இஸ்லாமிய அறிமுகம், கடிதம்

அன்புள்ள ஜெ,

கடந்த ஜூலை 12ஆம் தேதி  நிகழ்ந்தஇஸ்லாமிய மெய்யியல்அறிமுகப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றது என்னுள் சிறு செயலூக்கத்தை  மலர்த்தியது. மூன்று பேருந்துகள் மாறி, மலைச்சிகரம் ஏறி, வரப்பில் நடந்து, நித்திய வனம் நுழைகையில் இதுவரை உணராத அகயெழுச்சி தொற்றிக்கொண்டது. முதல்நாள் மாலை, நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாகவே மழையும், வெயிலும், காற்றும், குளிரும் என நான்கு பருவமும் அங்கு அழகுற அமைந்ததில் அனைவரது உள்ளமும் அந்நிகழ்வுக்குத் தயாரானது

S.M.A. காதர் அப்பா அவர்களின் தெய்வீக பாடலுடன் நிஷாமன்சூர் அண்ணா வகுப்பை துவங்கினார். இஸ்லாம் என்றால் என்ன? என்ற கேள்விக்குஅடிபணிதல்என்று பொருள் என்கிற உரை மூலம் வகுப்பைத் துவங்கினார். அந்த முதலசைவே தத்துவ வகுப்புக்கான கவனக்குவிப்பைத் தந்துவிட்டது. இஸ்லாம் ஐந்து தூண்களால் கட்டப்பட்டது, அதற்கான பொருள் என்ன, அதன் அகமியம் என்ன, என்று ஒவ்வொன்றாக மிக எளிய மொழியில் அவைகளை விளக்கினார்

இஸ்லாம் தோன்றிய கடும் பாலைநிலம் நபிகளாரின் அற்புதத்தாலும், அவர் அந்த மார்க்கத்தை மக்களிடம் பரவலாக்கியதாலும் மெல்லமெல்ல சோலை நிலமென மாறியதை நிஷா மன்சூர் அண்ணா விளக்கினார். நபிகளாரும் அவரது சகாக்களும் தங்கள் மார்க்கத்திற்காக எவ்வளவு உண்மையாகவும் பரிசுத்தமாகவும் வாழ்க்கையை வாழ்ந்தனர் என்றும், நபிகளாரது மரணத்திற்கு பிறகு அடுத்தடுத்து தோன்றிய கலீபாக்களின் (மன்னர்ஸ்திரமான ஆட்சியால் இஸ்லாம் எவ்வாறு வெவ்வேறு நிலங்களுக்குப் பயணப்பட்டு உறுதியான மார்க்கமாகவும் வாழ்க்கை முறையாகவும் அமைந்தது என வரலாற்று ரீதியாக எடுத்துரைத்தார்.

சூஃபிகளின் பங்களிப்பு இஸ்லாமுக்கு மாபெரும் பலம் சேர்த்ததுதங்களது ஆளுமையாளும், வசீகரமான மொழியாலும் வெவ்வேறு சமயங்களில் வாழ்ந்த கவிஞர்களும் அறிஞர்களும் இஸ்லாமை கொண்டாடினர். தங்கள் படைப்புகளில் இஸ்லாத்தின் இறைத்தன்மையை நிறைத்தனர். தன் சமயம் குறித்தே இங்கு பரிச்சயம் இல்லாத சூழலில், இஸ்லாம் குறித்து நாங்கள் இதுவரை ஆழமாக எதையும் அறிந்திருக்கவில்லை. அவ்வாறான சூழ்நிலையில், ‘அஸ்ஸலாம் அலைக்கும்என்ற முகமனுக்கான விளக்கமே எனக்கு வியப்பாகவும் ஆத்மார்த்தமாகவும் இருப்பதை உணர முடிந்தது.

மறுநாள் வகுப்பில், தொழுகையின் அகமியங்களும், அதன் உடல் மொழியும் பிரபஞ்சத்தோடு எப்படி உரையாடுகிறது என்கிற விளக்கங்கள் வழிபடுதலின் ஆழ்நோக்கத்தைத் துலக்கப்படுத்தியது. கண்களை மூடி கூட்டுப் பிரார்த்தனையாக  துஆ செய்து இறைத்துதியை உரக்க பாடியது வாழ்விலென்றும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது

சிறுவயதில் காம்பவுண்டு குடியிருப்பில் கடைசி வீட்டில் குடியிருந்த நண்பன் ஷேக்கின் அம்மாஉடல் முடியாத என்னை தனது மடியில் கிடத்தி முணுமுணுப்புடன் துஆ செய்த  தருணங்களும், என்னையும் என் தங்கையையும் தெற்கு வாசல் பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று மோதினார் முன் மந்திரித்து தண்ணீர் தெளித்து தாயத்து கட்டி நோய் தீர்த்த தருணங்களும் மனதின் ஆழத்திலிருந்து நீர்வட்டமென நினைவெழுந்தது. இன்னும் வெவ்வேறு சமயங்களின் மெய்யியலையும், ஆத்ம தரிசனத்தையும் அகத்தேடல் உள்ளவர்களுக்கு அளிக்கும் இடமாக நிச்சயம் நித்திய வனம் திகழும்

மலையுச்சிகளே தன்னளவில் தத்துவ உருவங்கள் என்றிருக்கையில், வெள்ளிமலை நித்திய வனத்துக்குள் நிகழ்ந்த இஸ்லாமிய மெய்யியல் அறிமுக வகுப்பு எனக்குள் நிறைய திறவுகளுக்கான சிறுதெளிவைத் அளித்திருக்கிறது. இத்தகைய நல்லனுபவத்தை எல்லோர்க்கும் பகிரவுழைக்கும் முன்னத்தி மனிதர்கள் அனைவருடனும் இறையருள் துணைவரும்

எல்லாம் செயல் கூடும்!

நன்றிகளுடன்,

அருண் 

குக்கூ குழந்தைகள் வெளி.

முந்தைய கட்டுரைவேதங்களை எல்லாரும் கற்கமுடியுமா?
அடுத்த கட்டுரைசுவையின் பாதை