அன்புள்ள ஆசிரியருக்கு,
இந்த செப்டம்பர் 27 வந்தால் அமலன் அண்ணாவைச் சந்தித்து 1000 நாட்கள் முடிகின்றன. அதற்கு முன்பே அவரது புத்தகங்கள், கட்டுரைகள் எல்லாம் படித்துவிட்டு கடிதம் மூலம் அறிமுகம் ஆகி இருந்தாலும் ஆசிரியரை நேரில் சந்திப்பது தனி அனுபவம் தான். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவரிடம் தியானம் பயிலும் மாணவன் என்ற முறையில் அமலன் அண்ணா குறித்து ஜூலை 5,6,7 தேதிகளில் வகுப்பில் கலந்துகொள்ளவிருக்கும் மாணவர்களிடம் சில அவதானங்களைப் பகிரலாம் என்று தோன்றியது. இவை, வகுப்பின் கடைசி பெஞ்ச் மாணவன் தன் இனிய ஆசிரியர் குறித்து பகிரும் பார்வை மட்டுமே.
அவரை அனுகும்போது முதலாவதாக நீங்கள் எதிர்கொள்வது அமலன் எனும் யதார்த்தவாதி, லௌகீகன். நான் கவிதை எழுதி இருக்கிறேன் என்றோ தத்துவம் படிக்கிறேன் என்றோ அவரிடம் சென்று சொல்வீர்களானால் அவரது அடுத்த சிந்தனை பிழைப்புக்கு இவன் என்ன செய்கிறான் என்பதாகத் தான் இருக்கும்.
இந்த முதல் நிலையில் அவர் மிகத் துள்ளியமான perfectionist. ஒரு செயலை மிகச் சரியாக, கச்சிதமாக செய்துமுடிப்பார். அப்படி பிறர் இல்லாதபோது கடிந்துகொள்வார். என் சோம்பல்கள் மற்றும் சிறுமைகள் காரணமாக அவரிடம் ஏராளமாக வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கிறேன். இரும்பு உலக்கையைப் போல் மிக மிக நேரானவர்; உலகியலின் நெளிவு சுளிவுகள் அறியாதவர். சூடும் சுவையுமான சிறிதளவு உணவு, தூய்மையான இருப்பிடம், உடன் மனதிற்கினிய மனிதர்கள் என்று நிறைவுகொள்பவர்.
இன்னும் கொஞ்சம் கூர்மையாக அனுகுபவர்கள் சதா இயங்கிக்கொண்டே இருக்கும் கவிதையின் ஆக்கத்தைக் காண்பார்கள். எப்போதும் அவருள் ஒரு கவிதை உருக்கொண்டபடியே இருக்கும். அது முழுமைபெறும் நிகழ்வை அருகில் இருந்து பார்ப்பது பரவச அனுபவம் தான். ஒன்று கவிதை எழுதிக்கொண்டு இருப்பார், அல்லது இரண்டு கவிதைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில் இருப்பார். அது ஒரு இடைவெளி மட்டும் தான் என்பதை அவரே அறியமாட்டார்; அடுத்து ஒரு கவிதை நிகழும் என்பதை அவரே எதிர்பார்க்கமாட்டார்.
இந்தப் படைப்பூக்க நிலை அவரது ஆளுமையின் முக்கியமான இரண்டாவது கூறு. அவரது எழுத்தைப் பின்தொடர்வது எத்தனை அலாதியான அனுபவமோ அதற்கு இணையானது அவரது பார்வையைப் பின்தொடர்வது. ஏதோ நாமே மலையுச்சியில் நின்றுகொண்டு குதிக்கவோ பறக்கவோ தயாராவது போன்ற தருணங்கள் அவை.
அவரது எழுத்தை வாசிப்பதும் கவி அமலனைப் பின் தொடர்வதும் ஆசிரியர் அமலனைப் புரிந்துகொள்ள இன்றியமையாதது.
அவரது மூன்றாவது ஆளுமை ஆசிரியத்துவம். குரு–சிஷ்ய உறவை அவர் அங்கீகரிப்பதில்லை. ஒரு முறை அவரது நாவல்களில் வரும் ஆசிரிய மாணவ உறவுகள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். புத்தர் குறித்த நாவலில் மாணவர்களிடம் அன்பும் நன்றியும் இருக்கிறதே அன்றி குரு மீதான காதல் இல்லை; ஆனால் ஔவிய நெஞ்சம் நாவலில் ஏசுவுக்கும் அவரது சீடர்களுக்கும் இடையே அழகிய குரு–சிஷ்ய உறவு இருக்கிறது என்றேன். சட்டென அவர் சொன்னார், “ஆமாப்பா.. ஏசுவோட இருந்தவங்க எல்லாம் மக்குங்க தான”.
அவரது ஆசிரியத்துவம் பகிர்தலுக்கான தீவிர விழைவில் இருந்து எழுகிறது. தர்காவில் தியானம் முடித்து வெளியே வரும்போது எதிரில் வரும் பூனையிடம் கூட தன் அடைவுகளை அவர் பகிர விழைகிறாரோ என்று தோன்றும். அவர் அளிப்பதில் உங்கள் கொள்ளளவுக்கு ஏற்ப பெற்றுக்கொள்ளலாம். தியானத்தின் பிறகான பொழுதுகளே பெரும்பாலும் அவரது நாட்களை நிறைத்திருக்கும். தியானத்தைச் சுற்றியே அவரது அன்றாடம் அமைந்திருக்கும்.
இந்த ஆசிரியர் அமலன், கவி அமலனையும் லௌகீக அமலனையும் உருத்திரித்து விடுகிறார், பல சமயங்களில். இப்படி எல்லாம் துள்ளியமாக அவரை வகைப்படுத்திவிட முடியாது தான். இத்தகைய வகைப்படுத்தல்களுக்கு அவர் முற்றிலும் எதிரானவரும் கூட.
உங்கள் மடமைகளை, பிழைபுரிதல்களை, முன் தீர்மானங்களை தாராளமாக அவர்முன் வைக்கலாம். அவர் அதை உடைக்கும்போது கற்றுக்கொள்ளுங்கள். பெரும்பாலும் ஒரு முறைக்கு மேல் உங்களை மறுக்கமாட்டார். அவர் உங்கள் மீது தனிப்பட்ட முறையில் அன்பு வைத்தால் மட்டுமே மீண்டும் மீண்டும் புரிய வைக்க முயல்வார்.
தியான வகுப்புக்கு வாருங்கள். மீண்டும் மீண்டும் வாருங்கள். அந்த வற்றாத கேணியில் இருந்து உங்கள் தாகத்துக்கு ஏற்ப அள்ளிப் பருகிக்கொள்ளுங்கள். வகுப்பில் சந்திப்போம்.
– பன்னீர் செல்வம்