கல்வியெனும் விடுதலை, கடிதம்

அன்புள்ள ஜெ,

மகிழ்ச்சிக் கணக்கு என்றொரு பதில் கடிதம்  எனக்கு நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஒரு வருடம் முன்பாக.இத்தனை மாதங்களில் நான் எங்கிருக்கிறேன் என எண்ணுகிறேன்.

தணல் என்னும் குழு பற்றி ஏற்கனவே தங்களிடம் கூறியுள்ளேன். பிஜு பாஸ்கர் என்னும் கட்டிட பொறியாளர் அவர்களின் குழு.

2 நாட்கள் அவர்களின் பயிற்சி பட்டறையில் சேர்ந்து பயிற்சி செய்தேன். மிக உழைப்பை தந்த நாட்கள் அவை. மிகப் பெரிய ஆட்கள் ( அனைவரும் இந்தியாவின் வேறு வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்டிட பொறியாளர்கள், தனியாக தொழில் செய்பவர்கள்) என்னுடன் பயிற்சியில் பங்கெடுத்தனர். என்னால் இவ்வளவு இயல்பாக ஆங்கிலம் பேச முடியும் என அங்கே செல்லும் வரை நானும் நம்பவில்லை. பயிற்சிக்கு 2 மாதம் முன்பிருந்து online app மூலம் அவர்களின் அடிப்படைகள் பற்றிய அனைத்தையும் 6 நோட்டுகளில் படித்து எழுதி முடித்தேன். பயிற்சி முடிந்த பின்னும் இன்னும் தினமும் எழுதுகிறேன்.

மலையாள எழுத்துருக்களை பயின்றேன். ஆனால் புத்தகம் கிடைக்காததால் மீண்டும் மீண்டும் எழுத்துக்களை மட்டும் படிக்கிறேன்.

வீட்டின் வேலைகள் முடிந்த பின், அல்லது அவற்றுக்கு இடையில் எப்போதெல்லாம் அமர்கிறேனோ அப்போதெல்லாம் எழுதிக்கொண்டோ படித்துக் கொண்டோ இருக்கிறேன். எங்கும் என் நோட்டு இல்லாமல் செல்வதில்லை. எல்லோருக்கும் ஒரு வேடிக்கை பொருள் போல ஆனேன். ஆனாலும் அதை பற்றி துளியும் எண்ணவில்லை.

பறவை பார்த்தல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். மிக இனிய ஒரு கனவு அது.  தினமும் ஒரு பறவையை  அறிமுகம் செய்து கொள்கிறேன். இன்று அருகில் இருக்கும் சிறுமலை என்னும் மலைக்கு சென்று பறவைகள் பார்த்தோம். 9 புதிய பறவைகள். மலபார் கிளி இதுவரை பதிவு செய்திடாத பறவையை அருகில் என பார்த்தோம்.

தினமும் வெண்முரசு படிக்கிறேன். பனை மரச்சாலை புத்தகமும் வாசிக்கிறேன்.  என் கணவருக்கும் நான் செய்யும் அனைத்திலும் ஆர்வம் உண்டாக்கி விட்டேன்.

நேரத்தை மிக கவனமாக செலவு செய்தால் செய்வதற்கு எவ்வளவோ இருக்கிறது என கண்ணால் கண்டு உணர்ந்த நேரங்கள். கடைசியில் என் 3 வயது மகனுக்கு உண்டான நேரமும் இதிலேயே செலவு செய்தேன்.

மகிழ்ச்சி என்பது கற்பதில் இருக்கிறது.  கற்றுக் கொண்டே இருக்கையில் எங்கோ சென்று கொண்டே இருப்பது போலவே தான் இருக்கிறது.

தணல் மூலம் கற்றதில் ஒரு சிறிய திண்ணை கட்ட வழிமுறைகள், தேவையான பொருட்கள் தேடும் பணியில் உள்ளேன்.

மலையாளம் கற்க புத்தகங்கள் தேடி வருகிறேன்.

பறவைகள் பார்க்க சென்று கொண்டே இருக்கிறேன்.

வெண்முரசை விட்டு விலகுவதில்லை.

இத்தனைக்கும் உண்டான நன்றி உங்களுக்கே.

பிரியமுடன்

அன்புள்ள சரண்யா

இந்த உலகம் நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக எதையும் செய்வதில்லை. எதையும் அளிப்பதில்லை. நாம் மகிழ்ச்சியாக இருப்பது அல்லது இல்லாமலிருப்பதனால் இந்த உலகுக்கு ஒன்றுமில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டியது நம் பொறுப்பு.

உடல்நலம் உடைய ஒருவர் மற்ற எக்காரணத்தால் மகிழ்ச்சியற்றிருந்தாலும் அது அவருடைய பிழைதான். இன்னொருவர் நம் மகிழ்ச்சியை இல்லாமலாக்குகிறார் என்றால் அதற்கான பொறுப்பும் நம்முடையதே. நாம் நம்மை எந்நிலையிலும் மகிழ்வாக வைத்துக் கொள்ளமுடியும்.

மூன்று நிலைகளில் மகிழ்ச்சி நிகழ்கிறது. கற்றல் (இதில் இலக்கியம் கலைகள் எல்லாமே அடங்கும்), செயலாற்றுதல், இயற்கையுடன் ஒன்றென்றிருத்தல் (என் பார்வையில் அதுவே பிரம்மத்தை அறியும் இறையனுபவம்)

நாங்கள் அளிக்க விரும்புவது இவை மூன்றையும் அளிக்கும் ஒரு கல்வியை.

நலம் திகழ்க

ஜெ

முந்தைய கட்டுரைமரபிலக்கியத்தை எப்படி வாசிப்பது?
அடுத்த கட்டுரைஇந்துமதத்தை கட்டிக்கொண்டு அழுகிறேனா?