அன்புள்ள ஜெ
நான் எனது 18 ஆவது வயதில் முதல்முறையாக திருப்பதி வெங்கடேசப்பெருமாளைப் பார்க்கச் சென்றேன். மொத்தமும் தங்கத்தாலான அந்த அலங்காரத்தைக் கண்டேன். அன்றைக்கு எனக்கு அந்த அலங்காரம் எந்த வகையிலும் அழகானதாகத் தெரியவில்லை. ஓர் ஒவ்வாமை உணர்வுதான் உருவானது. பிறகு அந்த ஒவ்வாமையை ஒரு கருத்தாக ஆக்கிக்கொண்டேன்.
மனிதனின் அழகுணர்ச்சி என்பது செல்வம் மீதான ஆசையின் இன்னொரு வடிவம். தெய்வத்தை அவன் அந்த ஆசையின் அடிப்படையில் உருவகித்துக்கொள்கிறான். கடவுளை பெரும் பணமாக எண்ணிக்கொள்வதுதான் அந்த அலங்காரத்தின் அர்த்தம். அதாவது பெரும்பணமே கடவுள் என நினைத்துக்கொள்வது. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? தங்கத்தை கடவுள் என நினைத்தால் திருப்பதி பெருமாளை விட பெரிய கடவுள் ரிசர்வ் வங்கியின் வைப்பறை தானே?
ஆர். ராஜகோபாலன் ஆராவமுதன்
அன்புள்ள ராஜகோபாலன்
தங்கம் மனிதனுக்குப் பெரும் செல்வமாக ஏன் தோன்றுகிறது? ஏன் வைரம் போன்ற அருமணிகள் செல்வம் ஆக தோன்றுகின்றன? அவை அழகானவை என்ன்னும் எண்ணம் உருவாகி, அவற்றின் மேல் மோகம் பெருகி, அப்பொருட்களுக்கு மதிப்பு உருவானபின்னரே அவை எல்லாம் செல்வம் ஆயின. வேறு பொருட்களை வாங்கும் பணம் ஆக மாறின. அதிகாரம் ஆக பொருள்கொண்டன.
தங்கம் மற்றும் மணிகளின் மீதான மனிதனின் ஆர்வத்தின் தொடக்கம் மனிதனின் அழகுணர்ச்சியில்தான் உள்ளது. அழகுதான் அவற்றை விரும்ப வைக்கிறது. விருப்பம்தான் அவற்றுக்கு மதிப்பூட்டி செல்வமாக ஆக்குகிறது.
அந்த அழகுணர்ச்சியின் ஆதாரம் என்ன? அது மனிதனுக்குள் உறையும் அடிப்படையான விலங்குணர்வின் ரசனைதான். பொன்னையும் மணிகளையும் எப்படியெல்லாம் மனிதன் கவிதைகளில் வர்ணித்துள்ளான் என்று ஒட்டுமொத்தமாகப் பாருங்கள். மலர்களுடன், கனிகளுடன், தளிர்களுடன், குழந்தைகளுடன் பெண்களுடன், காலையுடன், அந்தியுடன், நெருப்புடன்… அதாவது எவையெல்லாம் மனிதனுக்கு இயல்பாகவே பிடித்திருக்கின்றவோ அவற்றின் வடிவமாகவே தங்கமும் மணிகளும் உள்ளன. தங்கமும் மணிகளும் இயற்கையில் மனிதனுக்கு பிடித்த அனைத்திற்கும் உருவகமாக ஆனதனால்தான் அவை அழகாக தோன்ற ஆரம்பித்தன. அழகு அவற்றைச் செல்வமாக ஆக்கியது.
தங்கமும் மணிகளும் கொண்டுள்ளது குறியீட்டு அர்த்தம்தான். இப்புவியிலுள்ள அழகான, மதிப்பு மிக்க அனைத்துக்கும் அவை குறியீடாயின. காதலியை, குழந்தையை பொன்னே என்று அழைக்கிறான் மனிதன். பொன்னான பொழுதுகள், பொன்னான எண்ணங்கள், பொன்னான மதிப்பீடுகள் எல்லாம் அப்படித்தான் உருவாகின்றன. அப்படித்தான் ஒரு கட்டத்தில் இறைவனை, பிரபஞ்ச சாரம் என அவன் உணரும் ஒன்றை பொன் என சொல்ல ஆரம்பித்தான். ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே’ என்று காதல்மனைவியைச் சொல்லும் அதே மனநிலையின் இன்னொரு உச்சம்தான் “மாசறு பொன்னே வருக” என்று தெய்வத்தைப் பாடுவதும்.
இப்படிச் சொல்லலாம். இயற்கையின் அழகை பொன் என உருவகிக்கிறான். பொன்னை இயற்கையின் அழகுக்கு அடையாளமாக ஆக்குகிறான். அதன்பின் அதையே இயற்கையின் சாரம் என தான் உணர்வதற்கு அடையாளமாக ஆக்குகிறான். மனிதன் ஏன் இப்படிச் செய்கிறான் என்றால் இதுதான் மனிதனின் சாத்தியக்கூறு. இதுவே மனிதனின் எல்லை. இவ்வளவுதான் அவனால் இயலும். அவன் இயற்கையிலுள்ள அழகை இயற்கையின் மிகச்சிறந்த வெளிப்பாடாக நினைக்கிறான். அந்த இயற்கையழகை ஒரு பொருளாக ஆக்கினால்தான் அது உருவகமாக ஆகும். அந்தப்பொருள்தான் பொன். அந்த உருவகத்தைக்கொண்டுதான் அவனால் அதன்பின் இயற்கையின் அழகையும் சாராம்சத்தையும் விவரிக்கமுடியும். உருவகம் இல்லாமல் பேசவோ, சிந்திக்கவோ மனிதனால் இயலாது.
பொன்னால் ஆன அலங்காரத்தை நீங்கள் வெறும் செல்வமாகப் பார்க்கிறீர்கள் என்றால் அது உங்கள் பிரச்சினை. நான் அப்படிப் பார்ப்பதில்லை. நான் 1982ல் முதலில் திருப்பதிப் பெருமாளை பார்த்தபோது இலையும் கிளையும் தெரியாமல் பூத்துநின்றிருந்த வேங்கைமரம் போல் இருப்பதாகவே நினைத்தேன். பின்னர் ஒருமுறை நினைவுகூர்ந்தபோது காலையின் பொன்னொளிகொண்ட முகில் என நினைத்தேன். அப்படித்தான் அத்தனை பக்திக்கவிஞர்களும் பார்த்திருக்கிறார்கள். அண்மையில் ஓர் உரையாடலில் ஒரு விவசாயி விளைந்து பொலிந்து கிடந்த தன் வயல் பற்றிப் பேசும்போது சொன்னார். “அப்டியே திருப்பதி பெருமாளு நிக்கிறமாதிரி தெரிஞ்சுதுங்கய்யா…”.
ஜெ