இந்துமதத்தை கட்டிக்கொண்டு அழுகிறேனா?

அன்புள்ள ஜெயமோகன்

ஒரே கேள்வி. இந்துமதத்தை ஏன் இன்னும் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள்? ஒரு நவீன இலக்கியவாதியாகவும் சமகால அறிவுஜீவியாகவும் இது உங்கள் இமேஜையே அழிக்கிறது என்று தெரியவில்லையா? நீங்கள் பழிக்கப்படுவது முழுக்க இந்த ஒரே ஒரு விஷயத்தால்தான் என்பது ஏன் புரியவில்லை?

சிவா மரகதலிங்கம்

அன்புள்ள சிவா,

நான் ஏன் வசைபாடப்படுகிறேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். 2019ல் நான் தாக்கப்பட்டபோது எனக்கெதிராக வசைகளும், நான் தாக்கப்பட்டதை ஆதரிக்கும் கொண்டாட்டங்களும் பல தரப்புகளில் இருந்து எழுந்தன. எனக்குத் தெரிந்த ஒருவர் கணிப்பொறித் தொழில்நுட்ப நிபுணர், உயர்பதவியில் இருப்பவர். அவர் அந்த நபர்களின் மெய்யான அடையாளங்களை இணையத்தில் இருந்து அறிந்து எனக்கு அனுப்பினார். ஆச்சரியமாக, மிகப்பெரும்பாலானவர்கள் மதச்சிறுபான்மையினர். வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் உலவுபவர்கள். கொஞ்சம்பேர் அரசியல் காழ்ப்பாளர்கள். நான் அறிந்தவர்களின் போலி முகவரிகள் ஏராளமாக இருந்தன.

ஒருநவீனஎழுத்தாளனாகக் காட்டிக்கொள்ள சிலவகையான கருத்தியல்களை சூடிக்கொள்ள வேண்டும். ஒன்று, இடதுசாரி அரசியல். இன்னொன்று, ஐரோப்பிய தாராளவாதப் பார்வை. மூன்றாவதாக, இன்று பேசப்படும் பின்நவீனத்துவ அவநம்பிக்கைவாதம். ஒருவர் தனிவாழ்வில் எவராக இருந்தாலும் இந்த கருத்தியல்களையே எழுத்தில் முன்வைக்கவேண்டும். இதையே பிறரை மதிப்பிடவும் பயன்படுத்த வேண்டும். தமிழகத்தின் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர்கள் தனிவாழ்வில் மதநம்பிக்கை கொண்டவர்கள், எழுத்தில் இந்த மூன்று பாவனைகளில் ஒன்றை கொண்டவர்கள். அவர்களின் குழந்தைகளின் திருமண நிகழ்வுகள் எப்படி நிகழ்ந்தன என்று பார்த்தாலே போதும். (பலர் அவற்றையும் ரகசியமாக நடத்திக்கொண்டவர்கள்)

இது ஏன்? இன்று, இந்தியாவில் பல்கலைகள் அரசியல்கட்சிகளின் பிடியில் உள்ளன. அவை நீண்டகாலமாகவே இடதுசாரிகளின் ஆதிக்கம் கொண்டவை. ஊடகங்களும் அப்படித்தான். அண்மைக்காலமாக அவை  மதவாத அரசியல்நோக்கி மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருக்கின்றன. எனவே இடதுசாரி அரசியல் இன்னும் மூர்க்கம் கொண்டுள்ளது. அந்த சக்தியை எதிர்ப்பது எழுத்தாளர்களால் இயல்வது அல்ல. இன்னொன்று, இங்கே கல்வித்துறையிலும் இலக்கியச் சூழலிலும் ஓங்கியுள்ள இலக்கியக் கொள்கைகள் எல்லாமே ஐரோப்பிய தாராளவாதம் மற்றும் அவநம்பிக்கைவாதம் வழியாக உருவானவை. அந்தக் கொள்கைகளுக்கு உகந்த வகையில் எழுதினால் மட்டுமே இங்கே இலக்கியப்படைப்புகள் மதிக்கப்படும். ஆகவே இந்த மூன்று கருத்தியல்களில் ஒன்றைச் சார்ந்து நிற்பதான பாவனை எழுத்தாளர்களுக்குத் தேவைப்படுகிறது.

இந்திய மரபு, இந்து ஞானம் ஆகியவற்றைச் சார்ந்து எழுதுவதில் பெரிய சிக்கல்கள் உள்ளன. அவற்றை  மதிப்பிடும் நவீன இலக்கியக் கொள்கைகள் இங்கே கல்வித்துறையிலும், இலக்கியச் சூழலிலும் இல்லை. இங்கே மரபு சார்ந்து, இந்து ஞானம் சார்ந்து செயல்படுபவர்கள் பெரும்பாலானவர்கள் பழமைவாதிகள். பலர் இன்று மத அடிப்படைவாதிகளும் ஆகியுள்ளனர். அவர்களுக்கு நவீன இலக்கியம் புரியாது, புரிந்தாலும் பிடிக்காது. அவர்கள் இந்திய மரபு, இந்து மெய்ஞானம் சார்ந்து செயல்படும் எழுத்து என்பது பழமைவாதமாகவோ அல்லது அடிப்படைவாத அரசியல் கொண்டதாகவோ இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இல்லையேல் எதிர்ப்பார்கள். 

மறுபக்கம், இங்குள்ள இடதுசாரிகளுக்கு இந்திய மரபு, இந்து ஞானம் இரண்டுமே ஒட்டுமொத்தமாகவே பிற்போக்கானவை என்னும் எண்ணம் உள்ளது. அவர்கள் மார்க்ஸியத்தின் உள்ளடக்கங்களில் ஒன்றாகிய ஐரோப்பிய மேட்டிமைவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள். கொள்கையின் அடிமைகள். இந்திய மரபையோ இந்து மெய்ஞானத்தையோ கொஞ்சம் சார்ந்திருந்தால்கூட அந்த  மனிதரை அவர்கள்   பழமைவாதி அல்லது அடிப்படைவாதி என முத்திரை குத்திவிடுவார்கள். 

ஆகவே இந்திய மரபு பற்றி அல்லது இந்துமெய்ஞானம் பற்றி எழுதுவது என்பது இந்தியச் சூழலில் ஒருவகையான தற்கொலைதான். தனித்து நிற்கவேண்டும். இடைவிடாது அவதூறுகளையும் முத்திரைகுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டும். நம் எழுத்து திரிக்கப்படும். நம் ஆளுமை சிதைக்கப்படும். நாம் இந்துத்துவ அரசியல்தரப்புக்கும் மறுபக்கம் இலக்கியத்தின் முற்போக்கு மற்றும் தாராளவாதிகளுக்கும் ஒரே சமயம் எதிர்கள் ஆவோம். இதை அறிந்தே நான் இந்திய மரபை, இந்து ஞானத்தை முன்வைக்கிறேன்.

ஆனால் எனக்கு வேறு வழியில்லை. ஏனென்றால் நான்  என் வாழ்க்கையில் கண்டடைந்த உண்மைகளையே முன்வைக்க முடியும். அதுதான் நேர்மையான இலக்கியச் செயல்பாடு. அதன்பொருட்டு நான் அவதூறு செய்யப்பட்டாலோ வசைபாடப்பட்டாலோ அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக என்னை இவர்கள் சிறையிட்டாலோ கொன்றாலோ அதையும் நான் ஏற்கவேண்டும். அப்படித்தான் இலக்கியவாதிகள் எல்லா காலகட்டத்திலும் செயல்பட்டுள்ளனர்.

நான் என் வாழ்க்கையில் கடுமையான இழப்புகளைச் சந்தித்தேன். ஆழமான தத்துவநெருக்கடிகளை அடைந்தேன். துறவியாக, பைத்தியமாக அலைந்தேன்.என் மொத்த வாழ்க்கையையே துறந்து என் கேள்விகளை தொடர்ந்து சென்றேன். சிலவற்றை கண்டடைந்தேன். அவை இந்திய மரபு சார்ந்தவை, இந்து மெய்ஞானம் சார்ந்தவை. அவற்றைச் சொல்லவே எழுதுகிறேன். பல்வேறு ஆசிரியர்களை கண்டடைந்தேன். குரு நித்ய சைதன்ய யதியை கண்டேன். அவர்களிடமிருந்து பெற்ற வழிகாட்டலே என் தரிசனத்தை நான் கண்டடைய உதவியது. அதையே நான் எழுத முடியும். அது மட்டுமே என் செயல்பாடுகளின் அடிப்படை. 

அதை நான் முன்வைக்கையில் என்னை எவர் என்ன சொன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன். திரும்பத் திரும்ப விளக்குகிறேன். நான் மத அடிப்படைவாதங்களுக்கு எதிரானவன். மதப்பழமைவாதத்தை ஏற்காதவன். மதத்தைச் சார்ந்து செயல்படாதவன். நான் மரபான கடவுள்நம்பிக்கை கொண்டவன் அல்ல. எந்த வழிபாடுகளையும் செய்பன் அல்ல. நான் விடைகளை முன்வைக்கவில்லை, என் தேடலையே முன்வைக்கிறேன். நான் அரசியலை எந்தவகையிலும் ஏற்கவில்லை. என்னுடைய தேடல் தத்துவம் சார்ந்தது, மெய்யியல் சார்ந்தது மட்டுமே. இதைப்புரிந்துகொள்ளும் சிலர் மட்டுமே என் வாசகர்கள். அவர்கள் போதும், எதிர்காலத்தில் இன்னும் பலர் வாசிப்பார்களென்றால் நல்லது.

எந்த மதமும் மூடநம்பிக்கை, ஆசாரவாதம், பழமைவாதம் ஆகியவை கொண்டதாகவே இருக்கும். ஏனென்றால் அது நீண்டகாலமாக இங்கே உள்ளது. எந்த மதமும் அடிப்படைவாதிகளால் பயன்படுத்தவும் பட்டிருக்கும். ஆனால் மதம் மிகமிக தொன்மையானது. கற்காலம் முதல் இன்று வரை நீடிக்கும் ஓர் அகம் மதத்திலேயே உள்ளது. அந்த அகம் மத அமைப்பு சார்ந்தது அல்ல. அது தன்னிச்சையானது. ஆனால் அது மதமாகவே இங்கே நீடிக்கிறது. அதை கலைஞர்களும் சிந்தனையாளர்களும் ஒதுக்க முடியாது. அந்த அகமே மெய்ஞானத்தின் விளைநிலம். அந்த அகத்தையே நான் சார்ந்திருக்கிறேன். அதையே முன்வைக்கிறேன். அதை மதத்தின் மூடநம்பிக்கைகள், ஆசாரங்கள், பழமைவாதம், அடிப்படைவாதம் ஆகியவற்றில் இருந்து பிரித்து அறிய முயல்கிறேன்

நான் என் நோய்க்கு ஓர் அரிய மூலிகையை கண்டடைந்தேன். அதை உலகுக்காக முன்வைக்கிறேன். அந்த மூலிகைச்செடியில் முள் உள்ளது ஆகவே அதை தூக்கி வீசிவிடவேண்டும் என்கிறார்கள் இங்குள்ள சிலர். அது முள்செடி மட்டுமே என வாதிடுகிறார்கள். இல்லை இது உயிர்காக்கும் மருந்தும்கூட, முள்ளை விலக்கி மருந்தை எடுப்போம் என நான் சொல்கிறேன். ஏனென்றால் அது என் உயிரைக் காத்த மூலிகை. இதுதான் பிரச்சினை

ஜெ  

முந்தைய கட்டுரைகல்வியெனும் விடுதலை, கடிதம்
அடுத்த கட்டுரைஒரேசமயம் பல வகுப்புகள்!