வருமாறு ஒன்றில்லையேல்…

அன்புள்ள ஜெ,

ஜூன் 28-30 ஆகிய நாட்களில் நிகழ்ந்த பிரபந்த வகுப்பின் அனுபவங்களை இவ்வாறு தொகுத்து கொள்கிறேன்

முதன் முதலாக நடைபெற்ற சைவ திருமுறைகள் வகுப்பில் பங்குகொண்ட நினைவுகள் இன்னும் நீங்காமல் இருக்கையிலேயே. பிரபந்தத்திற்கும் பதிவுசெய்திருந்தேன்

திருவரங்கத்தில் பிறந்ததால் ஒவ்வொரு முறை ராஜனை பார்க்க போகும்போதும் பாசுரங்கள் காற்றில் மிதந்து வந்து விழுந்துகொண்டே தான் இருந்தன. வைகுண்ட ஏகாதசியின் போது காணும் அரையர் சேவை ஒரு நிகழ்த்துக் கலை என்ற அளவில் தான் என் பிரபந்த அறிவு இருந்தது

சமீபத்தில்தான் நீலி இதழில் ஜாஜா வின் கட்டுரையை படித்திருந்தேன்சுட்டி . விஷ்ணுபுரம் நிகழ்வுகளிலும், க நா சு உரையாடல் அரங்குகளிலும் கண்டிருக்கிறேன். மணிநீலம் Clubhouse குழுவில் சில வகுப்புகள் மட்டும் பங்கு கொண்டிருந்தேன்.

வகுப்பின் தொடக்கத்திலேயே மால் வழிபாடு குறித்த வரலாற்று பின்புலம், பக்தி இயக்கத்தின் ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை அளித்தார்பின் பிரபந்தத்தை நாதமுனிகள் கண்டறிந்த புராண கதையையும் விவரித்தார்ராமானுஜரையும் வசிஷ்டாத்வைதத்தையும் குறித்து ஒரு முன்னுரையை அளித்தார். பாசுரங்கள் அனைத்தையும் கூடவே இணை கோடாக ஒவ்வொரு ஆழ்வாரினை குறித்த கதைகளையும் கூறினார்.

பிரபந்தம் கவிதை வடிவத்தில் இருப்பதற்கு காரணம் கவிதை தான் ஒரு மொழியை Fresh ஆக வைத்திருக்கும். யானைக்கு பாகன் உணவூட்டும் காட்சி கோவர்த்தன கிரியை உயர்த்தி பிடித்திருக்கும் கண்ணனின் கட்சிக்கு உவமையாக இருப்பது போன்று, என்றுமிருக்கும் உவமைகளை கையாள்வதால். ஒவ்வொரு பாசுரத்தையும் மூன்று நிலைகளில் புரிந்து கொள்ள முடியும்

  1. சொல்லழகு 
  2. நாடகீய தருணங்கள் 
  3. சித்தாந்த பின்புலம்

தத்துவம் மற்றும் சித்தாந்தம் இரண்டிற்குமான வேறுபாடு, தத்துவம் கேள்விகளால் ஆனது (Expansion). சித்தாந்தம் சித்தத்தின் அந்தம் (Condensing).

ஒரு மதம் ஹிதம், புருஷார்த்தம், சித்தாந்தம் என்னும் மூன்று முக்கிய கூறுகளால் ஆனது அதன் மையத்தில் மைய தெய்வம் இருக்கும். வைணவத்தில் அது நாராயணன். அவன் பரிபூரணன். கல்யாண குணங்கள் அனைத்தும் நிரம்ப பெற்றவன். எண்குணத்தான். பின் வடகலை தென்கலையின் வேறுபாடு என்று பாசுரங்களை தொடங்கும் முன் களத்தை முன்னரே செதுக்கிவிட்டார்.

அகங்காரம் மற்றும் மமகாரம் என்னும் மாயையை விளக்கினார். பிரபந்தத்தின் வளர்ச்சியில் வைணவ உரையாசிரியர்கள் ஆற்றிய பெரும் பணியை விளக்கினார்இறைவன் நிர்குண ப்ரம்மம் சகுண ப்ரம்மம் என்று இரு நிலைகளை உடையவன். மச்சம் கூர்மம் முதல் கல்கி வரையிலான அவதாரங்கள் சகுண ப்ரம்ம வடிவங்கள்

இறைவன் ஐந்து நிலைகளாக இருப்பவை 

  1. பரம்வைகுண்ட நிலை (பிரபஞ்ச நீர்)
  2. வியூகம்  – பாற்கடலில் பள்ளிகொண்டு குறைகளை கலைபவனாக இருக்கும் நிலை (பாற்கடல் நீர்)
  3. விபவம்  – பத்து அவதாரங்கள் மற்றும் பிற சிறு அவதாரங்கள் (வெள்ள நீர்)
  4. அந்தர்யாமிஅனைத்திலும் மறந்திருப்பவன் (பூமிக்குள் இருக்கும் நீர் )
  5. அர்ச்சை (குளத்து நீர்)

முக்கியமாக ஒவ்வொரு ஆழ்வாருக்கும் கொடுத்த குறிப்பு பெயர் நினைவில் கொள்ள எதுவாக இருந்தது. உதாரணத்திற்கு திருமங்கை ஆழ்வார் – Retired Maths teacher. பெரியாழ்வார்பிரியமான தகப்பன்

எந்த தத்துவமும் தத்துவம், ஹிதம், புருஷார்த்தம் என்னும் மூன்று அம்சங்களை கொண்டிருக்கும். வைணவத்தில் அது சித்து (உயிர்கள்), அசித்து (உடல்கள் ) ஈஸ்வரன் (படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களை மேற்கொள்பவன்)

செத்ததின் வயிற்றில் சிறியது தோன்றினால் எதை தின்னும் எங்கே இருக்கும் என்ற மதுரகவி ஆழ்வாரின் கேள்வியும் அதற்கு நம்மாழ்வார் அளித்த அதை தின்னும் அங்கேயே இருக்கும் என்னும் பதிலுக்கும் தத்துவ விளக்கத்தை அளித்தார்

பின் சரணாகதி/பரபக்தி மற்றும் ஒன்பான் உறவு குறித்து விளக்கினார். அவை ஒவ்வொரு பாடலிலும் இழையோடும் பாவத்தை புரிந்து கொள்ள உதவியது. சந்தை அல்லது சந்தஸ் என்னும் முறை இத்தனை ஆண்டுகள் எவ்வாறு கடந்து வந்திருக்கிறது என்று விளக்கினார். மாலோலன் வர இயலாததால் ஆளுக்கொரு பாசுரமென்று நாங்களே வாசிக்க கற்றுக்கொண்டோம்

நிறைய புதிய சொற்கள். அழிவில்லா நித்தியமான உவமைகள்(ததைத்துக்கொள்ளுதல் போல), என்றென்றைக்குமான தத்துவ தரிசனங்கள், முழுமுற்றான சரணாகதி என்று ஒவ்வொரு பாசுரத்திற்கும் தனியான வசிப்பனுபவ குறிப்பு எழுதவேண்டும்

வருமாறு ஒன்று இல்லையேல் என்ற வரி தான் நான் வழக்கை முழுதும் சுமந்து கொள்ளவிருக்கும் ஆப்த வாக்கியம்

வகுப்பின் இடையிடையில் மணி அண்ணாவிற்கும் ஜாஜா அண்ணாவிற்கும்  நடக்கும் சைவ வைணவ ஊடல்கள் சுவாரஸ்யமாக இருந்தன

வகுப்புகள் முடிந்து இல்லம் திரும்பியபிறகு நாராயணன் என் மனதில் புதியதொரு ஆசனத்தில் அமர்ந்திருந்தார். திருவரங்கத்து கருவறையில் அத்தனை பக்கத்தில் இருந்தும் தொடமுடியாத, இரு சுவரையும் அடைத்துக்கொண்டு படுத்திருக்கும் நீண்ட கரிய நெடியோனாக இருந்தவனை இன்று என் வீட்டில் வளரும் அணுக்கமான மழலையாக உணர்கிறேன். சற்று எட்டினால் சுட்டு விரலை பிடித்துக் கொள்வான் போலும். நிறைய பாசுரங்களை வீட்டிற்கு வந்தும் வசித்து கொண்டிருக்கிறேன். புதிய பாசுரங்களுக்கு பொருள் தேடுகிறேன்.

உண்ணும் சோறும், பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்பதால் கொடுக்கப்பட்ட கருப்பட்டி மிட்டாய்யையும் கண்ணனாகவே கொள்கிறேன்.  

3 நாட்கள் முழுவதுமாக இதற்கு செலவிட்டு அமர்ந்து தியானமென கற்ற கல்வி ஒரு தவம். அதனை சாத்தியப்படுத்திய ஆசானாகிய உங்களுக்கும் ஜாஜா அண்ணாவிற்கும் ஆயிரமாயிரம் நன்றிகள்

மனோஜ்

திருவானைக்காவல்

முந்தைய கட்டுரைஎன் பெயர்
அடுத்த கட்டுரைஇஸ்லாமிய ஞானம்- கடிதம்