சுவையின் பாதை

அன்புள்ள ஜெ

முழுமையறிவு நிகழ்வுகளில் கலந்துகொண்டேன். எனக்கு அந்த வகுப்பு ஆழ்ந்த அனுபவத்தை அளித்தது. என் 35 வயது வரை வாழ்க்கையில் எதையுமே நானாகவே விரும்பி கற்றுக்கொண்டதே இல்லை என்பதுதான் உண்மை. கட்டாயத்துக்காகவே எல்லாவற்றையும் படித்தேன். இப்போதுகூட வேலைக்காகப் எபடித்துக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. படிப்பது என்றாலே அதில் ஒரு தேர்வு இருக்கும் என்ற  எண்ணத்தால்தான். எனக்காக எதையுமே படித்ததில்லை. அவ்வப்போது கதைகள் வாசித்தால்கூட நேரத்தை வீணடிக்கிறேன் என்ற எண்ணம் வந்துவிடும்.

இன்றைக்கு படிக்கும்போது இருக்கும் சிக்கலான மனநிலை என்னவென்றால், நான் எனக்கு ஒன்றை தெரிந்துகொள்வதற்காகப் படிக்கையில் அது நோக்கம் இல்லாத படிப்பாக தோன்றுகிறது. தேர்வுக்கு என்னவேண்டும், எதை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் வந்துகொண்டே இருக்கிறது. அது இல்லாமல் படிக்கவே முடிவதில்லை. ஆனால் தேர்வுக்காகப் படித்தால் எதையுமே முழுமையாகப் படிக்க முடிவதில்லை. தேர்வு மட்டுமே முக்கியம். தேர்வுக்குப்பிறகு படித்த எல்லாமே முக்கியம் இல்லாமலாகிவிடுகிறது. அத்துடன் தேர்வு என்றாலே பதற்றமும் வருகிறது. தேர்வு நெருங்க நெருங்கத்தான் படிக்க முடிகிறது.

இந்த மனநிலையை எப்படிச் சமாளிப்பது?

ஜி

 

அன்புள்ள ஜி

உங்கள் மனநிலையில்தான் இங்கே பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். ஒரு ரயிலில் எதையாவது படியுங்கள், ‘தேர்வுக்கா?” என்று கேட்பார்கள்.அது ஒரு கட்டுரை நூல் என்றால் ’இல்லை, தெரிந்துகொள்ள படிக்கிறேன்’ என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.

படிப்பதற்குரிய சரியான வழி ஒன்றே. நம் தனிப்பட்ட தேடலுக்காக வாசிப்பது. தனிப்பட்ட தேடல்தான் நம் சுவையாக மாறுகிறது. என் கேள்விகள் தத்துவம், தென்னக வரலாறு சார்ந்தவை. ஆகவே அவைதான் எனக்கு சுவைக்கின்றன. நம் உள்ளம் எதில் ஈடுபடுகிறதோ அதில்தான் நம் ஆர்வம் குவிகிறது. நம் ஆர்வமே பசி. பசிதான் சுவையின் அடிப்படை

வாசிப்பதென்பது. மாடு மேய்வதுபோல அமைதல்வேண்டும். முதலில் சுவையான தளிர்களை  மாடு மேய்ந்து செல்லும். அடுத்த சுற்றில் கொஞ்சம் சுவை குறைவான, கடினமான பகுதிகளை மேயும். அதுவே வாசிப்பு.

தேர்வு தேவையில்லையா? தேவை, நீங்களே உங்களுக்கு வைத்துக்கொள்ளும் தேர்வாக அது இருக்கட்டும். அது நீங்கள் எவ்வளவு புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்றும் எவை உங்களுக்குள் தங்கியிருக்கின்றன என்றும் தெரியச்செய்யும். போட்டி தேவையில்லை. போட்டியின் விளைவு என்பது ஒரு கட்டத்தில் வெறும் ஆணவமாக ஆகிவிடும்.

நான் எனக்கே தேர்வுகள் வைப்பதுண்டு. முழுக்கட்டுரையையும் நினைவில் இருந்தே எழுதிப்பார்ப்பது ஒரு தேர்வு. வாசித்தவற்றைப் பற்றி கேள்விகளை உருவாக்கி பதில் அளியுங்கள். அரைமணிநேரம் பேசி பதிவுசெய்து பாருங்கள். பத்து பக்கம் நினைவில் இருந்து எழுதி ஒப்பிட்டுப்பாருங்கள்

தேர்வுக்காகப் படிப்பதில் இன்பம் இல்லை, வெற்றியின்போது மட்டுமே இன்பம் உள்ளது. நல்ல வாசிப்பில் வாசிப்பெனும் செயலே இன்பம் அளிப்பதாக அமையும்.

ஜெ

முந்தைய கட்டுரைஇஸ்லாமிய அறிமுகம், கடிதம்
அடுத்த கட்டுரைநம் மனம், நாம்