குரு நித்யா காவிய முகாம், பதிவு- ரம்யா

அன்பு ஜெ,

இந்த ஆண்டின் காவிய முகாம் மே 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இது என் இரண்டாவது காவிய முகாம். நித்யவனத்தில் நிகழும் இரண்டாவது காவிய முகாமும் கூட. விஷ்ணுபுரம் விழாவிற்கு அடுத்த நிலையில் கட்டாயம் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று பட்டியலில் வைத்திருந்த நிகழ்வு. அதைவிட ஒருபடி மேலாகவே வைக்க வேண்டிய நிகழ்வு என இந்த முறை தோன்றியது. மூத்த எழுத்தாளர்கள், சமகால எழுத்தாளர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள் யாவரும் ஒன்றாக அமர்ந்து நிகழ்த்தும் அரங்கு என்பதால் இத்தனை முக்கியமாகிறது. காவிய முகாம் முடிந்து வந்தபின் அதன் வழியாகக் கிடைக்கும் அறிவும் சிந்தனை மாற்றமும் அடுத்த காவிய முகாம் வரை நீடிக்கக் கூடியது.

இந்தமுறை நாஞ்சில் நாடன், க. மோகனரங்கன், பாவண்ணன், தேவதேவன் ஆகியோர் வந்திருந்தார்கள். முன்பக்கம் இருந்து எழுப்பும் காட்டமான வினாக்களுக்கு சொந்தக்காரரான சாம்ராஜிற்கு சவால் விடும் படியாக எப்போதும் பின் பெஞ்சில் உட்கார்ந்து கேள்விக் கணைகளைத் தொடுக்கும் போகன்சங்கர் இந்தமுறை இல்லாதது வருத்தத்திற்குரியதாக இருந்தது.

மூன்றாம் நாள் காலைநடை க. மோகனரங்கன், பாவண்ணன், தேவதேவன் ஆகியோருடன் சென்றேன். உடன் இருவர் வந்தார்கள். மோகனரங்கன் சாருக்கு பக்கவாட்டில் ஏதோ ஒன்று குறைவது போலவே உணர்ந்தேன். எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் இல்லை என்பதால் அப்படித் தோன்றியிருக்கலாம்.

நடையின் போது பாவண்னன் சார் லிங்காயத்துகளின் வரலாறு பற்றி சொல்லிக் கொண்டு வந்தார். சைவத்திலிருந்து தன்னை தனித்துக் காண்பித்துக் கொள்ள அவர்கள் எவ்வாறெல்லாம் தங்கள் சடங்குகள், பழக்க வழக்கங்கள் மூலமாக முயன்றார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். சைவர்கள் என்று மதத்தால் இணைந்தாலும் சாதியப் பாகுபாடு எப்படித் தோன்றியது என்பதற்கான விளக்கத்தைக் கொடுத்தார். தேவதேவன் இடையில் மனிதனுக்கு மதம், சாதி, பால் என்ற பிரிவு இருக்கக் கூடாது என சொன்னார். அவரை மீறி தான் பாவண்ணனின் உரையைத் தொடர முடிந்தது. ஏனெனில் இது இவ்வுலகம் சார்ந்தது. சாதி எவ்வளவு தொலைவு பெரிய தாக்கத்தை லிங்காயத்துகளுக்குள் ஏற்படுத்தியது என பாவண்னன் விளக்கினார். மனிதர்களிடம் ஒன்றாக எதன் பொருட்டாவது சேர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பெரிய அம்சம் மதமாக உள்ளது. ஆனால் சேர்ந்ததன் பின்னால் சாதி, பொருளாதாரம் என பலவும் முன்னால் வந்து விடுகிறது என்றார். அதை பிரிக்கமுடிவதில்லை.

சடங்குகள் நம்பிக்கைகள் பற்றிய பேச்சு சு.ரா நோக்கிச் சென்றது. எழுத்தாளர்கள் பெரும்பாலும் சடங்குகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்கள் என மோகனரங்கன் சொன்னார். சு.ரா எந்தச் சடங்கும் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஆனால் அதை அவர்கள் வீட்டினர் அப்படியே கடைபிடித்தது தான் முக்கியமானது என்றார். சு.ரா-வின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்ட நிகழ்வை இருவரும் நினைவுகூர்ந்தனர்.

பாவண்ணன்  வெங்கட்சாமிநாதனின் இறுதி நாளை நினைவு கூர்ந்தார். அவரும் ஒரு நண்பரும் மட்டுமே அவருடைய வீட்டிற்கு சென்றதாகவும், உறவினர்கள் நேரடியாக அடக்கம் செய்த இடத்திற்கு வந்துவிட்டதாகவும், அவரைத்துக்கி வைக்க கார் டிரைவரின் உதவி தேவைப்பட்டது என்றும் சொன்னார்.

அப்படியே பேச்சு நகரச்சூழல்-கிராமச் சூழலுக்குச் சென்றது. திரும்பி வரும் வழியில் மோகனரங்கனிடம் அவரின் ”சொல் பொருள் மெளனம்” என்ற விமர்சனத் தொகுப்பிலிருந்து பெண் எழுத்து சார்ந்த கட்டுரையை நீலிக்கு கேட்டேன். தாராளமாக போட்டுக் கொள்ளலாம் என்றார்.

”சார் நீங்க எத்தனை காவிய முகாம் பங்கேற்றிருக்கிறீர்கள்” என்று கேட்டேன். “நிறைய. தொண்ணூறுகளிலிருந்து ஊட்டியில் நிகழ்ந்த அனைத்து காவிய முகாமிற்கும் சென்றிருக்கிறேன். இரண்டைத்தவிர என்று நினைக்கிறேன்” என்றார்.“நேற்று அஜிதன் அரங்கில் பேசும்போது தான் வயதாகிவிட்டது என்று தோன்றியது. அஜி அப்போது சின்னப்பையனா கால சுத்திட்டு இருப்பான். இப்போ பெரிய பையனா ஆகிட்டான். அவனுடைய உரையைக் கேட்டுட்டு இருக்கும்போது வயசாகிடுச்சுன்னு தோணுச்சு” என்றார்.

நான் காலத்திற்கு முன் முப்பது வருடங்கள் பயணித்து வயதாகி புதியவர்கள் யாரிடமாவது இப்படி சொல்லிக் கொண்டிருப்பதாக நினைத்துப் பார்த்தேன். தொடர்ச்சியான செயல்பாடு, உரையாடல்கள் வழி உருவாகி வந்த எழுத்தாளர்கள் குழாம் என்று தோன்றியது.

வரும் வழியில் தேவதேவனிடம் “அது எப்படி சார் இங்க நடக்கற எதிலுமே பாதிக்காம இருக்கீங்க. சில சமயம் பொறாமையா இருக்கும். நிஜமாகவே கஷ்டமே இல்லயா உங்களுக்கு” என்றேன். “எனக்கும் இருக்கும். இளமைல பசிலாம் இருந்திருக்கு. ஆனா அது வயிற்றில் உருவாக்கும் தீ அதைவிட பிடிக்கும். அதை என்ஜாய் பண்ணுவேன். எல்லாமும் அப்படித்தான். அந்த சமயத்தில் யாராவது சாப்பிட சொன்னாதான் வருத்தமா இருக்கும். இங்கல்லாம் நேரத்துக்கு என்ன சாப்பிட வச்சிடறாங்க” என வருத்தமாகச் சொன்னார்.

“சார் அப்பறம் நீங்க ஒன்றில் பற்று இருக்கக் கூடாது என்று சொல்லும்போது உங்கள் மேல் கோபம் வரும்” என்றேன்

“நீ பற்று(Attachment) என்றவுடன் அதற்கு நேர் எதிராக விலகி(Detachment) இருக்க வேண்டும் என எடுத்துக் கொள்வதால் வரும் சிக்கல் இது. ஒரு பூவை மெல்ல வருடுகிறோம், நதியின் நீரை மெல்ல வருடுகிறோம். அந்த அளவுக்கு எதனுடனும் தொடர்பு இருந்தால் போதும். முற்றிலும் விலகி இருப்பது பற்றுதலுக்கு இணையாக துயரத்தைத் தரக்கூடியது தான். அது தெரியாமல் பலரும் டிடாச்மண்ட் நல்லது என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல.” என்றார்.

“அப்படின்னா சரி” என்றேன்.

*

இந்த காவிய முகாமில் முதன்மையாக எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் பாவண்ணன் ஆகியோர் தங்களின் எழுத்துப் பயணத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டது மிகவும் உணர்வுப்பூர்வமாக அமைந்தது. சென்ற ஆண்டின் சிறுகதை அரங்கில் “அம்மை பார்த்திருந்தாள்” கதையை விவாதித்தோம். “எனக்கு எப்போது வாசித்தாலும் கண்ணீர் வரும் கதை” என சுனில் கிருஷ்ணன் சொன்ன கதை. “எனக்கு அக்கதையில் சொல்லும் பசி சரியாக கடத்தப்படவில்லை” என வாதிட்டேன். அதற்கு மோகனரங்கன் சார் “உங்கள் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அத்தகைய பசியின் தீவிரம் புரியாது” என்று நகைச்சுவையாகச் சொன்னார். எனக்கு பசியெல்லாம் புலப்பட்டாலும் இந்தக்கதை ஏன் அவ்வளவு ஈர்க்கவில்லை என்று தெரியாமல் இருந்தது. நீங்கள் அந்த இடத்திலேயே சமூகம் சார்ந்து ஒரு உயர்ந்த சாதிக்காரப் பையன் அல்லது ஒரு நன்றாக வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவனின் பசி என எம்பதியுடன் சென்று பார்த்தால் அது உனக்கு புலப்படலாம் என்று சொன்னீர்கள். அதன் பின் தான் எங்கோ நான் காயம் பட்டிருந்தேன் என்று புரிந்தது. அந்த சிந்தப்பட்ட பாலின் நிமித்தம் ஒரு கோபத்தை அங்கே அடைந்திருந்தேன். பட்டியல் சாதி மக்கள் குடியிலிருந்து பெறப்பட்ட பாலை பசித்திருந்தாலும் சிந்திவிடுமளவு குரூரத்தின் மேலான கோபம் அந்த பசிக்கு முன் வந்திருந்த உணர்வாக இருந்தது. ஆனால் அதன்பின் அந்த அனைத்தாலும் கைவிடப்பட்ட சிறுவனை நான் சென்றடையாமல் இருந்ததால் அழுகை வரவில்லை என பின்னர் புரிந்தது.

நாஞ்சில் தன் அமர்வில் தன்னைப் பற்றி, தன் வாழ்க்கையைப் பற்றி, தன் அனுபவங்களைப் பற்றி, தன்னை எழுதத்தூண்டும் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்தார். அப்போது மிகுந்த பசியில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று பால் வாங்கி வந்த அந்த நிகழ்வைச் சித்தரித்தார். மிஷினரியின் மூலம் கொடுக்கப்படும் பாலை வாங்க நின்றபோது அங்கிருந்த பையன்கள் கிண்டல் அடித்ததும், இவனுங்க நம்மல எப்படி நடத்துவானுங்க இவனுக்கு தரக்கூடாது என்று கடிந்ததும், அங்கிருந்த பெரியவர் ஒருவர் “டேய் அவன் படிக்கிற பையன்டா. அவன் சாப்பிடட்டும் என்று அவரின் தூக்குச் சட்டியில் பாலை ஊற்றிக் கொடுத்தபோது மகிழ்வாக வாங்கி வந்ததும், வரும் வழியில் அவரை வழி மறித்து அங்கிருந்து பால் வாங்கி வரான் பாரு என ஏளனப்படுத்தி அதைக் கீழே கொட்டி விட்டபோது பதறிய மனநிலையும், அதைப் பார்த்து ஓடி வந்து அவர்களைக் கடிந்து கொண்ட பெரியவரையும் பற்றிச் சொன்னார். அம்மாவிற்குத் தெரியாமல் எடுத்து வந்த தூக்குச் சட்டியை கழுவாமல் எடுத்துச் சென்றால் கிடைக்கும் அடியையும், வசவையும் நினைத்துச் சென்று குளத்தில் தூக்கைக் கழுவிவிட்டு சாப்பிடுவதற்கு அங்கு வளர்ந்திருந்த கீரைகளைப் பறித்து அதில் வைத்துக் கொண்ட அந்தச் சிறுவனைப் பற்றிச் சொன்னார்.

”அப்போ அந்தக் குளத்தில் உட்கார்ந்திருந்த அம்மை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த அம்மை அன்னைக்கு பாக்கலைனா நான் இன்னைக்கு உங்க முன்னாடி எழுத்தாளனா உக்காந்து இப்படி பேசிட்டுஇருக்க முடியாது” என்றார். எனக்கு கண்கள் கலங்கிவிட்டது. அவரே சற்று கலங்கிப் போனார். சிறுவன் கீரையைப் பறித்து தூக்குச் சட்டியில் வைக்கும் வரை எளிய சிறுவனாக இருக்கிறான். அங்கு காலத்திற்கு அப்பாற்பட்டு அனைத்தையும் பார்ப்பதாக நாம் கற்பனை செய்து கொள்ளும் இடத்தில் சிறுவன் எழுத்தாளனாகிறான் என்று தோன்றியது. அப்படியான காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கண் தான் எழுத்தாளனை ஆக்குகிறது என்று கூட தோன்றியது. ஏதோ அம்மை பார்த்திருந்தாள் 2.0 போல இருந்தது. அதன் பின் அவர் பரீட்சை எழுதும்போது எப்போதும் பேனாவின் மூடியை அதில் மாட்டிவிடும் ஆசிரியரையும், அவரின் சேலையின் தொடுகையும் நினைவு கூர்ந்தார். இந்த உணர்வுகளை, அதன் ஆழத்தைச் சொல்வதற்கு நாம் பிற தகவல்களை சேர்த்து இடத்தை, களத்தை உருவாக்குகிறோம் என்றார். கம்பராமாயணம் அரங்கிலும், பிற அரங்கிலும் அவரின் பங்களிப்பும், நகைச்சுவையும் என ஒரு கை இருந்து கொண்டே இருந்தது.

பாவண்ணன் அவர்கள் தன் எழுத்துப் பயணத்தைத் தொகுத்துச் சொன்னார். நாஞ்சில் முகம் முழுவதும் புன்னகைக்கக் கூடியவர். பாவண்ணன் முகத்தில் எப்போதும் தெரியும் மெல்லிய புன்னகை ஒன்றுள்ளது. அவரின் பயணம் வேறு விதமாக இருந்தது. குடிமைப்பணியாளனாக ஆசைப்பட்டு பின் எழுத்துத் துறைக்குள் நுழைந்தவர். எழுத்தாளனாக ஆன பின் அந்த எண்ணத்தைவிட்டு வேறு தேர்வெழுதி எழுத்துக்குத் தேவையான அளவான கட்டுப்பாடான வாழ்க்கையை அமைத்துக் கொண்டதாகச் சொன்னார். பெங்களூருக்குச் சென்றபின் அவரின் வாழ்வையும், மொழிபெயர்ப்புப் பணி எப்படி ஆரம்பமானது என்பதையும் சொன்னார்.

இருவரின் உரையும் காலத்திற்கு முன் சென்று அவர்களில் எழுத்து வாழ்க்கையை தரிசிப்பது போல இருந்தது. உணர்வுப்பூர்வமான அரங்கு.

*

நாவல் அரங்கில் நரேன் விவேக் ஷான்பாகின் ”காச்சர் கோச்சர்” நாவலை விவாதித்திற்கு எடுத்திருந்தார். அறிமுகப்படுத்தும்போதே உங்களின் சமீபத்திய ஆலம், படுகளம் நாவல்கள் மற்றும் வேகப்புனைவு பற்றிய கட்டுரையையும் குறிப்பிட்டே ஆரம்பித்தார். எனக்கும் அந்த அளவிலேயே பிடித்திருந்தது. அந்த வகையில் அவர் அந்த நாவலை எந்த இடத்தில் மதிப்பிட்டு முன் வைத்தார் என்றும் புரிந்தது. விவாதம் சென்ற விதம் நன்றாக இருந்தது. கிருஷ்ணன் எழுந்து இது நல்ல நாவல் அல்ல என்றும் பொருளாதார ரீதியாக முன்னெறும் ஒரு நடுத்தரக் குடும்பம் அது நிகழ்த்தும் வன்முறையை சரியென்று ஒத்துக் கொள்ளச் செய்யும் ஒரு போலி நாவல் என்றார் (அவர் சொன்னதை நான் இப்படிப் புரிந்து கொண்டேன்). நாவல் சார்ந்த விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இப்படிச் சொன்னது விவாதம் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமோ என்று நினைத்தேன். ஆனால் இத்தனை கறாரான ஒரு விமர்சனத்திற்கு அப்பாலும் அது போலியல்ல, சமைக்கப்பட்டதல்ல அல்லது சமைக்கப்பட ஆசிரியர் முயற்சி செய்தாலும் அவரையும் மீறி கலை எழுந்து வந்துள்ளது என சீனு சொன்னது ஊக்கமாக இருந்தது. ரசனையைப் பொறுத்து, ஒரு படைப்பை மதிப்பிடும்போது நமக்கு எதன் பொருட்டு அவ்வாறு தோன்றுகிறது என்பதில் சரியான பிடிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த அமர்வில் பாவண்ணன் விவேக் ஷான்பாகின் நாவல் கன்னட மொழியில் எவ்வாறு வரவேற்பைப் பெற்றது என்றும், அந்தச் சூழலில் அவரின் எழுத்தின் முக்கியத்துவத்தையும் சொன்னார். அந்த அமர்வில் உங்கள் பார்வை விவேக் ஷான்பாக்கின் எழுத்து, அவரின் பேசுகளம், கன்னட இலக்கியம், அவரின் காலகட்டம் என விரிந்த பார்வையைத் தந்தது.

நாவல் அரங்கில் இரண்டாவதாக சீனு பஷீரின் சப்தங்கள் நாவல் பற்றி பேசினார். அது ஒட்டுமொத்தமாக பஷீரின் படைப்புகளை அறிமுகப்படுத்தும் விதமாக அமைந்தது. அந்த அமர்வில் உங்களை நோக்கியே கேள்விகளை அவர் கேட்டு கேள்விகளிலிருந்து தப்பித்துக் கொண்டார். தனக்கு வரும் கேள்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரு நல்ல உத்தி இது. ஏற்கனவே உங்கள் உரையாடல் வழியாக, நீங்கள் அவரைப் பற்றி சொல்லும் தருணங்கள் வழியாக அவர் அணுக்கமானவர் தான். இப்படித்தான் எம்.டி.வாசுதேவன் நாயரும் எங்களுக்கு அறிமுகம். எம்.டி பற்றி சொல்லும்போது உங்களுக்கு வரும் கம்பீரமும், புன்னகையும் அவரை மேலும் நெருக்கமாக உணரச் செய்யும். இந்தப் புத்தாண்டில் அவர் தன் இருபத்தியாறு வயதில் எழுதிய முதல் நாவலான “பாதி ராவும் பகல் வெளிச்சமும்” கதையை நீங்கள் சொன்னது இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை. பஷீரும் கூட நீங்கள் அவரைப் பற்றிச் சொல்லும் தருணங்கள், உங்களையறியாமல் முகத்தில் கொணரும் நடிப்புகள் வழியாக உருவான சித்திரமாக மனதில் நிற்கிறார். இந்த அமர்வில் அவரின் படைப்புகளை முதல் காலகட்டம், இரண்டாம் காலகட்டம் என்று பிரித்து, முதல் காலகட்டத்தை எதிர்மறை குணம் கொண்டவை என்றும், இரண்டாம் காலகட்டத்தை நேர்மறை அம்சம் கொண்டவை என்றும் பிரித்தது அறிதலாக இருந்தது. அவர் தன் எதிர்மறை எழுத்துக்களை அழித்ததாகச் சொன்னீர்கள். அவரின் காமுகண்டே டைரிக்குப் பின்னால் உள்ள கதையும், அவரின் வறுமையும், ஆளுமையும் என ஒரு விரிவான சித்திரம் கிடைத்தது. மேலும் பஷீர் எழுத்துக்களின் மேல் எழுப்பப்பட்ட விமர்சனங்களைப் பகிர்ந்தீர்கள். பஷீர் எழுத்து எதனால் அவரால் மட்டுமே சாத்தியம் என்பதை அவரின் வாழ்க்கையைக் கொண்டு சொன்னீர்கள்.

*

முதல் நாள் இரவு சைதன்யா ஹோமர் எழுதிய கிரேக்க செவ்வியல் காவியமான இலியத் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார். எட்டாம் நூற்றாண்டின் ஒரு இலக்கியச் சிந்தனையோட்டத்தை அறிமுகம் செய்வது ஒரு வகையில் நம் மொழியில் அவ்வாறான போர் இலக்கியங்களை ஒப்பிடுவதற்கும் உதவும் என்று தோன்றியது. முதன்மையாக அவர் கொடுத்த பகுதிகளை வாசித்து வந்திருந்தோம். அவருக்குப் பிடித்த சில தருணங்களைப் பகிர்ந்தது நன்றாக இருந்தது. அந்த அமர்வின் போது அரங்கை குளிர் புகை மூட்டம்(Mist) நிரப்பி வேறு காலத்திற்கு இட்டுச் சென்றது.

இந்த அமர்வின் இறுதியில் தேவதேவன் எழுந்து சைதன்யாவிடm இந்த நாவல் வாசித்து முடித்த போது இது வெறும் ஆற்றல் வீணடிப்பு என்று தோன்றவில்லையா? என்று கேட்டார். அரங்கமே சிரித்தது. அத்தனை தீவிரமாக ரத்தம், ரத்தம் தோய்ந்த சேற்றுப் புதைக்குழி, துரோகங்கள், சண்டைகள், விரிவான போர்ச்சித்தரிப்புகள், ஹெக்டரின் கணுக்கால் எலும்பில் ஓட்டையிட்டு அதை தேர்ச்சக்கரத்திலிட்டு இழுத்துச் சென்ற அகிலிஸ், பெற்ற மகனின் சடலத்தை வாங்க வந்த தந்தை எதிரியின் கூடாரத்தில் இரவைக் கழிக்கும் காட்சிகள் பற்றியெல்லாம் கேட்டுவிட்டு புல்லரித்த நேரம் இந்த வார்த்தை எளிதாக்கியது. நீங்கள் எழுந்து அதுக்கு தான் இந்த அரங்கில் ஒரு கவிஞன் வேணும்றது என்று சொன்னது சிலிர்ப்பாக இருந்தது. சைதன்யா அவரை ஆமோதித்து சிரித்தார். அகிலிஸ், ப்ரியம், ஹெக்டர், பெட்ரோக்ளஸ், அதீனா என பெயர்கள் பழக்கமாகின.

 

அடுத்ததாக சுசித்ராவின் அரங்கு. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தாந்தே அலிகெரியின் “டிவைன் காமெடி” பற்றிய அறிமுகத்தை அளித்தார். முன்னரே சுத்தானந்த பாரதியாரின் மொழிபெயர்ப்பை வாசித்து வரச் சொல்லியிருந்தார். இத்தாலியக் கவிஞரான தாந்தே பற்றிய சித்திரத்தை ஐரோப்பிய இலக்கியத்தில் முதலில் பொருத்திவிட்டு பின்னர் அதைப் பற்றிய விரிவான அறிமுகத்தை அளித்தார். இன்ஃபர்னோ (நரகம்), பர்கேட்டரி, பேரடைஸ்(சொர்க்கம்) ஆகிய மூன்று படிநிலைகள் அடங்கிய படைப்பு. ஒவ்வொன்றைப்பற்றிய தாந்தேவின் விரிவான விவரிப்பும், எந்தெந்த மனிதர்கள் எதில் உழல்வார்கள் என்பதையும் சொன்னார். அறியாமல் செய்யும் தவறை விட அறிவைக் கொண்டு செய்யும் தவறுக்கு தண்டனை அதிகம் என்று அவர் சொன்னது நினைவில் நிற்கிறது. மேலும் தாந்தேவின் காதலியான பியட்ரைஸை இந்தக் காவியத்தில் பர்கேட்டரியிலிருந்து சொர்க்கத்திற்கு வழி நடத்தும் புனிதவதியாக சித்தரித்தரித்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் சொன்னார். நீங்கள் பியட்ரைஸ் என்பதை அழகு (ப்யூட்டி) என்பதோடு தொடர்புபடுத்தினீர்கள். அதுவும் நம்பும்படியாக இருந்தது.

சுசித்ரா மற்றும் சைதன்யாவின் அரங்கு மேற்கின் அல்லது ஐரோப்பாவின் நடுக்காலகட்டத்தைச் சேர்ந்த செவ்வியல் ஆக்கங்களை அறிமுகப்படுத்தியது. இவை ஐரோப்பிய கலைகளைப் பார்க்கும் பார்வையையும், அவர்களின் சிந்தனையை மேலும் புரிந்து கொள்ளவும் உதவிகரமாக இருக்கும்.

*

இரண்டாம் நாள் காலை எழுத்தாளர் அஜிதனின் அரங்கு ”ஏன் பின்நவீனத்துவத்தை கடக்க வேண்டும்” என்ற தலைப்பில் அமைந்தது  இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அஜிதன் தன்னுடைய மருபூமி சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசிய உரையிலிருந்து இந்த விவாதம் தொடங்குகிறது. அதன்பின் அவர் ஒரு ஜூம் கலந்துரையாடலும் நிகழ்த்தினார். அதன் ஒரு இறுதி நிறைவுப் புள்ளியாக அவர் வாசிக்க அளித்திருந்த இஹாப் ஹஸ்ஸன் 2002-ல் எழுதிய “பின் நவீனத்திற்கு அப்பால்: நம்பிக்கையின் அழகியலை நோக்கி” என்ற கட்டுரையும், “ஏன் பின் நவீனத்துவத்துவத்தைக் கடக்க வேண்டும்” என்ற அவரின் கட்டுரையும் அமைந்தது.

இதன்வழியாக அஜிதன் தமிழ்ச் சூழலில் “பின்னைபின் நவீனத்துவம்” என்ற காலகட்டத்தைப் பற்றிய ஒரு பிரக்ஞையைக் கோரினார். இந்த உரையாடல்கள் வழியாக பின்னை பின்நவீனத்துவத்தின் தன்மைகளாக இஹாப் ஹஸ்ஸான் மற்றும் பிற தத்துவவாதிகளின் சிந்தனைகள் வழியாக உண்மை, நம்பிக்கை, நேர்மை, தன்னழிதல், நேர்மறை, விழுமியங்கள் ஆகியவற்றை முன்வைத்தார். இந்தக் கூறுகளை உங்கள் படைப்புகளில் அறம், பின் தொடரும் நிழலின் குரல் ஆகியவற்றுக்கு போட்டுப் பார்த்து நிறுவவும் செய்தார்.

இலக்கியத்தில் புதிதாக நுழையும் ஒரு எழுத்தாளருக்கு ஒருவகையில் இவ்விவாதம் அசெளகரியத்தை அளிக்க வல்லது. இருபதாம் நூற்றாண்டு என்பது வெறுமே பின்நவீனத்துவம் என்ற ஒன்று மட்டுமே விவாதிக்கப்பட்ட காலகட்டம் இல்லை. நீங்கள் நண்பர்களுடன் இணைந்து நடத்திய “சொல்புதிது” இதழில் மொழியியல், உளவியல் என பல அறிவுத்துறைகள் சார்ந்த விவாதத்தை நிகழ்த்தியிருக்கிறீர்கள். மேலும் அதே சமயம் சூழலில் பெண்ணியம், உடல் அரசியல், தலித்தியல், ஈழ இலக்கியம் சார்ந்த விவாதங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன. கோட்பாடுகளின் காலம் முடிந்து சுதந்திரமாக எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளும் நிலையிலும், ஏற்கனவே பின்நவீனத்துவர்கள் சென்று முட்டிய கலை திறந்து கொள்ளாத பாதையையும் துணையாகக் கொண்டு ஒருவர் தன் பாதையை சுயமாக கண்டு கொள்ளும் வாய்ப்புள்ள காலகட்டம் என்று தான் நினைத்தேன்.

இந்த விவாதத்தின் ஒரு தொடர்ச்சியை 2018-ல் குமரகுருபரன் விழாவை ஒட்டி நிகழ்ந்த “நவீன நாவல்” என்ற விஷால் ராஜாவின் உரையோடும் அதன் வழியாக நண்பர்களுக்குள் நிகழ்ந்த விவாதத்தையும் தொடர்பு படுத்த முடிந்தது. ஏனெனில் நண்பர்கள் இறுதியாக பின்நவீனத்துவம் முடிந்துவிட்டது என்ற முடிவுக்கு வருவதோடு அதன் இயல்புகளை இனி வரும் படிப்புகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும் என்றும் நிறைவு செய்துள்ளனர்.

ஆக இனி எழுந்துவரும் படைப்புகள் வழியாக அஜிதன் சொல்லும் பின்னை பின்நவீனத்துவத்தின் தன்மைகளை நாம் சரிபார்த்தலும், மறுவரையும் செய்து கொள்ளலாம் என்று தோன்றியது.

அரங்கில் அஜிதனின் உரைக்குப் பின் முதலில் எழுந்து கேள்வி கேட்ட சாம்ராஜ், ”இப்படித்தான் எண்பதுகளின் ஆரம்பத்தில் இனி எல்லாம் பின்நவீனத்துவம் தான் என்று ஒரு கும்பல் வந்தது. நிறப்பிரிகை என்ற பத்திரிக்கையில் அவ்வகையான எழுத்தாளர்கள் எழுதினார்கள். ஆனால் இன்று திரும்பிப் பார்த்தால் அதிலிருந்து எழுந்து வந்த ஒரு எழுத்தாளர் கூட இல்லை. இப்போது நீங்கள் பின்னைபின் நவீனத்துவம் என்கிறீர்கள். தமிழில் அப்படி எழுதிய எழுத்தாளர்களின் பட்டியலைச் சொல்ல முடியுமா” என்றார். அஜிதன் அதற்கு ”தமிழில் எனக்கு வாசிப்பு குறைவு எனவே சொல்ல முடியாது. ஜெயமோகனின் அறம், பின் தொடரும் நிழலின் குரல் இவற்றை இப்பட்டியலில் சேர்க்கலாம்” என்றார்.

எனக்கு இருந்ததும் அதையொட்டிய கேள்வி தான். ஆனால் சமகாலத்தைப் பொறுத்து அது இருந்தது. ”இன்றைக்கு எழுத வரும் எழுத்தாளர் முன் இனி பின்னை பின்நவீனத்துவம் என்று சொல்வது பதட்டத்தை அளிக்கிறது. என் வரையில் பின்நவீனத்துவம் என்ற  கருவியை நவீனத்துவத்தை உடைக்க மட்டுமே ஆயுதமாகப் பயன்படுத்தியவர்கள் தான் எழுத்தில் உச்சத்தை அடையவில்லை. ஆனால் அதை நேர்நிலையாகப் பயன்படுத்தி எழுதிய ஜெயமோகன், சு.வேணுகோபால், கோபாலகிருஷ்ணன், உமா மகேஸ்வரி போன்றோர்கள் மற்றும் தலித் இலக்கியம், ஈழ இலக்கியம், பெண்ணியம் ஆகிய சிந்தனைகள் வழியாக எழுந்து வந்த எழுத்துக்கள் இலக்கியத்தில் முக்கியமானது.

நீங்கள் ஜெயமோகனின் படைப்புகளை பின்னை பின் நவீனத்துவம் என்கிறீர்கள். என் வரையில் அவர் பின்நவீனத்துவத்தை நேர்மறையாகப் பயன்படுத்திக் கொண்டு சென்றடைந்தது செவ்வியல் அம்சத்தை நோக்கி. இன்று அவர் இன்றைக்கு எழுத வரும் எழுத்தாளர்களிடம் அடிப்படைக் கேள்விகள் நோக்கி, என்றுமுள்ளதை நோக்கி எழுதுங்கள் என்கிறார் என்றேன்.

அஜிதன்,”உங்களை ஜெயமோகன் தவறாக அவருடைய படைப்பை நியோ கிளாஸிசம் என்று வகைப்படுத்தச் செய்திருக்கிறார். அறம் தொடங்கி அவர் படைப்புகள் பின்னை பின்நவீனத்துவப் படைப்புகளே” என்றார்.

உங்கள் படைப்புகளைப் பொறுத்து நவீனத்துவம் தொடங்கி பின்னை பின்நவீனத்துவம் வரை விரிந்து கிடந்தாலும், செவ்வியல் அம்சம் உடன் உள்ளது. நீங்கள் வந்து சேர்ந்திருப்பது உண்மையில் உலகப் பொதுமையை நோக்கி தான். அரங்கில் ஹோமரின் இலியத், தாந்தேவின் செவ்வியல் ஆக்கங்கள் உரையாடப்பட்டபோது நான் உணர்ந்தது அவையாவும் ஒருங்கமைந்த வெண்முரசு இன்று உள்ளது என்பதைத்தான். உங்கள் படைப்புகள் வழியாக நாம் பல காலகட்டங்களைக் கடந்து இன்று நியோ கிளாசிஸத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்று நினைத்தேன். இன்றைக்கு எழுத வரும் எழுத்தாளரை நோக்கி பலவகை எதிர்பார்ப்புகளை, இலக்குகளை வைத்து ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆலம், படுகளம் போன்ற துப்பரியும் நாவல்களிலும் செவ்வியல் அம்சத்தை வைக்க இயலும் என்று காட்டுகிறீர்கள். அநேகமாக அடுத்து பேய் நாவல்கள், நகைச்சுவை நாவல்களை செவ்வியல் தன்மையுடன் எழுதிக் காட்டுவீர்கள் என்று கூடத் தோன்றியது. ஒட்டுமொத்தமாக ஒரு முழுமையசத்தை பற்றிய சித்திரத்தைச் சொல்கிறீர்கள். அதன் நீட்சியாகவே தான் முழுமைக் கல்வி என்ற அமைப்பையும் நீங்கள் முன் வைக்கும் சிந்தனையையும் பார்க்கிறேன்.

வெண்முரசில் “பெருவிளைச்சல்” என குருஷேத்திரக் களத்தைக் குறிப்பிடும் இடம் ஒன்றுவரும். பெருவிளைச்சலை மக்கள் அஞ்சுகிறார்கள். அவற்றை தாங்கள் உண்ணாது தெய்வங்களுக்குப் படைக்கிறார்கள். அதன்பின் நிலம் தரிசாக பன்னிரெண்டு ஆண்டுகள் விடப்படுகிறது.வெண்முரசும், அதற்குப் பின்னான உங்கள் வேகம் என்பதும் தமிழ் இலக்கியத்தில் பெருவிளைச்சல் தான். பெருவிளைச்சலின் அழகைக் கண்ட கண்கள் எளியவைகளையும் ரசிக்கும்படியான போக்கை உருவாக்கி வருகிறீர்கள் என்றே உங்கள் தற்போதைய கதைகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. அதிலும் முழுமையைப் படைக்க முடியும் என்று காட்டுகிறீர்கள். நீலி வழியாக நான் உணர்ந்து கொண்டிருப்பதும் இது தான். பெண்ணியம், தலித்தியம், ஈழம் என எதுவாக இருந்தாலும் அதன் கலை சாத்தியத்தை அடைய இயலுமா என்பதே முக்கியம். இந்த அனைத்து பிரிவுகளுக்கான உச்ச இலக்கை ஏற்கனவே உங்கள் படைப்புகள் வழியாக நியமித்துவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது. அதே சமயம் அவையல்லாது எளியவற்றை ரசிக்கும் அழகியல் ஒன்று உருவாகிவரும் என்றும் தோன்றுகிறது. பெருவிளைச்சலுக்குப் பின்னான தரிசு நிலத்தின் அழகியல் என அதைச் சொல்லலாம்.

அஜிதன் இவையெல்லாம் பின்நவீனத்துவத்தின் தன்மைகளாக இருக்கும் என்று சொல்வதை சமகாலத்தில் மேற்கில் தத்துவபுலத்தில் நடக்கும் விவாதமாக கேட்டுக் கொள்கிறேன். அவை இலக்கியம் தவிர பிற கலைகளில் செயல்படுவது குறித்த பிரக்ஞையைக் கொண்டிருப்பது ரசனைக்கும், மதிப்பிடுதலுக்கும், விமர்சனத்திற்கும் உதவும்.

அந்த உரையின் முடிவில் அஜிதன் இனி தான் பின்னை பின்நவீனத்துவம் பற்றி பேசப்போவதில்லை என்றும். இவ்வாறு நான் சொன்னதால் நான் ஒரு படைப்பை எழுதிக்காட்டுகிறேன் பார் என்று முடிவெடுத்து ஒரு படைப்பை எழுதினால் அபத்தமாக இருக்கும் என்றும், தன் படைப்புகளில் அவற்றைத் தேடுவது வாசகர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கும் என்று சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டார்.

நீங்கள் அந்த அமர்வில் பின்தொடரும் நிழலின் குரல் பற்றி சொல்லும்போது போர்ச் சித்தரிப்போடு முடிந்திருந்தால் அது ஒரு பின்நவீனத்துவப் படைப்பு, அதன்பின் கிறுஸ்துவின் வசனம் வருவதால் அது பின்னை பின்நவீனத்துவப் படைப்பாகிறது என்றீர்கள். அது எனக்கு மதிப்பிடுதலுக்கு சிறந்த புள்ளியாகத் தோன்றியது. உங்கள் அறம் தொகுப்பு கன்னடத்தில் மொழிபெயர்க்கப்படப்போகிறது. அதன் வெளியீட்டார்கள் அதை சரியான பின்னை பின் நவீனத்துவப்படைப்பு என்று மதிப்பிட்டதாக காளிப்ரசாத் இடைவேளையில் சொன்னது இந்த சிந்தனை இந்திய அளவிலும் புழக்கத்தில் உள்ளது என்பதையே காண்பித்தது.

எவ்வகையிலேனும் மருபூமி வெளியீட்டு விழா முதற்கொண்டு இந்த ஐந்து மாதங்களாக பின்னைபின் நவீனத்துவம் சார்ந்து அஜிதன் நிகழ்த்திய உரையாடல் சூழலில் முக்கியமானது. இஹாப் ஹாசனின் கட்டுரைக்கும், உரைகள் மற்றும் “ஏன் பின் நவீனத்துவம் கடக்கப்பட வேண்டும்?” என்ற கட்டுரைக்கும் அஜிதனுக்கு நன்றி. இது பின்னை பின்நவீனத்துவம் என்ற சிந்தனை சார்ந்த பிரக்ஞையை சூழலில் உருவாக்கியிருக்கிறது என்பதை மறுக்க இயலாது.

 

*

இரண்டாம் நாள் இரவு அரங்கில் அகரமுதல்வன் ஈழ இலக்கியம் சார்ந்து பேசினார். அவர் அமர்வுக்கு முன் ஈழ இலக்கியம் சார்ந்து அவர் தேர்ந்தெடுத்து அளித்திருந்த புனைவுகளை வாசித்து வந்திருந்தோம். அந்த அமர்வில் முக்கியமான கேள்வியாக உங்களின் கேள்வி அமைந்தது. “இளங்கையர்கோனின் வெள்ளிப்பாதரசம் கதை போல ஈழத்தில் அதற்குப் பின் ஏன் படைப்புகள் வரவில்லை, மு. தளையசிங்கம் போன்ற ஒரு ஆளுமைக்குப் பின் ஈழத்தில் ஏன் அவ்வாறான ஆளுமை உருவாகி வரவில்லை” என்ற கேள்வி. அகரமுதல்வன் இனி வரும் என்று சொன்னார். பெரிய படைப்புகளைத் தான் எழுதுவேன் என்றும் சொன்னார்.

நான் காவிய முகாம் முடித்து வந்தபின் இளங்கையர்கோனின் வெள்ளிப்பாதரசம் கதையை வாசித்தேன். மிக அருமையான கதை. அப்போது தான் உங்கள் ஆதங்கம் புரிந்தது. அவரைப் பற்றிய முழுமையான தமிழ்விக்கி பதிவையும் வாசித்தேன். அந்த அமர்வில் பேசப்பட்ட ஈழ ஆளுமைகளான தளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை போன்ற பெயர்கள் தமிழ்விக்கியில் இல்லை. இல்லையென்றதும் நான் தேடியது உங்கள் தளத்தில் தான். தளையசிங்கம் பற்றிய விரிவான விவாதம் நிகழ்ந்த ஆறு கட்டுரைகளை வாசித்தேன். ஒரு ஓட்டை பஸ்ஸில் நீங்களும் அருண்மொழி அம்மாவும், வேதசகாயக்குமாரும் வந்து ஊட்டியில் நிகழ்ந்த அந்த விவாத அரங்கில் பேசிய ஆளுமைகளும், பேசிய விரிவும் வியப்பில் ஆழ்த்தின. பெரிய உழைப்பு ஜெ. இந்தக்காவிய முகாமில் நீங்கள் உத்தேசிக்கும் நேர்த்தியும், எங்களிடமிருந்து எதிர்பார்க்கும் குறைந்தபட்ச மூளை உழைப்பும் ஏன் என்று புரிந்தது. அந்த அமர்வைப் பற்றி நீங்கள் எழுதிய விரிவான பதிவைப் பார்த்தபோது இந்தக் கடிதம் அதில் இருபது சதவீதம் கூட இல்லை என்று படுகிறது. அத்தகைய பதிவை எழுதும் அளவு இன்னும் கூர்மையான கவனிப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

மேலும் அகரமுதல்வனின்  அமர்வுக்குப் பின் வந்த இன்னொரு கேள்வி, சமகால ஈழ எழுத்தாளர்கள் என்றதும் முதன்மையாக நினைவுக்கு வருவது புலம் பெயர் எழுத்தாளர்கள் தான். ஈழத்தில் இருந்து எழுதும் எழுத்தாளர்கள் பட்டியல் வேண்டும் என்று தோன்றியது. இந்தத்தேடலில் சப்னஸ் ஹசிம், ஜிஃப்ரி ஹாசன், உமையாழ், அப்துல் றசாக், ஓட்டமாவடி அறபாத், சாஜித் அஹமட், மலர்ச்செல்வன், தீரன் நெளஸத், ப்ரமிளா, தாட்சாயிணி, உமா வரதராஜன் என ஒரு பட்டியல் கிடைத்தது. ஜிஃப்ரிஹாசன் அகழ் மற்றும் வனத்தில் எழுதிய கட்டுரைகள், விமர்சனங்கள் முக்கியமானவையாக இருந்தது.

முதன்மையாக யாவருக்கும் தமிழ்விக்கி பக்கம் உருவாக்க வேண்டும். அவர்களின் படைப்புகள் பற்றிய உரையாடல் சூழலில் உருவாக வேண்டும். இங்கு ஈழ இலக்கியம் சார்ந்து வைக்கப்படும் விமர்சனம், மதிப்பீடு அங்கும், அங்கு ஈழ இலக்கியம் செல்லும் திசை பற்றிய போதம் இங்கும் இருக்க வேண்டும். தமிழ்விக்கிக்கு தகவல் பெற்றுத் தர உதவுவதாக ஷாதிர், சஃப்னஸ் மற்றும் அனோஜன் உறுதியளித்தனர். செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என்று தோன்றியது. வனம் மற்றும் அகழ் இதழ்கள் இவற்றை இன்னும் தீவிரமாகச் செய்யலாம் என்று தோன்றியது. ஏனெனில் இன்று தமிழ்ச் சூழலோடு உரையாடும் ஈழப் படைப்பாளர்களும், படைப்புகளும் வெளிவரும் இதழ்களில் இவற்றின் பங்கு முக்கியமானவை. இன்னும் இந்த அமர்விலும் வெளியிலும் கட்டுரைகள், உரைகள் வாயிலாக நீங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கான விடைகள், உரையாடல்கள் சரியாக நிகழவில்லை ஜெ. அது செய்யப்பட வேண்டும்.

அடுத்த அமர்வு ஜி.எஸ்.எஸ்.வி நவீனின் நாட்டார் இலக்கியம் சார்ந்த அரங்கு. இந்த அரங்கில் நீங்கள் பல நாட்டார் கதைப்பாடல்கள் பற்றி பகிர்ந்தது நன்றாக இருந்தது. தமிழ்விக்கியின் பல நாட்டார் பதிவுகள் நினைவுக்கு வந்தன.

*

முதல் நாள் மாலை நிகழ்ந்த சிறுகதை அரங்கும், இரண்டாம் நாள் மாலை நிகழ்ந்த கவிதை அரங்கும் ரசனை மேம்படுத்தலுக்கான ஒன்று. புதியவாசகர் சந்திப்பில் நிகழ்ந்த சிறுகதை விவாதங்கள் வழியாகவும் இதைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். ஆனால் காவிய முகாமில் பலதரப்பட்ட வாசிப்புகள் கிடைக்கின்றன. நம்முடையது எந்த அளவில் குறைவுபட்ட வாசிப்பு அல்லது மிகை வாசிப்பு என்பதை மதிப்பிட்டுக் கொள்ள முடிகிறது. நம் வாசிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் துணிந்து அவையில் நின்று அதைச் சொல்லும் தைரியத்தையும் அளிக்கிறது.

சிறுகதையைப் பொறுத்து காளிப்ப்ரசாத் தேர்ந்தெடுத்த கதையைத் தவிர பிற கதைகள் சிறுகதைகள் என ஒப்புக் கொள்ளப்பட்டவை. டொனால்ட் பார்தெல்ம் எழுதிய “நான் ஒரு சிறிய நகரத்தை வாங்கினேன்” என்ற கதையை முதலில் வாசித்தபோதே அது எனக்கு சரியாகப் படவில்லை. ஏன் அவ்வாறு இருக்கிறது என்பதை எனக்குப் பிடித்த சிறுகதைகளுக்கு நான் வைக்கும் மதிப்பீடுகளைப் போட்டுப் பார்த்து இது சரியாக இல்லை என வைத்துக் கொண்டேன். ஆரங்கில் அது எவ்வாறு பின்நவீனத்துவப் படைப்பாக எழுதப்பட்டது என்றும், எவ்வகையில் அது போலி என்றும் நண்பர்கள் வாதாடினார்கள். சிறுகதை அரங்கில் யூமாவாசுகியின் “வேட்டை” சிறுகதையை ஒட்டி நிகழ்ந்த விவாதம் அருமையாக இருந்தது. அனிச்சையாக மனிதனிலிருந்து வெளிப்படும் உணர்வு சார்ந்து அவன் செயல்படும் விதம், சடங்குகள், நம்பிக்கைகள் அந்த அனிச்சை செயலுக்கு அவனுக்கு எவ்வாறு தூண்டுகோலாக அமைகின்றன ஆகிய விவாதங்கள் முக்கியமனாது. நீங்கள் அந்தக் கதை எப்படி தமிழின் நூறு சிறந்த சிறுகதைப் பட்டியலில் வைக்கப்படுகிறது என்று சொன்னது மதிப்பீட்டுக்கு முக்கியமானது.

கவிதை அரங்கில் அனைத்துக் கவிதைகளின் தேர்வும் நன்றாக இருந்தது. பெரிய அளவில் விவாதங்கள் உருவாகவில்லை. நல்ல கவிதையைத் தேர்வு செய்தால் விவாதம் உருவாவதில்லை என்பதைப் பார்த்தேன். கோவை கவிதை அரங்கில் பெரிய விவாதம் வந்தது நினைவுக்கு வருகிறது. “இதையெல்லாம் எப்படி கவிதை என்று சொல்கிறார்கள்” என்றூ நடக்கும் விவாதமே மதிப்பீட்டுக்கு உதவுகிறது. அடிதடி இல்லாமல் கவிதை அரங்கு நிகழ்ந்தது வருத்தமாக இருந்தது. இளம்பரிதி துறவி ஹான்ஷானின் வாழ்வும் அவரின் ஜென் கவிதைகளும் வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்தபோது கிருஷ்ணன் ஒரு கவிதை எங்கிருந்து வாசித்தாலும் புரிய வேண்டும். தனியாக நிற்க வேண்டும் என்றார். இதற்காகவெல்லாம் ஜப்பான் சென்று மலையுச்சியில் நின்று படிக்கவேண்டியது இல்லை. ஆனால் இது நல்ல கவிதை தான் என்றார். விக்னேஷ் ஹரிஹரன் உரைநடைக்கவிதை – கவிதை வடிவில் உரைநடை எழுதுவது இரண்டிற்குமான ஒரு விவாதத்தை உருவாக்கும் பொருட்டு ஒரு கேள்வியை முன்வைத்தே அரங்கை ஆரம்பித்தார். ஆனாலும் கவிதையைப் பொறுத்து இதுகாறும் விவாத அரங்குகள் வழியாக அவர்கள் அடைந்திருக்கும் முடிவுகள் வழியாக எந்த வடிவில் எழுதப்பட்டாலும் நல்ல கவிதையா என்றே பார்க்கிறார்கள். அவ்வகையில் அதிலும் விவாதம் உருவாகாமல் அமைதியாக ஆனது. அதியமான் தேவதச்சனின் கவிதைகள் பற்றி வைத்த அவரின் வாசிப்புப் பார்வை நன்றாக இருந்தது.

*

முதல் நாள் காலை நிகழ்ந்த பக்தி இலக்கியம், மரபிலக்கியம் சார்ந்த அமர்வுகளும் சிறப்பாக இருந்தன. ஜா.ராஜகோபாலன் பக்தி இலக்கியம் பற்றிய அறிமுகத்தை அளித்து இயேசு மற்றும் அல்லா சார்ந்த பக்தி இலக்கியப் பாடல்களைப் பற்றிய அறிமுகத்தை அளித்தார். அந்தியூர் மணி அண்ணா காரைக்கால் அம்மையார் பற்றிய சித்திரத்தையும், அற்புதத் திருவந்தாதி பற்றிய பாடல்களையும் அரங்கில் உரையாடினார். பார்கவி கம்பராமாயணம் பற்றிய அரங்கில் பாடல்கள் பாடி அருமையாக நடத்தினார். அந்த அமர்வில் நீங்கள் ஒவ்வொரு பாடலிலும் எதை முதன்மையாக பொருள் சொல்ல வேண்டும் என்று சொன்ன இடங்கள் அறிதலாக இருந்தது.

 

*

இந்த அமர்வுகளில் சாம்ராஜ், கடலூர் சீனு, கிருஷ்ணன் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. கிருஷ்ணன் எழுந்து பேசினால் ஒன்று மட்டையடி அல்லது முழுதேர்ப்பு. இரண்டுமே விவாதத்தை ஏற்படுத்தும். அவருக்கு இடைநிலை என்ற ஒன்றே இல்லை என்று தோன்றும். திட்டுவதானாலும், அசிங்கப்படுத்துவதானாலும், தட்டிக் கொடுப்பதானாலும், பாராட்டுவதானாலும் எப்போதும் பலத்த சிரிப்பு ஒன்று அவருக்கு உடன் சேர்ந்து கொள்ளும். அதை யோசிப்பதற்குள் இன்னும் ஏன் இங்கிட்டு நின்னுக்கிட்டு அங்க போவோம் என்று அழைப்பது போல அடுத்ததற்கு நகர்ந்துவிடுகிறார், அவர் என்ன செய்தார் என்பதை பிற்பாடு யோசித்தால் தான் புரியவரும். ஒருவேளை எனக்கு மட்டும் அப்படித் தோன்றுகிறது என நினைக்கிறேன். சாம்ராஜின் குரல் மைக் பிடித்துப் பேசும் நல்ல கம்யூனிஸ்ட் கட்சித் தோழருக்கு உரியது. ஒவ்வொரு அரங்கிலும் மறக்காமல் கேள்வி கேட்பார். ஒரு ஐபேட் வைத்திருந்தார். இருந்தும் ஏதும் தப்பிவிடக்கூடாதென நான் வைத்திருந்த ஸ்பைரல் நோட்டை அவ்வபோது வாங்கிப் பார்த்துக் கொண்டார். நிகழ்வுக்கான முழுத்தயாரிப்புடன் வந்திருந்தார். கேள்வி கேட்பதற்கு முன் நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன், புதியவர்களுக்கு வாய்ப்பில்லாமல் என ஜெ திட்டுவார் என அவ்வபோது உங்கள் முக பாவனைகளைப் பார்த்துக் கொண்டே  தான் கேள்வி கேட்டார். சாம்ராஜின் இருப்பு நிகழ்விலும், நிகழ்வுக்குப் பின்னான உரையாடலிலும் என முக்கியமானதாக இருந்தது. சீனு நரேனின் அமர்வில் இறுதியாக குழந்தைகள் இரு கைகளையும் முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டு கோர்த்துக் கொள்வது போல எளிமையாக ஆனால் திட்டவட்டமாக விவேக் ஷான்பேகின் காச்சர் கோச்சர் எவ்வாறு ஒரு போலி படைப்பல்ல என கிருஷ்ணனுக்கு பதில் சொன்னது முக்கியமான தருணம். அவ்வகையில் அவரின் அந்தச் சித்திரம் மனதில் நின்றுள்ளது.

மேலும் க.மோகனரங்கன், நாஞ்சில் நாடன், தேவதேவன், பாவண்ணன் அகிய மூத்த படைப்பாளிகளின் சரியான குறுக்கீடுகள் முக்கியமானவையாக இருந்தன. அது நிகழ்வுக்குக் கூடுதல் பலம். நிறைவாக எல்லா அமர்வுகளிலும் ஒரே சமயம் மாணவராகவும், ஆசிரியராகவும் இருந்து உங்களின் பங்களிப்பைத் தொடர்ந்து கொடுத்ததற்கு நன்றி ஜெ.

*

மூன்று நாள் நிகழ்வுக்கு முன்னதாக மழை பெய்திருந்தது. சாலைப் பயணம் சிறிது கடினமானதாக இருந்தது. ஆனால் நிகழ்வு நடந்த மூன்று நாளும் மழை இல்லாமல் குளிரும் இல்லாமல் காலநிலை ரம்மியமாக இருந்தது. அதிகாலை அந்தப் பாறையின் மேல் நின்று மலையைப் பார்ப்பதும், மெல்ல பச்சை ஒளிகொண்டு துலங்கி வருவதைப் ரசிப்பதும் யோகம் போன்றதாக இருந்தது. சைதன்யா எதிர்பாராமல் ஒரு நல்ல புகைப்பத்தை எடுத்திருந்தார். முதல் நாள் இரவு அறையில் புதிய நண்பர்களை அறிமுகப்படுத்திக் கொண்டதும், அனுபவப் பகிர்தலும் இருந்தது. பழைய நண்பரான சரண்யாவுடன், புதிய நண்பர்களான ஸ்வர்னாவும், கீர்த்தனாவும் சேர்ந்து குதூகலமாக இரவுகள் கழிந்தது. இரண்டாம் நாள் இரவை சுசித்ரா மற்றும் பார்கவியின் பாடல்கள் இனிமையாக நிறைத்தது. அந்த நேரத்தில் எழுந்து வந்த புத்த பூர்ணிமைக்கு அடுத்த மூன்றாம் நாள் நிலவு மேலும் இரவை இனிமையாக்கியது. வெள்ளிமலையில் அப்படி மலைக்குப் பின்னிருந்து எழுந்த நிலவுத் தருணங்களை தரிசித்தது மறக்க முடியாதது. எல்லா சமயங்களிலும் உங்கள் அருகமைவும், குரலும், சிரிப்பும் உடன் இருந்திருக்கிறது என்பதை நினைவுகூர்கிறேன்.

யார் பாடல் பாடினாலும் எனக்கு முதலில் நினைவிற்கு வருவது மருத்துவர் மாரிராஜ் தான். அவர் இல்லாததால் இந்தமுறை என்னால் என் குரல்வளத்தைக் காண்பிக்க முடியவில்லை. அவர் பாடிவிட்டால் அதற்குப் பிறகு தயக்கம் என்ற ஒன்றில்லாமல் யார்வேண்டுமானாலும் பாடலாம். அந்தவகையில் அவர் இல்லாதது ஒரு மனக்குறைதான்.

இடைவேளை நேரங்களில் நண்பர்கள் அடுத்த அமர்வுக்காக வாசித்துக் கொண்டிருந்தனர். கிடைக்கும் நேரங்களில் நிகழ்வுகளைப் பற்றி தொகுத்துக் கொள்வதும், விவாதிப்பதும் பயனுள்ளதாக இருந்தது. காலையில் எழுந்து ஒரு கும்பல் பறவை பார்ப்பதும், குழுக்களாக நடை செல்வதும், பெரும்பாலும் உங்களைச் சுற்றி நின்று உங்கள் நகைச்சுவைகளைக் கேட்பதும் என இனிமையாக மூன்று நாட்கள் கழிந்தது. மகிழ்வான அனுபவம்.

நன்றி ஜெ.

பிரேமையுடன்,

ரம்யா.

 

முந்தைய கட்டுரைஅடிப்படை யோகப்பயிற்சி முகாம்
அடுத்த கட்டுரைசைவசித்தாந்த வகுப்பு – கடிதம்