குரு நித்யா காவிய அரங்கு, கடிதம்

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் கடந்த  ஓர் ஆண்டாக தமிழ் சிறுகதைகள் வாசித்து வருகிறேன். தமிழ் இலக்கிய உலகத்திற்குள் உங்கள் இணையதளம் மற்றும் உரைகள் மூலம் நுழைந்தேன். ஒவ்வொரு எழுத்தாளரையும் அறிமுகம் செய்வதற்கு அவர்களின் சிறுகதை தொகுப்புகள் படித்து, அவர்கள் கொடுத்த பேட்டிகள், பேசிய உரைகள் மற்றும் தொகுக்கப்பட்ட ஆவணப்படங்களை பார்த்தேன். சில வருடங்களாக, நான் எனக்குள் இருக்கும் கேள்விகளுக்கு விடை தேடி வேறு நகரங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன். வெவ்வேறு இடங்களில் தங்கி ஆசிரியர்களிடமிருந்து கற்றிருக்கிறேன். ஆனால், போன ஒரு வருடம் நான் தமிழ் இலக்கியம் படித்து அதில் எனக்கு கிடைத்த intellectual rigour and emotional blossoming என் தேடுதலை மேலும் ஒரு படி  தீவிரப்படுத்தியது. ஒரு வீடு திரும்புதல் போல.

இந்த மனநிலையில், நான் குரு நித்ய காவிய முகாமிற்கு பதிவு செய்தேன். எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்தித்து உரையாட ஒரு பெரும் சந்தர்ப்பமாக இருக்கும் என்று எண்ணினேன். நான் தூரத்திலிருந்து நேசித்த ஆளுமைகளுடன் அமர்ந்து எண்ணங்கள், கதைகள் மற்றும் சிரிப்புகள் பகிர்ந்து கொண்டது எனக்கு உற்சாகத்தை அளித்தது. முகாமிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் டார்ஜிலிங் சென்று வந்தேன். சமவெளிக்கு வந்தபின் மலைகளையும் மேகங்களையும் என் மனம் மீண்டும் தேடிக்கொண்டிருந்தது. வெள்ளி மலை பயணம் அதை நிறைவேற்றியது.

நித்யவனத்தில் இருந்த இயற்கை சூழல் புதியதை அறிவதற்கு ஒரு திறந்த மனதையும் அதை கற்பதற்கு நேர்மறை நிலையையும் அனுமதித்தது. பக்தி இலக்கியம், கம்பராமாயணம், காரைக்கால் அம்மையார் கவிதைகள் என்று தமிழ் மரபிலக்கிய பண்பாட்டை அதன் வரலாற்று பார்வை, கட்டமைப்பு பற்றி மட்டுமல்லாமல் பாடலுடன், கூட்டு வாசிப்பு மூலம் அறிமுகம் செய்து கொண்டது, ஒரு சுவையான உணவை ருசித்து உண்ணுவது போல இருந்தது. இவ்வளவு விரிவான தலைப்புகளை கையாண்ட வெவ்வேறு படைப்புகள், அதை செறிவான முறையில் விவரித்து கலந்துரையாடலுக்கு ஒரு வரைபடம் அமைத்த பேச்சாளர்கள் அனைவரும் இலக்கிய முகாமை ஒரு சிறந்த அனுபவம் ஆக்கினர்

அனைத்திலும் எனக்கு மிகப் பிடித்தமானது மூத்த எழுத்தாளர்களின் அருகில் அமர்ந்து அவர்கள் சொன்ன வாழ்க்கை அனுபவங்களையும் கதைகளையும் கேட்டது தான். நாஞ்சில் நாடன் யானை என்ற சொல்லுக்கு ஈடான 20 சொற்கள் சொன்னது; தேவதேவன் எளிமையான விதத்தில் மதிய உணவின் நடுவில் என் கேள்விக்கு ‘truth’ என்பது, கவிதையில் வெளிப்படும்மின்னற்பொழுது தூரம்என்ற வரியை போல தான் என்று சொன்னது; பாவண்ணன், இரவில் நிலா பாடல்கள் பாடும்போது குளிரினால் ஸ்வெட்டர் போட்டு வந்து பாடி முடிக்கும் வரை எங்களுடன் அமர்ந்திருந்தது; நீங்கள் சொன்ன ஏராளமான கதைகள், மதியத்திலிருந்து இரவு ரயில் ஏறும் வரை அதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தது, எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்து பேரன்பை உணரவைத்தது

நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது எல்லாரிடமும்கதை சொல்லுங்க கதை சொல்லுங்கஎன்று கேட்டுக்கொண்டே இருப்பேன். என் பாட்டி ஒரே கதையை திரும்ப திரும்ப சொல்வாங்க. அம்மா அப்பா கதை சொன்னதில்லை, ஆனால் புத்தகங்கள் நிறைய வாங்கி தருவார்கள். என் எழுத்தாளர் நண்பர் ஒருவர் முகாமிலிருந்து நான் திரும்பியவுடன் “How was your experience?” என்று கேட்டபோது, நான், “I was drenched in stories, I feel so rejuvenated. It’s as if some thirst has been quenched.” என்று சொன்னேன்

பாவண்ணன் அவர் உரை முடிந்து நடந்த கலந்துரையாடலில், ஒரு இளம் நண்பரிடம் கேள்வி ஒன்று எழுந்தது. படைப்பூக்கம் கொண்ட இளைஞர்களுக்கு அவர் என்ன ஆலோசனை கொடுப்பார் என்று. அவர், “ நாஞ்சில் நாடன், நான், எங்கள் வாழ்க்கை அனுபவங்களை ஒரு கயிற்றை போல பிடித்து ஏறியது போல நீங்களும் உங்கள் சூழ்நிலையின் கயிற்றை பிடித்து ஏறிக் கொள்ளுங்கள்என்றார். நித்யவனத்தில் நடக்கும் வகுப்புகள் மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைத்திருக்கும் விவாத சூழல், என்னைப்போல இளைஞர்களுக்கு ஒரு உறுதியான கயிற்றைப் போல.

இந்த தொடர்ச்சியான கற்றல் சூழலை அமைத்திருக்கும் உங்கலுக்கும், பிற எழுத்தாளர்கள் மற்றும் எல்லா வாசக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

நன்றியுடன்,

பேரன்பு,

ஸ்வர்ண மஞ்சரி 

மதுரை.

முந்தைய கட்டுரைமதத்தில் இருந்து தத்துவத்தைப் பிரிக்க முடியுமா?
அடுத்த கட்டுரைஏன் இஸ்லாமைத் தெரிந்துகொள்ள வேண்டும்?