புருஷன், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

சில வருடங்கள் கழித்து இன்று விஷ்ணுபுரம் நாவில் ஒரு அத்யாத்தை மீண்டும் படித்தேன். பிரம்மாண்டமாக படுத்திருக்கும் மூப்பன் அல்லது விஷ்ணு பற்றிய சிறு வரிவந்தது. மனம் பிரமிக்க நீங்கள் சென்ற தத்துவ முகாவில் அதிகாலையில் ஆற்றிய புருசன் உரை நினைவுக்கு வந்தது.

ஆதி மனிதர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன் நிலத்தில் வடித்த பாறைச்செதுக்கு மனிதனில் துவங்கி மூப்பன் வழியாக விஷ்ணுவரை ஒரு தொடர்ச்சியை உடல் சிலிர்க்க உணரமுடிந்தது. என் வாசிப்பின் மிக துவக்க காலத்தில் விஷ்ணுபுரத்தை படித்தேன். பல பகுதிகளை என்னால் உள்வாங்க முடியவில்லை. ஆனால் இன்று படித்த முதல் சில வரிகளே பிரம்மாண்டமாக விரியத்துவங்கிவிட்டன. இனி விஷ்ணுபுரம் எனக்கு திறந்துகொள்ளும்

நீங்கள் எடுக்கும் தத்துவ வகுப்புகளும் கலந்துகொண்ட பிற வகுப்புகளும்  தற்போது என் வாசிப்புகளும் வாழ்விலும் சிறு சிறு நுண் அலகுகளில் மிக விரிவான திறப்புகளை அளிக்கின்றன. சந்திரசேகர் உதவியுடன் நீங்கள் ஆற்றிய புருஷன் உரையை தொகுத்து எழுதினேன்  

 எனினும் விஷ்ணுபுரத்தில் அடைந்த இந்த திறப்பு மிக முக்கியமானது என நினைக்கிறேன். ஏனென்றால் இது நான் உணர்ந்தது. தத்துவமும் இலக்கியமும் ஏன் ஒன்றையொன்று நிரப்புகின்றன என இன்று புரிந்துகொண்டேன்

ஒவ்வொரு தத்துவ வகுப்பு முடிந்த பிறகும் ஓரிரு மாதங்கள் அதுசார்ந்த குறிப்புகளை தொகுப்பதிலும், வாசிப்பதிலும், அது சார்ந்த மொழிபெயர்ப்பு ஒன்று செய்வதிலும் செல்லும். இந்த வகுப்பிற்கு பிறகு வகுப்பில் கலந்துகொண்ட நண்பர்கள் பலர் மொழிபெயர்க்க முன்வந்து துவங்கியுள்ளனர். தமிழில் அதிகம் மொழிபெயர்க்கப்படாத பகுதி இதுதத்துவம் மற்றும் கலை சார்ந்தவை. இதற்கு முன் வெளிவந்த சில நூல்களிலும் அதன் மொழிச்சிக்கலால் உள் நுழையமுடையாத தடை இருக்கும்.

இக்கட்டுரைகள் அவ்வாறு அல்லாத தெளிவாக நடையில் அமையும். நண்பர்கள் அமைந்துள்ளனர். சென்ற முறை சந்தித்தபோது மொழிபெயர்ப்பில் அவர்கள் அடையக்கூடிய திறப்புகளை பற்றியும் ஆழ்ந்து அக்கட்டுரையை படிக்கமுயல்வது பற்றியும் வியந்து சொல்லிக்கொண்டிருந்தனர். மகிழ்வாக இருந்தது

நன்றி,

தாமரைக்கண்ணன், அவினாசி

முந்தைய கட்டுரைமரபுக்கலையும் நவீனக்கலையும்
அடுத்த கட்டுரைபுருஷனும் விஷ்ணுவும்