தெளிவாகச் சிந்தித்தல்

அன்புள்ள ஜெ..

தங்களின் பதில் ( என் பெயர்)தமிழுணர்வைப் பற்றிய தெளிவைத் தந்தது. சீடன் தயாராக இருக்கும்போது குரு வந்துவிடுவார் என்ற பதம் இங்கு தம்மபதமாகியது. நன்றிகள் என்பது குருவிற்கு உரியதன்று. அது பணிதல் மூலம் சாத்தியப்படுத்தலாம். நான் பிறப்பால் பரம ஏழை. ஏகலைவன் போல. உங்களை எப்போதும் பணிவேன். முன்பும் இனியும்.

நான் ஒரு தொழில் நுட்பவாதி அல்லது பொறியாளன்.மனித இனம் வேட்டையாடுவதற்கு ஆயுதம் கண்டுபிடித்த அந்த முதல் நிகழ்வே பொறியாளன் பிறந்தான், இது கவிஞர்கள் தோன்றுவதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னமே நடந்தது.  மனிதன் சக்கரம் தோற்றுவித்த அந்தத்தருணம் மனித நாகரீகத்தின் தொடக்கப்புள்ளியாக இன்றும் கொண்டாடப்படுகிறது. மனிதனின் மனத்தினுள் முதலில் தோன்றியது பொறியியல் நுட்ப அறிவே அன்றி இலக்கியமோ, விளையாட்டுத் துறையோ அல்ல.

ராஜராஜ சோழன் ஒரு பட அதிபர் போல ஒரு கோவில் தயாரிப்பாளர்.அவ்வுளவே. ராஜராஜ சோழனை உலகம் கொண்டாடுகிறது. ஆனால் அதைக்கட்டிய  திட்டம் தீட்டிய அந்த பொறியியல் நுட்ப அறிவு யாருடையதென்றே தெரியாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதோ என ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.  கோவிலையும், கட்டிய அரசனையும் கொண்டாடும் ஏன் கோவிலை வைத்து எழுதப்படும் இலக்கியவாதியையும், கவிஞனையும் புகழின் உச்சத்தில் வைக்கும் உலகம், தொழில்நுட்பவாதியை நினைத்துப்பார்க்க்க்கூட தயாரில்லாத நிலையை என்னவென்பது. இந்த உலகம் எங்களைப்போன்ற பொறியாளர்களால் மட்டுமே இயக்கப்படுகிறது என்பதுதானே இயல்பு.

இலக்கியவாதிகள், விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு ஆகிய துறைகளைச் சார்ந்த அளவுக்கு ஒரு பொறியாளன் கொண்டாடப்படுவதில்லை.  இந்த உலகம் சாக்ரடீசயோ, ராஜராஜ சோழனையோ அல்லது கம்பனையோ, சமகாலத்தில் மகேந்திர சிங் தோனியையோ அல்லது கோலியையோ கொண்டாடும் உலகம், அலைபேசியை, அதற்குள் புகுத்தப்படும் மனிதனின் எண்ணங்களை விரிவுபடுத்தும் அல்லது வேலையை சுலபமாக்கும் கண்டுபிடித்த அல்லது புல்லட் ரயில், இனிமேல் வரப்போகும் ஹபர்லூப் ரயில் ஆகியவற்றின் மூலகாரணியனை,1947ல் 30 கோடி பேருக்கே உணவுப் பற்றாக்குறையால் கை ஏந்திய  இந்தியா இன்று 2024ல் 140+ கோடி மக்களுக்கும் போக ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்த்தக் காரணமான அந்தப் பொறியாளனை உதாசீனம் செய்கிறது.  எங்கோ ஒரு சமூக அக்கறையுள்ள ஒரு பொறியாளன்/விஞ்ஞானியின் கைங்கர்யம் இல்லாமல் இது சாத்தியமே இல்லை. ஏன் நீங்கள் இன்று பணியுரியும் திரைத்துறையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கமலஹாசனை / ஏஆர் ரஹ்மானைக்கொண்டாடும் உலகம் அதனைக் கண்டுபிடித்தவனைக் கொண்டாடக்கூட வேண்டாம் அறியக்கூட ஆர்வம் காட்டுவதில்லை.

பாரதியைப் பட்டினி போட்டு வேடிக்கை பார்த்தது என்று பழிக்கும் இவ்வுலகம் டன்லப் என்ற ரப்பரில் வல்கனைசிங் என்ற தொழில் நுட்பத்தைக் கண்டு பிடித்தவரும்கூட பட்டினியால் மாண்டுபோனார் என்பதை அறியக்கூட முற்படுவதில்லை.நானும் கூட எனது நிறுவனத்தில் ஏதாவது எனது எந்திரங்களில் புதுமை செய்து / கண்டுபிடித்து அதன்மூலம் ஆட்குறைப்பு, மின்சேமிப்பு, வேலை எளிதாக்குதல் மூலம் எனது ஆலை நிறுவனர் மாதம் ஒன்றிற்கு பல லட்சங்கள் பயனடைந்தாலும், எனது வருட ஊதிய உயர்வில் சில ஆயிரங்களைக்கூட அதில் பங்கு தருவதில்லை. திறமையாளன் என்ற ஒற்றை வாக்கியம் அதற்க்கான சான்றிதழ் அவ்வுளவே!.

ஆனால் பல இலக்கியவாதிகள், கவிஞர்கள் தங்களை இவ்வுலகம் கொண்டாடுவதில்லை என ஏங்கிப்பெருமூச்சு விட்டு ஓலமிடும் ஓசைகள் ஓங்கி ஒலிக்கும்போது எந்தப்பொறியாளனும் இதனை சட்டை செய்யாமல் கடந்து போவது ”பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு” என்ற குறள் என் நினைவில் நிழலாடுகிறது. நிறைகுடங்கள் தழும்புவதில்லையோ?. அல்லது இலக்கியவாதி உணர்ச்சிக்கு அடிமையானவன் எனும் உளவியல் அடிப்படையா?

பணிவன்புடன்
த. குமார்
ராஜபாளையம்.

அன்புள்ள குமார்,

நீங்கள் எழுதியிருக்கும் இக்கடிதத்தை வாசித்தேன். முந்தைய கடிதத்திலும் சரி, இக்கடிதத்திலும் சரி உங்கள் உணர்ச்சிகளே உள்ளன. அவற்றுக்கு அடிப்படையான எண்ணங்களை நீங்கள் தெளிவுற உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

நம் உணர்ச்சிகளை நாம் நம் வாழ்க்கையை ஒட்டி, நம் அன்றாட எண்ணங்களை ஒட்டி மட்டுமே உருவாக்கிக் கொள்ளக் கூடாது. நம் சிந்தனைகளை கூடுமானவரை தகவல்கள் சார்ந்து அமைக்கவேண்டும். அந்த தகவல்கள் வரலாற்றிலும், அரசியலிலும், தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் பெருகிக்கிடக்கின்றன.

உங்கள் கடிதத்தை மட்டுமே பார்ப்போம். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய சிற்பியின் பெயர் குஞ்சரமல்லன். அவருக்கு அரசரின் பட்டம் அளிக்கப்பட்டது. ராஜராஜப்பெருந்தச்சன் என அவர் சிறப்பிக்கப்பட்டார். இது செய்தி. சோழர் காலம் சிற்பிகளின் பொற்காலம். அவர்களுக்கு தனிச் சலுகைகளும், சமூகத்தில் உயர்ந்த இடமும் அளிக்கப்பட்டது.

இன்றும் தொழில்நுட்பத்திறனே முதன்மையாக எங்கும் மதிக்கப்படுகிறது. அந்த தொழில்நுட்பத்திறன் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டிருக்கவேண்டும். அதற்கு வணிக மதிப்பு இருக்கவேண்டும். அது பிற தொழில்நுட்பங்களைவிட மேலானதாக இருக்கவும் வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் ஊதியம் என்பது ஒரு பேரம்பேசுதலின் விளைவு. ஒரு தொழில்நுட்பம் லாபம் அளிப்பதாக இருந்தால் அதை வைத்து பேரம்பேசி தனக்கான ஊதியத்தை அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியவன் அடையலாம். அதுதான் இயல்பான வழி. மிகச்சிறு கண்டுபிடிப்புக்கு ‘ராயல்டி’ ஆக கோடிக்கணக்காக இன்று சம்பாதிக்கிறார்கள்.

இன்று உள்ள தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்த அனைவரு பெயரும் வரலாற்றில் உள்ளது. பாடங்களில் உள்ளது. எவரும் மறக்கப்படவில்லை. மறக்கட்டார்கள் என்பதெல்லாம் உங்களுக்கு தோன்றும் மாய எண்ணங்களே.

அத்துடன் இறுதியாக ஒன்று, தொழில்நுட்பம் அல்ல மனிதனை இயக்குவது. அதற்கு அடிப்படையில் இருப்பது சிந்தனை. சிந்தனையை உருவாக்குவது மொழி. ஆகவேதான் மொழி முக்கியமாக கருதப்படுகிறது. மொழி உருவான பின்னரே மனிதன் இணைந்து ஒரு சமூகமாக ஆனான். உறவுகளை உருவாக்கிக் கொண்டன். சரிதவறுகள, அறங்களை உருவாக்கிக்கொண்டான்

இவற்றை விவாதிப்பதற்காக எழுதவில்லை. நீங்கள் எனக்கு எழுதினீர்கள் எனபதே நீங்கள் எவ்வகையிலோ சிந்திக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பதற்கான சான்று. தொடர்ச்சியாக வாசியுங்கள். சிந்தனையை மேம்படுத்திக்கொள்ளுங்கள்

ஜெ

 

 

 

முந்தைய கட்டுரையோகத்தின் இன்றைய தேவை என்ன?
அடுத்த கட்டுரைகுருபூர்ணிமா, கடிதம்