அன்புள்ள ஜெ
முழுமையறிவு அமைப்பில் மூன்றுவகையான தியான முறைகளைக் கற்றுக்கொடுக்கிறீர்கள். மூன்றுமே தேவையானவையா? இல்லை ஒன்றுடனொன்று மாறுபட்டு மறுக்கக்கூடியவையா?
சந்திரசேகர்
அன்புள்ள சந்திரசேகர்,
இந்தியாவில் யோகம் மதங்களுக்கு முன்னரே தோன்றிவிட்டது. இந்து, பௌத்த, சமண மதங்கள் அதை தங்கள் நோக்கில் வளர்த்தெடுத்தன. இந்து மரபில் உள்ளம் வழியாக உடலை ஆளும் தியான மரபும் உடல் வழியாக உள்ளத்தை ஆளும் யோக மரபும் தனித்தனியாக வளர்ந்தன. இந்து யோக மரபுக்குள் பதஞ்சலியின் மரபும் மறைஞானச் சடங்குகளும் குறியீட்டுச்செயல்பாடுகளும் கொண்ட தாந்த்ரீக மரபும் தனித்தனியாக வளர்ந்தன.
சமண மரபு உபேக்ஷை என்னும் அடிப்படையில் யோகத்தை முன்னெடுத்தது. ஒவ்வொன்றாக உதறி முன்செல்லுதல் என அதற்குப்பெயர். அவர்களுக்குரிய பயிற்சிமுறைகள் பல உண்டு.
பௌத்த மரபு யோகத்தை விரிவாக வளர்த்தெடுத்தது. அதில் யோகாசார மரபு என்னும் பெரும்போக்கு உருவெடுத்தது. அதன் தத்துவங்களும் நெறிகளும் மிக விரிவானவை. இந்திய மெய்ஞான மரபின் உச்சங்களிலொன்று பௌத்த யோகாசார– சூனியவாத தரிசனத்தொகை
பௌத்தத்தின் இன்னொரு கிளையாக இந்து தாந்த்ரீக மரபுடன் உரையாடி உருவானது வஜ்ராயன மரபு. அதுவே திபெத்தில் வேரூன்றியுள்ளது.
யோகாசார மரபு மானுட அகத்தை அறிதல்களின் தொகுப்பாக பார்க்கிறது. அவ்வறிதல்களே பிரபஞ்ச ஞானமாகவும் உள்ளன.ஆலயவிக்ஞானம் என அதற்குப் பெயர்.அவ்வறிதல்கள் மேல் கட்டுப்பாட்டை அடைவதே பௌத்தம் சொல்லும் யோகம்.
நம் அறிதல்களை நம் விழைவுகள், அச்சங்கள், முன்முடிவுகளில் இருந்து விடுபடச்செய்வதையே விபாசனை என பௌத்தம் வகுக்கிறது. அதற்கான விரிவான நடைமுறைகளை அது உருவாக்கிக் கொண்டுள்ளது. அதுவே பின்னர் சீனாவில் உடற்பயிற்சிக்கலைகளுடன் இணைந்து வளர்ந்தது. ஜப்பானிலும் ஜென் என்னும் தனித்த தியானப்பயிற்சியாக மலர்ந்தது.
இந்த எல்லா முறைகளும் ஒன்றையொன்று நிரப்புபவை. ஒன்றையொன்று புரிந்துகொள்ள உதவுபவை. ஒருவர் தனக்குரியதை ஏற்கலாம். அல்லது அவர் ஆழ்ந்த தேடல் கொண்டவர் என்றால் அவற்றிலிருந்து தனக்கானதை தானே உருவாக்கிக்கொள்ளவும் செய்யலாம்
நாங்கள் சமண முறையைக் கற்பிக்கும் ஆசிரியர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம்
ஜெ