யோகம், பயிற்சி, ஒரு கேள்வி

அன்புள்ள ஜெ,

நீங்கள் தொடர்ந்து இணைய வகுப்புகளை புறக்கணித்து வருகிறீர்கள். அது பொது வாசகர்களுக்கு மட்டும் அல்ல என நினைக்கிறேன். நான் உங்களை 14 ஆண்டுகளாக தொடரும் வாசகன். வெண்முரசு நாள்தோறும் வாசித்தவன் , வாசிப்பவன் . உங்கள் படைப்புலகை , உங்களை சார்ந்தது என் சிந்தனைமுறை.

நான் இரண்டு ஆண்டுகளாக நம் குருஜி சௌந்தர்யிடம் இணைய வகுப்பில் தொடர்ந்து யோகா கற்று கொள்கிறேன். யோகா ஏற்படுத்திய மாற்றங்களை என்னால் பக்கம் பக்கமாக விவரிக்க முடியும் . உடல்நலனை மட்டும் சொல்லவில்லை. புத்தம்புதியதாக ஒரு மொழி கற்று கொள்கிறேன். நீச்சல் அடிப்படையில் இருந்து பயின்று இருக்கிறேன். இரண்டு கதைகள் எழுதி பார்த்து உள்ளேன். வெண்முரசு நான்காவது முறை 15 நாளில் முழுவதும் வாசித்து குறிப்பு எடுத்து உள்ளேன். யோகம் கூடவே யோகம் சார்ந்த நூல்களை படித்து வருகிறேன். 100 பக்கங்களில் படித்து உணர்வதை ஒரு ஆசிரியர் நேரில் ஒரு நொடியில் உணர்த்தி விட முடியும் நீங்கள் சொல்வதாக எடுத்துக் கொள்கிறேன்.

ஆனால் தொடர்ந்து வாசிப்பவனாக, நுண்ணுணர்வு கொண்டவனாக இந்த இணைய கல்வியில் நான் இழப்பது என்ன ? எதுவுமே கற்காமல் இருப்பதை விட இது கொஞ்சம் மேல் என்று நினைத்து இருந்தேன். தங்கள் பதில் நான் மேலும் கற்க விரும்பும் சிலவற்றை நான் மறு பரிசீலனை செய்ய உதவும்.

நன்றி ஜெ,

பிரதீப்.

 அன்புள்ள பிரதீப்,

நான் சொல்வதற்கும் நீங்கள் சொல்வதற்கும் இடையே அடிப்படையான வேறுபாடு உள்ளது. உங்கள் மனநிலையை நீங்கள் முன்வைக்கிறீர்கள்.

நான் ஒரு நேரடிக்கல்வியின் சிறப்பு என சொல்வன மூன்று

  • ஒரு கல்விக்காக தன்னை செலுத்திக்கொள்ளும் மனநிலை. அதன்பொருட்டு செல்லும் பயணம். அன்றாட வாழ்க்கையின் சுழற்சியில் இருந்து அதற்காக கொஞ்சம் விடுவித்துக்கொள்ளுதல். 
  • கல்வியை இணையத்தில் நாம் செய்யும அன்றாடச்சுழற்சியின் பகுதியாக ஆக்காமலிருத்தல். அதற்குரிய தனி உளநிலையைப் பேணுதல்.
  • ஓர் இயற்கைச்சூழலில் , ஒத்த மனநிலை கொண்டவர்களுடன் இணைந்திருத்தல்.
  • ஓர் ஆசிரியரை தனிப்பட்ட முறையில் அணுகியறிதல்

ஒருவர் இவ்வாறு ஓர் ஆசிரியரை அறிந்து, அவருடன் தொடர்பிலும் இருக்கையில் இணையம் வழியாக அவ்வப்போது அவர் ஆலோசனைப்படி யோகம் பயில்வதில் பிழையில்லை. அது யோகப்பயிற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்ய உதவும்

ஆனால் இணையம் வழியாக மட்டுமே ஆசிரியரை அறிந்திருக்கிறீர்கள் என்றால் அதில் பெரிய இழப்பு உள்ளது. ஆசிரியரை நேரில் அறிதல் என்பது ஒரு படி மேலானது. இணையுள்ளங்களின் சுற்றம் என்பது மிகப்பெரிய ஊக்கவிழை. நீங்கள் இன்று இழந்திருப்பது அவ்விரண்டையும்தான்.அதை இழப்பாக நீங்கள் உணரவில்லை என்றால் எவர் உங்களிடம் அந்த இழப்பை புரியவைக்க முடியும்?

ஜெ 

முந்தைய கட்டுரைஇன்றைய குரு முறைமை
அடுத்த கட்டுரைஇரு நிகழ்வுகள், கடிதம்