சொர்க்கத்தில் பேரன்பு என்று விளக்கியதும், நரகின் அடுக்கமைவு குறித்த விவரணையும் செறிவாக இருந்தது. எனிட்ஸ், அரிஸ்டாட்டில் முதல் அக்வினாஸ் வரையிலான விரிவான வரலாற்றுச் சித்திரம் மிக அற்புதமான ஒன்று.

நாட்டார் பாடல்கள் குறித்து நவீனின் உரை மீதான உங்களது விவரணையும் நன்றாக இருந்தது. மக்களின் ஏற்பு இல்லாமல் நாட்டார் பாடல்கள் நிலைப்பதில்லை. கலாச்சார பண்பாட்டு சூழல் மாற்றத்தினால் ஒவ்வொரு 500 – 600 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டார் பாடல்கள் அழிந்து உருமாறுகின்றன. ஆனால் செவ்விலக்கியம் என்பது ஆயிரமாண்டுகள் தாண்டினாலும் நிலைநிற்கும். மேலும் நாட்டார் பாடலுக்கும் செவ்விலக்கியத்திற்குமான முரணியக்கம் – இலக்கிய மரபு தேங்குகையில் நாட்டார் பாடலின் உள்நுழைவால் புத்துணர்ச்சி பெறுவதையும் பாரதியை உதாரணம் காட்டி நீங்கள் விளக்கியதும் நன்றாக இருந்தது.

நாஞ்சில் நாடன் சார், பாவண்ணன் சார், தேவதேவன் சாருடன் இடைவேளைகளில் உரையாட கிடைத்த வாய்ப்பு மிக அரிதான ஒன்று.

பின்நவீனத்துவம் குறித்த கடலூர் சீனுவின் மிக விரிவான பேருரையுடன்  மலையிறங்கி பவானி புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம் வரை சென்றோம்.

மிக மிக அரிய இந்த வாய்ப்பினை அளித்தமைக்கு நன்றிகள் பல.

சங்கரன்

முந்தைய கட்டுரைஇஸ்லாமிய மெய்யியல் வகுப்புகள், அறிவிப்பு
அடுத்த கட்டுரைபறவை பார்த்தல் வகுப்பு, கடிதம்