அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கங்கள்.
அலாவுதீனும் அற்புதவிளக்கும் கதையில் அலாவுதீனின் கை தீண்டலால் பூதம் வெளிப்பட்டு அவன் வாழ்க்கையை மாற்றி அமைத்து விடுகிறது. வாசிப்பு பயிற்சியில் கலந்து கொண்ட பின், புத்தகங்களை பார்க்கும் போது, அவை அனைத்தும் வாசகனின் கற்பனை தீண்டலுக்கு காத்திருக்கும் விளக்குகளாக தோன்றின.
பயிற்சியின் போது நீங்கள் அளித்த காந்திய கொள்கைகளை பற்றிய கட்டுரையில் காந்தியத்தின் சாராம்சமாக வருவது எந்த சிந்தனையும் அதில் ஈடுபடுபவனை சிறந்த மனிதனாக ஆக்க வில்லையெனில் அது பயனற்றதே. அதே போல் இந்த வகுப்பின் சாரமாக எந்த ஒரு வாசிப்பும் வாசகனுடைய சிந்தனையை ஆழப்படுத்தவில்லையெனில் அதற்கென ஒதுக்கும் நேரமும் உழைப்பும் வீணே என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும், வாசிக்கும் போது நாமறியாமல் செய்யகூடிய பிழைகளை சுட்டிக்காட்டி அதை களைந்து , வாசிப்பை மேலும் எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது என்பதையும் கற்றுக்கொடுத்தீர்கள்.
வகுப்பிற்கு பின் காந்தீயம் பற்றிய மாதிரி கட்டுரையை நினைவில் மீண்டும் மீட்டுக் கொள்ள முயன்றபோது சற்று எளிதாகவே இருந்தது. முயற்சியை தொடரவேண்டும்.
குரு பூர்ணிமா :
சென்ற முறை வாய்ப்பை தவற விட்டதால். இந்த முறை காத்திருந்து அறிவிப்பு வந்தவுடன் உடனடியாக பதிவு செய்து கொண்டேன்.
மாலை வகுப்பில், குரு என்பவன் தனி மனிதனல்ல. இதுவரை சேகரமான சேகரமாகிக்கொண்டிருக்கும் ஞானப்பெருக்கின் துளி அதன் ஒரு முகம் என்றபோது நாராயண குருவின் முன் வ்யாஸனின் முன் அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. மேலும் தேடல் உள்ளவர்களுக்கு உடலும் உயிருமாய் இருப்பவர்களே குருவாகி வழி காட்டமுடியும் காலஞ்சென்ற குருக்களின் பிம்பங்கள் அல்ல என்பதை வலியுறுத்தினீர்கள்.
இந்திய மறுமலர்ச்சிக்கான விதை ஒரு காளி கோவில் பூசாரியிடம் இருந்து வந்தது என்றுரைத்தபோது, இந்த ஞானப்பெருக்கின் விரிவை உணர்ந்து கொள்ள முடிந்தது.
நிறைவாக, மகுடத்தில் “இந்திரநீலமென” master கைகளினால் அவரின் master piece பரிசாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு குரு பூர்ணிமா அன்று நிகழ்ந்தது அந்த நாளை முழுமையானதாக்கியது.
அன்பும் நன்றிகளும்
விஜயசேகர்