சைவசித்தாந்த வகுப்பு – கடிதம்

இனிய ஜெயம்

ஆலயக்கலை வகுப்பை தொடர்ந்து அடுத்தடுத்த இனிமைகளாக மரபின் மைந்தன்  எடுத்த சைவ திருமுறைகள் வகுப்பும், சாந்த குமார சுவாமிகள் எடுத்த சைவ சித்தாந்த வகுப்பும் கிடைத்தது.

இன்றைய இளம் மனங்களுக்கு மரபின் மைந்தன்  போன்ற ஒருவர் எடுக்கும் திருமுறை அறிமுக வகுப்பு எந்த அளவு முக்கியம் என்பதை வகுப்பில் இருக்கையில் அறிய முடிந்தது. இன்றைய தலைமுறைக்கு பெரும்பாலும் சைவம் சார்ந்த விஷயங்கள் அவர்களை ஈர்க்கும் வண்ணம் பொதுக்கலாச்சாரத்தின் வழியாக வந்து  சேர்கிறது. அதே சமயம் அங்கே ஒரு பாப்புலர் கல்சர் நோக்கிய இளகிய தன்மையும் அங்கே உள்ள அனைத்து அலகுகளுக்கும் உண்டு. அதற்கு வெளியே சீரிய முறையில் ஒரு பதிகப் பாடல் ஒருவரை எந்த ஆழம் வரை சென்று தீண்டக் கூடியது என்பதை இங்கே அறியலாம். சுருங்க கூறின் அங்கே துவங்கியோர் இங்கே வரலாம். சீரிய ஒன்றின் சுவையை அறியலாம்.

அதே போல ஒரு தீவிர இலக்கிய வாசகனுக்கும் இந்த வகுப்பு மிக முக்கியமானது. முதல் காரணம் தீவிர இலக்கிய வாசிப்பு அளிக்கும் உள் ஒடுங்கிய நிலையை தாண்டி உள்ள உணர்வு நிலைகளின் தீவிரம் எத்தகையது என்பதை அறிய. இரண்டாவது காரணம் ஒன்றை நம்மை நோக்கி இழுக்கும் வகைமையில் பழக்கப்பட்டு விட்ட, ஆசிரியனுக்கும் வாசகனுக்கும் இடையேயான  மௌன வாசிப்புக்கு பழக்க பட்டு விட்ட நவீன வாசகன் அந்த இடரை கடந்து வர.

திருமுறைகள் எழுந்து வந்த பண்பாட்டு வரலாறுடன், ஒவ்வொரு இறை நேசரும் பாடிய சில பதிகங்களை அதற்கான பின்புல கதையுடன், கம்ப ராமாயணம், ஆழ்வார் பாடல்கள், பாரதிதாசன் கவிதைகள், பட்டினத்தார் பாடல்கள் என்றெல்லாம் தமிழின் வெவ்வேறு அழகுகள் கூட, அவ்வப்போது தெறிக்கும் நகைச்சுவைகளுடன் மரபின் மைந்தன் சார் இங்கே எடுப்பது போல திருமுறைகள் சார்ந்த நல்லதொரு  அடிப்படை வகுப்பு இதற்கு இணையான ஒன்றை வேறு எங்கும் காண முடியாது என்று உறுதியாகவே சொல்வேன்.

வகுப்புக்கு வெளியே ஜெயகாந்தன் துவங்கி ரசிகமணி வரை தொடர்ந்த அவரது உரையாடல், நினைத்து சிரிக்கும் வண்ணம் தெறிக்கும் அவரது நகைச்சுவைகள், வாசக கேள்விகளுக்கு அவரது சுவாரஸ்யமான பதில்கள் (கேள்வி: சார், இதுல வர்ற அந்த பௌத்த சமண எதிர்ப்பு வரிகளை மட்டும் விட்டுட்டு படிச்சிக்கட்டுமா?

பதில்: அய்யய்யோ கூடாது… குறிப்பா நீங்க அதை மட்டுமே தினமும் மூன்று முறை படிங்க) என்று இனிய தினங்கள்.

இந்த வகுப்பு முடிந்த உடன் நேரே கிளம்பி கோனேரிராஜபுறம் நடராஜர் படிமம் முன்தான் சென்று நின்றோம். தமிழ் நிலத்தின் ஆடல் வல்லான் படிமைகளிலேயே உச்ச பேரழகு இந்த ஈசனே என்று சொல்வேன்.

குவித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில்

குமிண் சிரிப்பும்

பனித்த சடையும்

பவளம் போல் மேனியில் பால் வென்னீரும்

இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலதே

என்ற பாடலின் அழகை, இந்த கோலத்தைக் காண, இந்த பூமியில், இந்த மனிதப் பிறவி வேண்டும் என்று சொன்ன அப்பரின் உணர்வு நிலையை ஏந்தி  கணுக் கணுவாக ரசிக்க அந்த ஈசனாரே அனைத்து படிமைளிலும் சிறந்தவர்.

இப்படி வாய் விட்டு பதிகங்கள் பாடிய படி அதன் உணர்வு நிலைகள் வழியே ஆலயக்கலை காட்டிய பாதையில் பயணிப்பது என்பது எவரொருவரும் தவற விடக்கூடாத அனுபவம் என்றே சொல்வேன். பாரதம், பக்தி இயக்கம் வழியே எவ்விதம் கட்டி எழுப்பப்பட்டது என்பதை பக்தி என்பதன் அதன் உணர்வு நிலைகள் வழியே பயணித்து அறிய இவ்விரு வகுப்புகளும் சிறந்த துவக்கமாக அமையும்.

இதன் மறு எல்லை சாந்த குமார சுவாமிகள் எடுத்த சைவ சித்தாந்த வகுப்பு. தமிழ் நில செவ்வியல் கலையின்  சிகர வெளிப்பாடான நடராஜர் படிமையை எடுத்துக் கொண்டால், அது உணர்வுகள் கரையும் பக்திக்கான மூர்த்தமே. அதே சமயம் அது அறிவின் சிகர முனையில் நிற்கும் தத்துவ மூர்த்தமும் கூட.

பக்தி தரப்பும் சேர்ந்த அதே சமயம் அதை கடந்த மெய்யியல் சார் சித்தாந்த சைவம் என்பதன் அடிப்படைகளை, அதன் அடிப்படை பேசு பொருட்கள் எதுவோ அவற்றை இரண்டரை தினங்களில் சுவாமிகள் சுவாரஸ்யமான உரைகள் வழியே அறிமுகம் செய்தார்.

சுவாமிகள் வகுப்பை துவங்கிய விதமே ஆச்சர்யம் அளித்தது. இயற்கையில் இருந்து தொட்டு பேச துவங்கி, சாந்தோக்ய உபநிஷத் இலிருந்து வகுப்பை துவங்கினார். சத்ய காம ஜாபாலனுக்கு உரைக்கப்பட்ட மெய்மை சார்ந்த நான்கு கூற்றுகளுடன் ஒரு சித்தாந்த சைவ வகுப்பு துவங்கும் என்று நான் எண்ணிப்பார்க்கவே இல்லை. இரண்டரை நாள் சித்தாந்த வகுப்பில் திருவள்ளுவர் துவங்கி ஷோபனோவர், கார்ல் யூங் கூற்றுக்கள் என நவீனமெய்த் தேட்டம் வரை எல்லாம் வந்து இணைந்து கொண்டே இருந்தன.

மேலை மரபின் பிலாசபி கீழை மரபின் தத்துவம் இவற்றுக்கான அடிப்படைகள், ஒற்றுமை வேற்றுமை, தனித் தன்மைகள் இவற்றை முதலில் விளக்கிய சுவாமிகள், வேதம் துவங்கி, உபநிஷத்கள், வேத மறுப்பு தரப்புகள், மத த்தரப்புகள், அந்தந்த தரப்பின் தர்க்க முறைமைகள், உரை மரபு வழியே பொருட்கோடல் வளர்ச்சி என 13 ஆம் நூற்றாண்டு சித்தாந்த சைவம் எந்த மரபின் வளத்தை உண்டு செறிந்து எழுந்ததோ, அந்த மரபில் சித்தாந்த சைவம் கொண்ட இடுபொருட்கள் எவையோ அவற்றின் நிலையை விளக்கினார்.

அறிபவன், அறிப்படு பொருள், அறியும் முறை, அறிவு இந்த வரிசையை தொடர்ந்து சித்தாந்த சைவம் கொண்ட அடிப்படைகளான பதி, பசு, பாசம் எனும் அலகுகள் கொண்ட உள் விரிவை. சத்காரியவாத நிலைகளை, சித்தாந்த சைவம் சொல்லும் அறுதி நிலையை இவற்றின் மீதான அடிப்படை அறிமுகத்தை இரண்டரை நாளில் சுவாமிகள் வழங்கினார்.

ஒவ்வொன்றையும் அதன் பரிணாம வளர்ச்சி பாதையில் வைத்து சுவாமிகள் விளக்கினார். உதாரணமாக ஆசீவகம் வினையை ஏற்று கொள்ளாது ஆனால் வினையின் நியதியை மட்டும் ஏற்று கொள்ளும். பௌத்தம் வினை கொள்கையின் இரண்டு நிலைகளையும், சமணம் மூன்று நிலைகளை ஏற்று கொள்ள, இந்த வரிசையை விளக்கியபடியே வந்து சித்தாந்த சைவம் ஐந்து நிலைகளில் முன்வைக்கும் வினை கோட்பாட்டை அதனுள் செயல்படும் ஒவ்வொரு அலகையும் விரிவாக பேசினார்.

பதியின் குணங்கள், செயல்கள், அனைத்தையும் கடந்த அவன் இருப்பு, பசுவின் குணங்கள் செயல்கள், உடல் உயிர் என அது கொண்ட தத்துவங்கள், பாசத்தின் மும் மலமும் அவற்றின் உள் விரிவும் என்று விளக்கி, சித்தாந்தம் சொல்லும் இறுதி நிலை என்ன? அதற்கும் அத்வைதம் சொல்லும் இறுதி நிலைக்கும், விசிஷ்டாத்வைதம் சொல்லும் இறுதி நிலைக்கும், துவைதம் சொல்லும் இறுதி நிலைக்கும் உள்ள வேறுபாடு அனைத்தையும் விளக்கினார்.

உள்ளபடிக்கே சித்தாந்த சைவம் ஒரு கடல். என்பதையும் இந்த வகுப்புகள் வழியே அதன் கரையில் சற்றே கால் நனைத்திருக்கிறோம் என்பதையும் உணர முடிந்தது. வகுப்புகள் பின்னான கேள்வி பதில் பகுதியில் சுவாமியின் சீடர் தத்தாத்ரேயர் சொன்ன பதில் ஒன்று சுவாரஸ்யமாக இருந்தது.

கேள்வி: உயிர்களை பற்றி இருக்கும் இந்த வினை தொடரின் முதல் துவக்கம் எவ்வாறு நிகழ்ந்திருக்கும்?

தத்தாத்ரேயர் பதில்: இப்போ சட்டைல காப்பி கொட்டிருச்சி. அந்த கரையை இப்போ நீக்க பாப்பீங்களா, இல்ல உலகத்துல முதல் காப்பி கொட்டை எப்போ விளைஞ்சது அப்டின்னு யோசிப்பீங்களா?

நல்ல பதில். தத்துவம் எந்நிலையிலும் நடைமுறை சார்ந்ததே என்று புரிந்தது. இன்னொன்றும் தத்தாத்ரேயர் சொன்னனார். எப்படி என்று கேட்டால் பதில் உண்டு. ஏன் என்று கேட்டால் பதிலில்லை. தண்ணீர் எப்படி என்று கேட்டால் h2o என்று பதில் கிடைக்கும். ஏன் h2o என்று கேட்டால் பதில் இல்லை.

இப்படி பல சுவாரஸ்யம் அடங்கிய மூன்று கல்வி தினங்களை தந்த சுவாமிஜியும் தனிப்பட்ட முறையில் ஒரு சுவாரஸ்யமான ஆளுமை சைவ சித்தாந்தி, அதே சமயம் சாயி மார்க்கி, முனைவர், இலக்கியம் அறிந்தவர் அதே சமயம் இச்சினி வித்தை அறிந்தவர் (இவரது குரு கெட்ட வார்த்தை சொல்லி திட்டி இவரை முதலில் விட சொன்னது இதை தானாம்). அடுத்தடுத்த வகுப்புகளில் இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம் என்று சொல்லி சித்தாந்த சைவ அறிமுகத்தை முடித்தார்.

ஆலயக் கலை வகுப்பை பறவை என்று கொண்டால், அதன் இரண்டு பக்கமும் இரண்டு சிறகுகள் என்று அமைவன இந்த திருமுறை மற்றும் சித்தாந்த வகுப்புகள். இன்றைய தலைமுறையின் இலக்கிய வாசகன் ஒருவன் இதையெல்லாம் இவ்விதம் அறிந்து வைத்திருக்க வில்லை எனில் அவன் அடிப்படையான ஒன்றை இழக்கிறான் என்றே பொருள். இது எத்தகையதொரு அரிய வாய்ப்பு என்பதை ஒவ்வொரு வகுப்பு வழியாகவும் உறுதிபட அறிந்து வருகிறேன். அந்த வகையில் மீண்டும் ஆசிரியர்களுக்கு நன்றி.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைகுரு நித்யா காவிய முகாம், பதிவு- ரம்யா
அடுத்த கட்டுரையோகமும் என் குடும்பமும் – சர்வா