குரு நித்யா காவிய அரங்கு – பிகு கடிதம்

அன்புள்ள ஜெ

குரு நித்யா காவிய முகாம் முடிந்து ஒரு வாரம் கழிகிறது. ஒரு வாரம் கடந்தும் மனதின் எஞ்சுவனவற்றை தொகுத்துப் பார்க்க முடிகிறதா என்று காத்திருந்தேன். ஆச்சரியமாக, அந்த மூன்று நாட்களில் நடந்த அத்தனை அரங்குகளும் அநேக கலந்துரையாடல்களும் நினைவில் நிற்கின்றன. அதற்கு  முதன்மையான காரணம் அரங்கின் ஒழுங்கும் அமைப்பும் தான் என்று தோன்றுகிறது. ஒரு வழி கடத்தலாக இருந்திருக்கும்பட்சத்தில் இத்தனை தீவிரமாக உள்ளேறியிருக்க வாய்ப்பில்லை. ஏன் அந்த மூன்று நாட்களிலும் அரங்கு ஒழுங்கமைவுகளில் அவ்வளவு தீவிரம் காட்டினீர்கள் என்று இப்போது புரிகிறது.

மழை மிரட்டலால் பேருந்து சாத்தியங்களுக்கு உத்தரவாதம் இல்லை எனும்போது யோகா அண்ணனுடன் ஈரோட்டில் இருந்து வெள்ளிமலைக்கு காரில் இணைந்துகொண்டேன். வெள்ளி காலை ரயில் நிலையத்தில் இறங்கியதுமே உங்களைக் கண்டது இனிய வியப்பு! நீங்கள் முன்னே செல்ல நாங்கள் பின் தொடர்ந்தோம்.

காரில் இருந்த நால்வரில் ஒருவர் சுந்தரபாண்டியன் அண்ணன். உங்களுடன் கசகஸ்தான் பயணக்குழுவில் இருந்தவர். தொடக்கநிலை தயக்கங்களுக்குப் பிறகு அந்தப் பயணம் குறித்து அவரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டு வந்தேன். அவரும் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

நித்ய வனத்திற்கு இப்போதுதான் முதன்முறை வருகிறேன். அலைபேசி சிக்னல் இருக்காதென்பதே பெரிய ஆசுவாசமாக இருந்தது. இப்படி ஒரு அமைதியான மலைத்தங்குமிடத்தில் இதுவரை தங்கியதுமில்லை. அதேநேரம் முதன்முறை இப்படியான ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு முகாமில் கலந்துகொள்வதால் சற்றே பதற்றமும் இருந்தது. அதனாலேயே முகாம் முழுவதும் பெரும்பாலும் “silent spectator” ஆகவே இருந்தேன்.

மரபிலக்கிய அரங்கில் பக்தி இலக்கியம் குறித்த ஜா.ராஜகோபாலனின் அரங்கில் பிற இலக்கியத்தில் பக்தி இலக்கியத்தின் செல்வாக்கு பகுதிசுவாரஸ்யமாக இருந்தது. காரைக்கால் அம்மையார் அமர்வில் அதிலிருந்து வெளியே சென்று நிறைய புது விசயங்கள் தெரிந்துகொண்ட உணர்வு. பார்கவியின் கம்பராமாயண கவிதைகள் அரங்கு நாஞ்சில் மற்றும் உங்களுடைய மேலதிக விளக்கங்களால் இன்னும் சுவையுடயதாய் மாறியது. ஒரு செய்யுளைப் பார்த்தவுடன் நமக்கு தெரிந்த வார்த்தைகளுக்கு நாமறிந்த நேரடி பொருளை மட்டுமே கொண்டு பார்ப்பது கூடாதென்பதை ‘கண்’ என்ற வார்த்தையை வைத்து நீங்கள் விளக்கிய விதம் அருமை. இயல்பிலேயே பார்கவியின் வெளிப்பாட்டு முறைக்கு ஒரு கதாகாலட்சேப திறன் இருப்பதாக தெரிந்தது. இசையும் குரலும் அதற்கு துணை சேர்கின்றன.

சிறுகதைகள் அரங்கில் பல்வேறு விதமான கலந்துரையாடல்கள். நண்பர்கள் தேர்வு செய்திருந்த கதைகள் குறித்தும் பொதுவான சிறுகதையம்சம் குறித்தும் பேசியது செறிவு.

அயல்நாட்டு இலக்கிய அரங்கு தான் இருப்பதிலேயே எனக்கு அந்நியமானது. தாந்தே என்ற பெயரை ஒரு தமிழ்ச்சிறுகதை தொகுப்பின் அட்டையில் மட்டுமே பார்த்து கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் இலியட்டும் பெயரளவிலேயே அறிமுகம். இலியட் குறித்து சைதன்யா பேசியபோது ஏதோ யுத்தக்களத்திற்கு சென்று வந்ததைப் போன்று ஒரு மயக்கம். தொடக்கத்தில் சற்றே தடுமாறியது போல் தோன்றினாலும் பிறகு அபிநயம் பிடித்து சரியான தாள லயத்தோடு பேசி முடித்தார். பிறகு நண்பரிடம் பேசியபோது அது ஆங்கிலம் படித்தவர்கள் தமிழ் பேசும்போது அவர்களையுமறியாமல் வெளிப்படும் ஒரு விஷயம் என்றார். எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அவர் பேசும்போது அரங்கை சூழ்ந்த மேகக்கூட்டங்கள் சூழலை இன்னும் சௌந்தர்யமாக்கின!

பிறகு தாந்தே குறித்த சுசித்ராவின் உரை. தன்னளவில் நன்கு செறிவான கட்டமைக்கப்பட்ட ஒரு உரை அது. தாந்தே குறித்து அங்கிருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதிக அளவில் அறிமுகம் இல்லாததால் அவர் பேசுவதில் அப்படியே லயித்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

மூன்று நாட்களில் நான் மிகவும் சிரமப்பட்ட அரங்கு அஜிதனுடையது தான். அதற்கு காரணம் அந்தத் தலைப்பின் கனம். ஒவ்வொருமுறை உள்நுழைய முயன்றபோதெல்லாம் உதறி தள்ளியது. இன்னும் கொஞ்சம் பொறுமையாக காலமெடுத்து படித்துப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். நவீனின் நாட்டார் இலக்கியம் குறித்த அரங்கின் சிறப்பம்சம் அங்கிருந்த அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் நாட்டார் கலையின் மீது ஆர்வமும் அறிமுகமும் இருந்ததே. இந்த அரங்கை கடந்த ஆண்டின் தூரன் விருதுவிழாவில் நடைபெற்ற திரு.மு.இளங்கோவன் அவர்களுடனான உரையாடலின் நீட்சியாகவே பார்க்கத் தோன்றியது.

கவிதை அரங்கில் நண்பர்கள் எடுத்திருந்த கவிதைகள் முதலில் பிடிபடாமல் இருந்தாலும் அங்கு நடந்த உரையாடல்களின் வழி சற்றே துலக்கமானது. வ.அதியமானின் அரங்கில் அவர் தேவதச்சனின் சில கவிதைகளுக்கு முன்வைத்த பார்வைகள் கூர்மையாகவே இருந்தன.

இந்திய நாவல்கள் குறித்த அரங்குகளில் முறையே நரேன் மற்றும் கடலூர் சீனுவின் உரைகள் மேலும் பல விவாதங்களுக்கு வழிவகுத்தன. குறிப்பாக, காச்சர் கோச்சர் நாவல் பற்றியும் கடலூர் சீனு அரங்கின் நீட்சியாக பஷீர் பற்றிய உங்களுடைய அனுபவப் பகிர்தல்களும் அன்றைய நாளை இலகுவாக்கின. பிறகு, அகரமுதல்வனின் ஈழ இலக்கிய அரங்கும் சிறப்பு.

இறுதி நாளில், மூத்த படைப்பாளிகளான நாஞ்சி நாடன் மற்றும் பாவண்ணன் அவர்களுடனான கலந்துரையாடல்கள். சொல்லப்போனால் அந்த மூன்று நாட்களில் அரங்குக்கு வெளியே உங்களைத் தவிர்த்து அதிகம் பேசியவர்கள் அவர்களாகத்தான் இருக்க வேண்டும். பாவண்ணனின் அடங்கிய தொனியும் கூர்ந்த அவதானிப்பும் எப்போதும் சுவாரஸ்யம் அளிப்பவை. எதிர்மறை விமர்சனங்கள் குறித்த பதிலுடன் தன் இலக்கிய வாழ்வின் ஒட்டுமொத்த சித்திரத்தை அவர் பேசி அமர்ந்த போது ஏனோ அவர் மீதான மரியாதை இன்னும் அதிகரித்தது. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நாஞ்சில் பேசும் அவைகளில், தனி அமர்வுகளில் இருக்கவே செய்திருக்கிறேன். நாளுக்கு நாள் பிரமிப்பு கூடியவாறே இருக்கிறது. அவருடைய ஊக்கமும் தொடர் செயல்பாடும் நம்மைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகின்றன. அவர் இந்த மூன்று நாட்களில் நம்மிடம் இருந்து புத்துணர்வை ஏற்றிக்கொள்வதாக சொன்னார், ஆனால் எனக்கென்னவோ நாங்கள் தான் அவரைப் பார்த்து புத்துணர்வு பெற்றிருக்கிறோம் என்று தோன்றுகிறது.

கவிஞர் க.மோகனரங்கனின் கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு குறித்த கேள்விகள், கருத்துகளுடன் இடையே இடையே அவர் வீசிய இலக்கிய நையாண்டிகளும் இரசிக்கத்தக்கவையாக இருந்தன. அதைப் போல கவிஞர் சாம்ராஜ், ஈரோடு கிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் காளி ப்ரஸாத்தும் தங்களது கூர்மையான சொல்லாடல்களின் மூலம் அமர்வுகளைக் கலகலப்பாகினார்கள்.

இறுதியாக உங்களுடைய சிறிய உரை. நேர்த்தியான உரை. குரு நித்யாவின் வாழ்வைச் சொல்லி அதன்மூலம் சிறியவற்றிலிருந்து மகிழ்ச்சியாக இருப்பது குறித்த முக்கியத்துவத்தைக் கோடிட்டு காட்டிய உரை ஒட்டுமொத்த முகாமின் கைவிளக்காய் மிளிர்ந்தது.

ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பு. நவீனுக்கும் அந்தியூர் மணி அண்ணனுக்கும் நன்றிகள்.

நன்றி

பிகு

நெல்லை.

முந்தைய கட்டுரைஎதிர்மனநிலையும் கல்வியும்
அடுத்த கட்டுரைவேதாந்தக் கல்வி எதற்காக?