இன்றைய குரு முறைமை

அன்புள்ள ஆசிரியருக்கு,

என் குடும்ப பின்னணி காரணமாக எனக்கு இந்து மதத்தை பற்றி மிக அதிகமாக தெரியும் என்று நம்பி கொண்டு இருந்தேன். தங்கள் தத்துவ நிலை  மூன்று வகுப்புகள் கடந்த பிறகே எனக்கு எதுவும் தெரியவில்லை என்றும் தெரிந்தவையெல்லாம் உதிரி தகவல்கள்,புராணங்கள்   மற்றும் சில மந்திரங்கள் மட்டுமே. சமுத்திரம் போன்ற இந்து மத தத்துவங்கள், உபநிஷத்துக்கள் போன்ற ஞானத்தின் சில துளிகளை உணர முடிந்தது.

இப்படிப்பட்ட முறையான பாடத்தை எந்த பிரச்சார நெடியும் இல்லாமல் கற்று கொண்டு வரும் வாய்ப்பிற்கு நன்றி.

அன்புடன்

ஸ்ரீதரன்
பெங்களூர்

அன்புள்ள ஶ்ரீதரன்

இன்றைய சூழலில் உள்ள உண்மையான சிக்கல் இது.

நமக்கு மதம் இரண்டு வழிகளில் கற்பிக்கப்பட்டது. ஒன்று, குடும்ப முறையாக. இன்னொன்று குரு முறையாகக் கற்பிக்கப்பட்டது. முதல் வகை எப்போதுமே ஆசாரம், சம்பிரதாயம், பக்தி சார்ந்ததாகவே இருக்கும். அறிவார்ந்த பாதை, ஆன்மிகமான பாதை குரு முறையாகவே கற்பிக்கப்படும். அந்த குரு மரபு சென்ற சில நூறாண்டுகளாகவே பழுதடைந்துவிட்டிருக்கிறது. குரு முறை என இன்று சொல்லப்படுவது பெரும்பாலும் மடங்கள் சார்ந்ததாக உள்ளது. அது இன்னொரு பெரிய குடும்ப மரபுதான். அங்கும் ஆசாரம், சம்பிரதாயம் மட்டுமே உள்ளது. மெய்யியல் கல்வி என்பது முற்றிலும் இல்லாமலாகிவிட்டது.

குரு முறைமை என்பது சில தன்மைகள் கொண்டதாக இருக்கவேண்டும்

அ.தன்னை நவீனப்படுத்திக் கொண்டே இருந்தாகவேண்டும். ஓர் அமைப்பாகத் தேங்கிவிடலாகாது. சமகால வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருக்கவேண்டும். பழங்காலத்தில் உறைவதாக இருக்கலாகாது.

ஆ. குரு என்பவர் மாணவனின் பயணத்தில் அக்கறை கொண்டவராக இருக்கவேண்டும். தன்னை முன்னிலைப்படுத்துபவராக இருக்கலாகாது

இ. எந்த ஞானவழியாக இருந்தாலும் முழுமையான சுதந்திரம் அதில் இருக்கவேண்டும். மாணவன் தனக்குரிய வழியை தேர்வுசெய்ய வாய்ப்பிருக்கவேண்டும். பிறப்பால் அல்லது சூழலால் எதிலும் கட்டுண்டிருக்கக் கூடாது

அத்தகைய ஒரு வாய்ப்பை உருவாக்கவே முயல்கிறோம்

 

ஜெ

 

முந்தைய கட்டுரைஜெர்மானிய தத்துவ அறிமுகம்
அடுத்த கட்டுரையோகம், பயிற்சி, ஒரு கேள்வி