இஸ்லாமிய ஞானம்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

திருவினும்  திருவாய் என்னும் சீறாப்புராணப்  பாடலுடன் இஸ்லாமிய மெய்யியல் வகுப்புத் தொடங்கியது.  SMA காதிரின் குரலில் அமைந்த இப்பாடல் தொடக்கத்திலேயே இனிமையை சேர்த்தது. நம் தற்போதைய சூழலில் பிற சமயங்கள் குறித்த கடும் முன்முடிவுகள் வெறுப்புக் கருத்துக்கள் இவையே பரவலாகக் கிடைக்கின்றன. இந்த வகுப்பு குறித்த அறிவிப்பு வந்த போது வந்த அதிருப்தி எதிர்ப்பு கடிதங்கள் பதிவுகளே இதற்கு சாட்சி (அப்போதே ஆனந்தமாக இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்து விட்டேன்).

இஸ்லாத்தின் பொருள் அடிபணிதல்  அர்ப்பணித்தல் என்று ஆசிரியர் கூறிய போது யாருக்கு எதற்கு அடி பணிய வேண்டும் எதை அர்ப்பணிக்க வேண்டும் என்னும் கேள்வியே முதன்மையாக வந்து நின்றது. அதற்கான பதிலை  நோக்கியதாகவே  முழு வகுப்பும் அமைந்தது. யூதம் மதம் அல்ல அது ஒரு இனம். ஆதம் இப்ராஹிம் தொடங்கி அனைத்து நபிகளும் முஸ்லிம்களே அதில் ஒரு மகுடமாக வருபவர் இறை தூதர் நபிகள் நாயகம் அவர்கள். காபா ஹஜ் யாத்திரை போன்றவற்றின் அகமியம் குறித்தும் அது எவ்வாறு இப்ராஹிம் நபியை அடியொற்றிய கிரியை என்பதையும் ஆசிரியர் விளக்கிய போது சாராம்சமான ஒன்றையும் அதன் புறவய குறியீடுகளையும் நன்றாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

நபிகள் நாயகம் அவர்கள் 63 வயது வரை வாழ்ந்தார்அவருக்கு 13 நரை முடிகள் இருந்தன போன்ற சுவாரசியமான தகவல்களுடன் நபிகளாரின் பிரம்மாண்டமான வாழ்க்கை குறித்தும் அதில் பற்பல நிகழ்வுகள் நபிகள் அதை கையாண்ட விதம் குறித்து கிட்டத்தட்ட வகுப்பு முழுவதுமே பல இடங்களில் கூறினார். சீடர்கள் இல்லை அவருக்கு சஹாபாக்கள் என்னும் தோழர்களே உண்டு எனக் கூறியபோது அவர் சக மனிதர்களை உன்னதமாகவும் சமமாகவும் நடத்தக் கூடிய நோக்கு தெரிந்தது. அது அவர் வாழ்வு முழுவதுமே  வெளிப்படுகிறது. ஹீரா மலைக் குன்றில் ஏற்படும் ஆன்மிக மாற்றமும் அதன் பின்னர் அவரது வாழ்வு முழுவதுமே தன்னலம் அழிந்த நிலையில் பிறர் குறித்த அக்கறையை மட்டுமே வெளிப்படுத்தும் நறுமணமாக மாறிவிடுகிறது (அவர் பெண்கள் நறுமணம் ஆகியவற்றை மிகவும் விரும்பினார். புறக்கணிக்கவில்லை). இஸ்லாத்தில் பிற சமயங்களைப் போன்ற கடும் புலன் ஒறுப்பு துறவறம் இல்லாததைப் புரிந்து கொள்ள முடியும்.

சில மாதங்களுக்கு முன்பு சத் தர்சன் சென்றிருந்த போது அங்கு மெஹராஜ் என்றொரு நபரைப் பார்த்தேன். அவர் பெயர் என்னுள் வித்தியாசமாக ஒலித்தது. அதன் பொருள் என்னவென்று கேட்டேன் அது நபிகள் விண்ணுக்குப்  போவதை குறித்த ஒரு பெயர் என்றார். மெஹர் பாபாவின் பெயரும் இதில் இருந்தே வந்திருக்கலாம். இந்த வகுப்பில் நபிகளாரின் விண்ணேற்றமான மெஹராஜ் பயணம் குறித்தும் அதன் அகமியம் குறித்தும் ஆசிரியர் கூறிய போது அது  ஒரு பெரும் திறப்பாக எனக்கு அமைந்தது. சட்டென ஒரு கேள்விக்கான விடை துலங்கி வந்தது. அது ஒரு zen koan மிஸ்டிசத்தின்(mysticism) உச்சமான நிகழ்வு என்று மட்டுமே கூற முடியும்.

சூஃபிசத்தின் அகமியங்கள் குறித்து அவர் வகுப்பில் கூறியவை ஒரு குருவிடம் இருந்து பல ஆண்டுகள் பணிந்து கற்க வேண்டியவை அதன் சிறு துளி ஒன்றை திரை விலக்கிக் காட்டினார். நேரடி வாசிப்பின் வழியாகக் கிடைக்கக் கூடியவை இருக்கின்றன. அத்துடன் நிறைவடைவோருக்கு அது போதுமானது. ஆனால் மனித அகம் போதாமையினால் தவிக்கும் இயல்பும் கொண்டது. மறைமுக வாசிப்பின் வழியாக அது புதிய திறப்புக்களை, தொடர்ந்து ஞானியரின்  நிரை வழியாக அளித்த வண்ணம் உள்ளதுசூஃபிசம்  ஒரு வடியும் அலை. இந்த ஒரு வரியில் அதன் மிஸ்டிக் தன்மை முழுவதும் அடங்கி விடுகிறது. பஃருத்திதீன் அத்தார் , அன்னை ராபியா  லைலா மஜ்னு முதல் சூஃபிசத்தின் உச்சமாக கருதப்படக்கூடிய ரூமி மௌலானாசம்சு தப்ரீஸ்  போன்ற ஞானியரின் பெரும் நிரை எவ்வாறு இந்திய சூஃபி மரபுடன் இணைந்து அது தமிழ் பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி நம் மானுடம் அடையக்கூடிய உச்சபட்ச சாத்தியங்களில் ஒன்றாக மாறியது என்பது குறித்த சித்திரம் பிரபஞ்சம் அளவுக்கே பிரம்மாண்டமானது. சூஃபிசத்தில்  கதைகள் முக்கியமானவை உண்மைக்கு அணுக்கமானவை ஆசிரியர் மன்சூர் அவர்கள் கதைகளின் வழியாகவே ஒரு மாபெரும் பயணத்தை இந்த வகுப்பில் நிகழ்த்தினார்.

நாகூர் ஆண்டவர் ஷாகுல் ஹமீது ஆண்டகை குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பா (அவரது அடக்கத்தலம் சென்னையில் யாரும் அறியா ஓர் இடத்தில் என்பது புதிய செய்தி) தக்கலை பீர் முகம்மது அப்பா என இந்த ஞானியரின் ஒளியின் கீழ் நாம் பெற்றிருக்கும் ஆன்மீக இலக்கிய ஆக்கங்களும் அதன் பின்னணி கதைகளும் நம் கை அளவுக்கே தொலைவுள்ள ஒரு உலகத்தை இதுவரை பார்க்காமல் போய்விட்டோமே என்னும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

மூன்று நாட்கள் விடாத மழைப் போல் பொழிந்தார் ஆசிரியர் நிஷா மன்சூர் அவர்கள். இவர் பல தலைமுறைகளாக வரக்கூடிய ஒரு சூஃபி மரபைச் சேர்ந்தவர். சமீப காலத்தில் சூஃபிசத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளையும் அதை எவ்வாறு சூஃபிக்கள்  எதிர் கொண்டனர் என்பது குறித்தும் விரிவாகச் சொன்னார். இன்னும் பல வெடிச்  சிரிப்புக் கதைகளுடனும் சூஃபி தியானத்தின் ஒரு அறிமுக அனுபவத்துடனும் பிறகு முக்கியமாக மன்சூர் அவர்களின் பூட்டனார்  ஹக்கீம் அய்யூப் அவர்களின் தென்றலை போன்ற கோரஸ் பாடல் ஒன்றின் அனுபவமும் வகுப்பை பிறிதொரு நிலைக்கு எடுத்துச் சென்றது. ஊருக்கு வந்த பின்னும் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது அந்தப் பாடல்


//
வாசி ஹாஹா
கரமாத்திகுத்தடி ஹூஹூ
திக்கிர் முழக்கி குத்தடி ஹிஹி//

வெறும் தகவல்களாக மட்டும் நின்று விடாமல் ஒரு சூஃபி அனுபவத்தின் இனிமையுடன்  கூடிய முழுமை வகுப்பு என்றே இதைக் கூறுவேன். பெரும் வாய்ப்பு ஒன்றை தள்ளிப் போடாமல் பயன்படுத்தி கொண்ட நிறைவு எஞ்சியது.

சிவக்குமார் ஹரி

சென்னை

முந்தைய கட்டுரைவருமாறு ஒன்றில்லையேல்…
அடுத்த கட்டுரைவேதங்களை எல்லாரும் கற்கமுடியுமா?