பறவை பார்த்தல் வகுப்பு, கடிதம்

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

வெள்ளிமலைக்கு முதன்முறையாக நான் சென்று வந்த போது நடந்த நிகழ்ச்சிகளை பற்றி எழுதியிருக்கிறேன்.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு வரை நானும் அம்மாவும் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தோம். 5 மணி நேரத்திற்குப் பிறகு ஈரோட்டில் இறங்கி, விஜயபாரதி சாருடன் வெள்ளிமலைக்கு புறப்பட்டோம். அந்தியூர், தாமரைக்கரை, தேவர்மலை போன்ற கிராமங்களைத்தாண்டி மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தோம். 2 மணி நேரத்திற்குப்பிறகு நித்யவனம் வந்தடைந்தோம்.

நான் திரு.கார்த்திகேயன் அவர்களோடு முதன்முறையாக தனியாக அறையில் தங்கியிருந்தேன். சிறிது நேரம் காற்று வாங்கிய பிறகு பசியில் சாப்பிட சென்றோம். அன்று இரவிற்குள்ளேயே கார்த்திகேயன் அவர்களோடு நட்பு கொண்டேன். நான் கோயம்பத்தூரிலிருந்து வந்த இரு பையன்களோடு அறிமுகமானேன். நள்ளிரவிலிருந்து காலைவரை யானை நடமாட்டம் இருப்பதாகவும், தானே அதற்கிடையில் சிக்கிக்கொண்டதாகவும் விஜயபாரதி சாரிடம் கேள்விப்பட்டேன்.

மறுநாள் காலையில் நித்யவனத்தில் இருந்த அழகான இடங்களை சுற்றி பார்த்துவிட்டு காலை வகுப்பறைக்கு சென்றோம். விஜயபாரதி சார் , ஈஸ்வரமூர்த்தி சார் ஆகிய ஆசிரியர்கள் இருந்தார்கள். ஈஸ்வரமூர்த்தி சார் ஈரோட்டில் வசிப்பவர், அவர் இதுவரையில் 136 பறவைகளை கண்டிருக்கிறாராம். எப்படி 136 வகைகளை பார்த்திருக்க முடியும் என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

பறவைகளை அடையாளம் காணும் ஐந்து வழிகளை கற்பித்தார்.

  • பறவைகளின் உடல் உருவம்
  • பறவையின் உடல் உறுப்புகள்
  • பறவை வாழும் இடம்
  • பறவையின் நிறம்
  • பறவையின் ஓசை/சத்தம்

அப்புறம் அவர்கள் பூநாரை, ஆள்காட்டி, உழவாரன்  போன்ற பறவைகளின் விசித்திர உருவங்களையும், செயல்களையும் கூறினார்கள். பிறகு ஒரு பறவையின் அளவை  சிட்டுகுருவி, மைனா, காகம், நாரை போன்ற பறவைகளால் குறிப்பிட வேண்டும் என்றார்.

பிறகு எங்களுக்குத் தெரியாத பறவைகளின் பெயரை பறவைகளை திரையில் பார்த்து எங்களையே கற்பனையாக ஒரு பெயர் வைக்கச் சொன்னார்கள். அதில் எனக்கு மிக விசித்திரமாக தெரிந்த ஒரு பறவை அரிவாள் மூக்கன் . அதன் மூக்கு ஏதோ ஒரு ஆயுதம் போல இருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு பறவையின் பெயரையும் சொன்னார்கள். எனக்கு அப்போது தெரிந்த பறவைகள் காக்கை, மைனா, கிளி, புறா, கழுகு, குயில், மயில் போன்றவைதான். நான் பறவைகளை அதிகமாக ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயத்தில் தான் கண்டிருக்கிறேன்.

ஒரு இடைவெளிக்கு பிறகு ஈஸ்வரமூர்த்தி சார் Merlin appல் 44 பறவைகளின் ஓசைகளைப் போட்டார்கள். அதிகமான சத்தங்கள் கேட்டவையாக இருந்தாலும் மிக சிலவற்றையே என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. பிறகு பறவைகளை கண்டுபிடிக்க தமிழ்நாடு பறவைகள் கையேடை அனைவருக்கும் கொடுத்தார்.

அதன் பிறகு மாலை 3.30 மணிக்கு பறவைகள் பார்க்கச் சென்றோம். ஒரு தோட்டம் வழியாக சென்று கவுதாரி, black drongo, மயில், மாங்குயில், ஷிக்ரா, plum headed parakeet, ashy wood swallow, bulbul, ashy prinia, purple sunbird, Indian roller பச்சை சிட்டு போன்ற பறவைகளை பைனாகுலர் மூலம் பார்த்தோம். மரங்களின் நடுவில், வயர் கம்பிகளுக்கு மேல் இருக்கும் பறவைகளை கைகாட்டியபடி பெயர் சொல்லி கொடுத்து, கண்டுபிடிக்க உதவினார்கள்.

அப்போது கனத்த மழை பெய்தது, பறவை ஆர்வலர்கள் பற்றி பேசினார்கள். முதலில் ‘பறவை மனிதர்’ என்று போற்றப்படும் சலீம் அலி அவர்கள் எழுதிய ‘ சிட்டுகுருவியின் வீழ்ச்சி’ பற்றிப் பேசினர். சுதந்திரத்திற்கு முன்னே binocular இல்லாததால் பறவைகளை கொன்று தான் ஆய்வு செய்தார்கள். 1914ல் அனைவருக்கும் வேட்டையாட தடை வந்தது. ஆனால் மன்னர் பரம்பரை வேட்டையாட அனுமதி இருந்ததாம். 1938ம் வருடத்திற்குப்பின் அனைவரும் வேட்டையாட கூடாது என்று சட்டம் வந்தது. பிறகு நீங்கள் எழுதிய ‘விசும்பு’ நாவலைப் வீட்டில் படிக்கச் சொன்னார்கள்.

அப்புறம் ‘பறவைகளின் நண்பர்’ எனப்படும் கிருஷ்ணன் அவர்களின் பறவைகள் ஓவியங்களையும் படங்களையும் காண்பித்தார்கள். அவர் சுற்றுச்சூழலைப் பற்றி இதழில் கிட்டத்தட்ட1500 articles எழுதியுள்ளாராம்.

பிறகு பறவைகளின் வலசை பற்றி பேசினார்கள். ‘Bar headed goose’என்ற பறவையின் வலசையை பற்றி பேசினார்கள். அது இமய மலையை தாண்டி வரும்போது இமயமலையில் காற்று 10% மட்டுமே உள்ளது. அந்த பறவை இருக்கின்ற காற்றை உபயோகித்துகொண்டு மதுரைக்கு வலசை வரும்!

‘Liar bird’என்னும் பறவை வல்லூறு சத்தமிடுவது போல் அதை மிமிக்ரி செய்யுமாம். தன்னை தற்காத்துக் கொள்ள, மரம் வெட்டுவதைப் போல சத்தம் போடுமாம். உலகிலேயே மிக எடை குறைவான பறவை male bee humming bird என்றார்கள் (எடை – 1.9 கிராம்).

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பறவை பார்க்கச் சென்றோம். கவுதாரி, புறா, தவிட்டுக்குருவி, கரிச்சான், Gold footed Duck (rare species), அரிவாள் மூக்கன், மயில் என்று அதிகமான பறவைகளை பார்த்தோம்.

காலை உணவுக்கு பின் வகுப்புக்கு சென்றோம். ராமநாதபுரம் பறவைகள் கையேடு பற்றி பேசி அதை வாங்கி படிக்க சொன்னார்கள்.

அதன் பிறகு மெர்லின் ஆப், ஈ- பேர்ட் ஆப் பற்றி கூறினார்கள். அது பறவைகள் கண்டுபிடிக்க பயன்படும் இணையம். அதில் தெரியாத பறவைகளை தெரிந்து கொள்ள முடியுமாம். நாம் பார்க்கும் பறவைகளை லைப் லிஸ்டில் சேர்த்து வைத்து கொள்ளலாம்.

கடைசியாக பறவை அடையாளம் காணும் டெஸ்ட் வைக்கப்பட்டது. பதினைந்து பறவைகளை ஸ்க்ரீனில் காண்பித்தார்கள். நாங்கள் அதன் பெயர்களை எழுதினோம். என்னால் பாதி பறவைகளை அடையாளம் காண முடிந்தது. மிகவும் மகிழ்ச்சியாக வகுப்பு முடிந்தது. குரூப் போட்டோ எடுத்து ஆசிரியர்களுக்கு வணக்கம் கூறி மதுரைக்கு புறப்பட்டோம்.

வீட்டில் சென்று மெர்லின் ஆப், ஈ-பேர்ட் ஆப் இன்ஸ்டால் செய்து வீட்டருகில் இருக்கும் பறவைகளை லைப் லிஸ்டில் சேர்த்தோம். அப்பாவிடம் binocular வாங்கித் தரும்படி கேட்டிருக்கிறேன். சென்னையில் விஜய் சார் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் இன்னும் சில இடங்களையும்  சென்று பறவைகளை காணலாம் என்று சொல்லி இருக்கிறார்.

 

மிக்க நன்றி

சுந்தரராஜன்

 

முந்தைய கட்டுரைகுரு நித்யா காவிய முகாம் – கடிதம்
அடுத்த கட்டுரைஅருகமர்ந்து கற்றல்